Published : 29 Feb 2024 04:04 AM
Last Updated : 29 Feb 2024 04:04 AM

திண்டுக்கல் பகுதியில் கத்திரிக்காய் செடியில் நோய் தாக்குதலால் வருவாய் இழப்பு

பிரதிநிதித்துவப் படம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சுற்றுப்புற பகுதியில் கத்திரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நோய் தாக்குதலால் வருவாய் இழந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தோட்டக்கலைத் துறையினர் இதற்குத் தீர்வுகாண விரைவில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான பில்லம நாயக்கன் பட்டி, பெரிய கோட்டை, புகையிலைப்பட்டி, ஜம்புலியம்பட்டி, ராஜக்காபட்டி, சிலுவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் கத்திரிக் காய் சாகுபடி நடக்கிறது. கத்திரிக் காய் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒரு கிலோ ரூ.60 வரை விற்பதால் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்து வந்தது. இந்நிலையில் கத்திரி செடிகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால் போதிய காய்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

கத்திரிச் செடியில் அசுவனி பூச்சி தாக்குதல், தண்டு மற்றும் காய் துளைப்பான், சிகப்பு சிலந்தி, நூற் புழு என பல்வேறு உயிரினங்கள் தாக்குதல் ஏற்பட்டு காய்களில் ஓட்டை விழுவது, இலைகள் சுருங்குவது, செடிகள் கருகுவது என தொடர் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கருகல் நோய் மற்றும் காய் அழுகல் நோய், சிற்றிலை நோய் என கத்திரிக்காய் செடி பாதிப்புக்குள்ளாகி தரமான காய்களை அறுவடை செய்ய முடியாதநிலை உள்ளது.

இது குறித்து பில்லம நாயக்கன்பட்டி விவசாயிகள் கூறியதாவது: கத்திரிக்கு நல்ல விலை கிடைத்துவரும் நிலையில் நோய் தாக்குதலால் வருவாய் இழந்து வருகிறோம். இது குறித்து திண்டுக்கல் வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வயல்களில் நேரில் ஆய்வுசெய்து செடிகளை பூச்சிகள், புழுக்கள் பாதிப்பில் இருந்து காப்பாற்றி மீண்டும் பழைய நிலைக்கு விவசாயிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x