Published : 16 May 2024 12:26 PM
Last Updated : 16 May 2024 12:26 PM
கோவை: மோசமான வானிலை நிலவும் நேரங்களில் துபாயில் இருந்து வரும் விமானங்கள் கோவைக்கு திருப்பிவிடப்படுகின்றன. எனவே, கோவையில் இருந்து துபாய்க்கு விமான சேவை தொடங்க மத்திய அரசு உதவ வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் இருந்து துபாய்க்குவிமான சேவை தொடங்கினால் அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவை எளிதில் கிடைக்கும் என்பதால் கோவை தொழில் அமைப்புகள் சார்பில் 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது வரை சேவை தொடங்கப்படவில்லை. ஓடுபாதை நீளம் அதிகரிக்காதது ஒரு காரணமாக கூறப்பட்டது.
இந்நிலையில், மோசமான வானிலையால் திருப்பிவிடப்படும் விமானங்கள் கோவையில் எளிதில் தரையிறங்கி, புறப்பட்டு செல்கின்றன. நேற்று முன்தினம் கோழிக்கோட்டில் இருந்து திருப்பிவிடப்பட்ட துபாய் விமானங்கள் கோவையில் தரை இறங்கின.
இதுகுறித்து தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) முன்னாள் தலைவர் ரவிசாம், கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பின் இயக்குநர் நந்தகுமார் ஆகியோர் கூறியதாவது:
கொச்சி, கோழிக்கோடு, பெங்களூரு போன்ற விமான நிலையங்களில் மழை, புயல் உள்ளிட்ட மோசமான வானிலை நிலவும் நேரங்களில் துபாய் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்படுகின்றன.
கோவை விமான நிலையத்தில் தற்போதைய ஓடுபாதையில் ‘நேரோ-பாடி’ என்று சொல்லக்கூடிய ரகத்தை சேர்ந்த வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களை எளிதில் கையாள முடியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இருந்தபோதும் கோவை - துபாய் இடையே விமானசேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவை வைக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்கது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நினைத்தால் உடனடியாக சேவையை தொடங்க முடியும். எனவே, சேவையை தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் கூறும் போது, “கோவை விமான நிலையத்தில் தற்போதைய ஓடுபாதையில் அனைத்து ரக விமானங்களையும் கையாள முடியும்.
கோவையில் தினமும் 25-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மோசமான வானிலை காரணமாக வேறு விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் திருப்பிவிடப்பட்டாலும், அவசர கால தேவைக்காக தரையிறங்க அனுமதி கேட்டாலும் உடனடியாக உதவும் வகையில் விமான நிலையம் தயார் நிலையில் உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT