Last Updated : 04 Apr, 2024 03:07 PM

 

Published : 04 Apr 2024 03:07 PM
Last Updated : 04 Apr 2024 03:07 PM

கோவை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டம் ஏப்ரல் 2-வது வாரத்தில் தொடக்கம்

நீண்ட வரிசை மற்றும் பேப்பர் பயன்பாடு தவிர்க்க உதவும் வகையில் கோவை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுவரும் ‘டிஜி யாத்ரா’ பிரத்யேக திட்ட கருவிகள். படம்: ஜெ.மனோகரன்.

கோவை: கோவை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டம் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இதனால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதும், பேப்பர் பயன்பாடும் தவிர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விமான பயணிகளின் வசதிக்காக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் ‘டிஜி யாத்ரா’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி, ஹைதராபாத், கொல்கத்தா, விஜயவாடா, புனே, மும்பை, கொச்சி, அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், கவுஹாத்தி விமான நிலையங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் விரைவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் கூறியதாவது: பொதுவாக பயணிகள் ‘போர்டிங் பாஸ்’ பெற விமான நிலைய வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை எளிதாக்கவும், டிஜிட்டல்மயமாக்கும் நோக்கத்திலும் மத்திய சிவில் விமான போக்கு வரத்து அமைச்சகம் சார்பில் ‘டிஜி யாத்ரா’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் இதை பதிவிறக்கம் செய்து, ஆதார் உள்ளிட்ட தங்களின் பயண விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதன் மூலம் விமான நிலைய நுழைவுவாயில் முதல் விமானம் ஏறும் பகுதி வரை வரிசையில் அதிக நேரம் காத்திருக்காமல் செல்ல முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் தனிநபர் மற்றும் உடைமை சோதனைகளை மட்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உடைமைகள் எதுவும் இல்லையெனில் நேராக உள்ளே செல்ல முடியும்.

இந்த திட்டத்தின் நோக்கமே வேகமாகவும், பேப்பர் பயன்பாடு இல்லாமலும் பயணிகளுக்கு வசதி ஏற்படுத்தி தருவதே ஆகும். முதல்கட்டமாக கோவை விமான நிலையத்தில் உள் நாட்டு பிரிவில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்.ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இத்திட்டம் தொடங்கப் படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘டிஜி யாத்ரா’ செயலியை பயன்படுத்துவது எப்படி? - பயணிகள் முதலில் ‘டிஜி யாத்ரா’ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் மொபைல் எண், போர்டிங் பாஸ், ஆதார், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்தால் பிரத்யேக ‘கியூ ஆர் கோடு’ கிடைக்கும். அதை வைத்து விமான நிலையத்தில் தனியாக ஏற்படுத்தப்பட்ட வழியில் உள்ள டிஜிட்டல் கருவியில் மொபைல் போனை காண்பித்து உடனடியாக செல்லலாம். மொபைல் போன் எண்ணுடன் ஆவணங்கள் அனைத்தும் லிங்க் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x