Last Updated : 24 Apr, 2024 04:10 AM

 

Published : 24 Apr 2024 04:10 AM
Last Updated : 24 Apr 2024 04:10 AM

செயற்கை முறையில் பழுக்க வைத்து மாம்பழம் விற்றால் கடும் நடவடிக்கை: அதிகாரிகள் எச்சரிக்கை

பிரதிநிதித்துவப் படம்

ஓசூர்: செயற்கை முறையில் பழுக்க வைத்து மாம்பழம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்திலேயே அதிகளவில் மா விளையும் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம். இப்பகுதியில் விளையும் மாம்பழங்கள் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற் பனைக்கு அனுப்புகின்றனர். அதே போல் மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு போதிய மழையின்மை காரணமாக மா விளைச்சல் பாதிக்கப்பட்டு மாம்பழம் சீசன் தாமதமாக தொடங்கி உள்ளது. தற்போது செந்தூரா, மல்கோவா போன்ற மாம்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன.

மற்ற ரக மாம்பழங்கள் அடுத்த மாதம் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஓசூர் நகரப் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிடுகின்றனர். இதில் சில மாம்பழங்கள் நன்கு நிறமாக உள்ளதாகவும், ஆனால் சுவை இல்லை எனவும் இது போன்ற பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: காய் பருவத்தில் பறிக்கப்படும் மாங்காய்கள் இயற்கையாக பழுக்க சுமாா் ஒரு வார காலம் ஆகும். ஆனால் மாங்காய்களை 2 நாளில் பழுக்க வைக்க ‘கால்சியம் காா்பைடு’ என்ற ரசாயனக் கல்லை வியாபாரிகள் பயன்படுத்துகின்றனா். இந்த முறையில் பழுக்க வைத்த பழங் களை உண்பவா்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

தற்போது ‘கால்சியம் காா்பைடு’ கல் மூலம் பழுக்க வைக்கும் பழங்களை அதிகாரிகளும், நுகா்வோரும் எளிதில் கண்டறிவதால், வியாபாரிகள் சிலா் ‘எத்திலின்’ என்ற ரசாயனப் பொடி மூலம் பழங்களை பழுக்க வைக்கின்றனா். இந்தப் பொடியை தண்ணீரில் கரைத்து பழங்கள் மீது தெளிக்கின்றனா். இந்த பொடியிலிருந்து எந்த வாசனையும் வருவதில்லை. இதனால், பழங்களை செயற்கையாக பழுக்க வைத்ததா எனக் கண்டறிய முடிவதில்லை.

பழங்களை பழுக்க வைக்க ஒரு குறிப்பிட்ட அளவுக்கு எத்திலின் வாயு பயன்படுத்தலாம் என உணவுப் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் எத்திலினை பொடியாகவோ, தண்ணீரில் கலந்தோ பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை. எனவே இதுபோன்ற மாம்பழங்களை விற்பனை செய்யும் பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினார்.

இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கூறியதாவது: மாம்பழங்கள் முழுமையாக ஒரே நிறமாக இருந்தால் அதில் அதிக ரசாயனப் பொடி வைத்து பழுக்க வைத்த மாம்பழம். அப்படி சந்தேகம் இருந்தால் மாம்பழங்களை தண்ணீரில் போட்டால் தண்ணீருக்குள் மூழ்கினால், இயற்கையாக பழுத்த பழம். தண்ணீரில் மாம்பழம் மிதந்தால், அவை செயற்கையாக பழுக்க வைத்த பழம் என பொதுமக்கள் சுலபமாக தெரிந்துள்ளலாம்.

அதே போல் இயற்கை முறையில் மாம்பழம் பழுக்க வைக்க வேளாண் துறையினர் பல்வேறு ஆலோசனை வழங்கு கின்றனர். அவர்களிடம் உரிய ஆலோசனை பெற்று பழங்களை பழுக்க வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ரசாயனப் பொடி கலந்த மாம்பழங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x