Published : 01 Mar 2024 04:08 AM
Last Updated : 01 Mar 2024 04:08 AM
பழநி: பழநியில் கொய்யா வரத்து மெல்ல அதிகரித்து வருவதால் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது.
பழநி, ஆயக்குடி, சட்டப்பாறை, அமரப்பூண்டி, சத்திரப்பட்டி, கோம்பைபட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 1,200 ஹெக் டேர் பரப்பளவில் லக்னோ-49 ரக கொய்யா சாகுபடி செய்யப் படுகிறது. இங்கு விளையும் கொய்யாவுக்கு தனி கிராக்கி உண்டு.
நாள்தோறும் 20 டன்: கொய்யாவுக்கென பிரத்யேகமாக, ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே திறந்த வெளியில் தனிச்சந்தை செயல் படுகிறது. இந்த சந்தையில் காலை 7 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் அனைத்து கொய்யாவும் விற்பனை செய்யப்பட்டு விடும். நாள்தோறும் 20 டன் கொய்யா விற்பனையாகும். இங்கிருந்து வெளி மாவட்டம், வெளி மாநில வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.
நேரடி விற்பனை என்பதால் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நாள்தோறும் அதிகளவில் வரு கின்றனர். தற்போது கொய்யா சீசன் ஆரம்பமான நிலையில் இருப்பதால், கடந்த சில நாட்களாக வரத்து அதிகம் உள்ளது. கடந்த மாதம் ஒரு பெட்டி கொய்யா ( 22 கிலோ ) ரூ.1,100 வரை விற்றது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்து,
விலையும் வீழ்ச்சி: நேற்று ஒரு பெட்டி ரூ.600 முதல் ரூ.700 வரை மட்டுமே விற்பனையானது. அதாவது, ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்றது. இங்கிருந்து வாங்கி செல்லும் வியாபாரிகள் வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கொய்யா சீசன் ஆரம்ப நிலையில் உள்ளது. அதனால் வரத்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, விலை யும் வீழ்ச்சி அடைந்துள்ளது. முழுமையான சீசன் தொடங்கி விட்டால் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது. பழநி ஆயக்குடியில் இருந்து வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு கொய்யா ஜூஸ், மிட்டாய் தயாரிக்க அதிகளவில் விற்பனைக்கு செல்கிறது. அதனால் விலை ஓரளவுக்கு கட்டுப்படியாகிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT