Published : 11 May 2024 06:15 AM
Last Updated : 11 May 2024 06:15 AM

சிறுமலை அடிவார பகுதியில் காய்த்து குலுங்கும் திராட்சை - சிறப்பு அம்சம் என்ன?

சிறுமலை அடிவாரம் வெள்ளோடு கிராம பகுதியில் விளைந்துள்ள திராட்சை பழங்கள். | படம்: நா.தங்கரத்தினம் |

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரப் பகுதிகளில் திராட்சை பழங்கள் காய்த்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை மழை இல்லாததால் திராட்சைப் பழங்கள் உதிர்வது, பழத்தில் வெடிப்பு ஏற்படுவது போன்ற பாதிப்பு இல்லாமல் முழுமையாக அறுவடை செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் முதல் கொடை ரோடு வரை சிறுமலை அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களான வெள்ளோடு, நரசிங்கபுரம், கோம்பை, ஜாதிக் கவுண்டன்பட்டி, காந்திகிராமம், அம்பாத்துறை, அமலி நகர், ஊத்துப்பட்டி, மெட்டூர் உள்ளிட்ட மலையடிவாரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பந்தல் அமைத்து திராட்சை பயிரிட்டுள்ளனர்.

திராட்சை விளைச்சலுக்கு அளவான தண்ணீர் போதும். மழை எப்போதும் பாதிப்பைத் தரும். மழை பெய்வதால் பழங்களில் நீர்கோர்த்து வெடிப்பு ஏற்பட்டுச் சேதத்தை விளைவிக்கும். இதனால் பழங்கள் கொடியில் இருந்து உதிர்ந்துவிடும். மேலும் தரமான பழங்கள் விளைச்சல் இருக்காது. விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

வழக்கமாக, ஏப்ரல் முதல் ஜூன் வரை கோடைகாலத்தில் திராட்சை விளைச்சல் அதிகம் இருக்கும். அந்த மாதங்களிலும் திடீரென பெய்யும் கோடைமழை திராட்சைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதுகுறித்து திராட்சை பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது: இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கோடை மழை பெய்யவில்லை. இதனால் திராட்சை விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. மழை பெய்தால் விளைந்துள்ள பழங்கள் பாதிக்கு மேற்பட்டவை சேதமடைந்து விடும்.

இதனால் வருவாய் இழப்பு ஏற்படும். தற்போது அறுவடை சீசனில் கோடைமழை பெய்து சேதம் விளைவிக்காததால் திராட்சை பழங்களை முழுமையாக அறுவடை செய்து வருகிறோம்.

கடந்த ஆண்டு ஒரு கிலோ திராட்சை ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையான நிலையில் தற்போது விளைச்சல் அதிகரிப்புக்கு ஏற்ப வெயிலின் தாக்கத்தால் தேவையும் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ ரூ.80 முதல்ரூ.100 வரை விற்பனையாகிறது. இதனால் வருவாய் அதிகரித் துள்ளதால் திராட்சை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர், என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x