Published : 29 Feb 2024 04:02 AM
Last Updated : 29 Feb 2024 04:02 AM
ஈரோடு / மேட்டூர் / நாமக்கல்: வருமானவரி சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் 5,000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஜவுளி வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறு, குறு தொழில்கள் தங்களது வணிகக் கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் ( பிரிவு 43 பி ( எச் ) ) காரணமாக சிறு, குறு வணிக நிறுவனங்களின் இருப்பு நிலை குறிப்பு கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள், 45 நாட்களுக்கு மேலே சென்றிருந்தால், அவை வருமானமாக கருதப்பட்டு, அவற்றிற்கு வரி விதிக்கப்படும்.
இந்த சட்டத் திருத்தத்தால், ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் அல்லது ஓராண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈரோட்டில் ஜவுளி வணிகர்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு: ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் ஜவுளிக் கடைகள் அவை சார்ந்த கடைகள், நிறுவனங்கள் என 5,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் காரணமாக ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
விசைத்தறிகள் வேலை நிறுத்தம்: ஜவுளி வணிகர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நேற்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடந்தது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கவில்லை. இதனால், ரூ.7 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், ஜவுளி வணிகர்களின் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையும் அடைக்கப்பட்டு இருந்தது. ஜவுளி வணிகர்களின் கடையடைப்பு போராட்டத்துக்கு 20-க்கும் மேற்பட்ட சங்கங்கள், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்ததால், ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி சார்ந்த பணிகள் அனைத்தும் நேற்று முடங்கின.
எடப்பாடி, தேவூர்: இதுபோல சேலம் மாவட்டம் எடப்பாடி, தேவூர், பூலாம்பட்டி, மேச்சேரி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் நேற்று இயங்கவில்லை. இதனால், 4 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என எடப்பாடி வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்: இதே கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டார விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. இதனால், 1 லட்சம் தறிகள் நேற்று இயக்கப்படவில்லை.
இது தொடர்பாக சங்க நிர்வாகி முருகானந்தம் கூறும் போது, ‘‘வேலை நிறுத்தப் போராட்டத்தால் 30 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி மற்றும் ரூ.7 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. மத்திய அரசு இச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். முடியாத பட்சத்தில் சட்டத்தை ஓராண்டு நிறுத்தி வைக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT