Published : 14 Feb 2024 06:38 AM
Last Updated : 14 Feb 2024 06:38 AM
புதுடெல்லி: உலகில் பருப்பு வகைகளின் உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச பருப்பு கூட்டமைப்பின் தலைவர் விஜய் ஐயங்கார் கூறினார்.
டெல்லியில் பருப்பு வகைகளுக்கான சர்வதேச மாநாடு (Global meet on pulses) இன்று தொடங்குகிறது. வரும் 17-ம் தேதி வரை 4 நாட்களுக்கு இந்த மாநாட்டில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 800 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டை சர்வதேச பருப்பு கூட்டமைப்பும் (ஜிபிசி) தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பும் (நாஃபெட்) இணைந்து நடத்துகின்றன.
துபாயை தலைமையிடமாகக் கொண்டு ஜிபிசி செயல்படுகிறது. இது, கடந்த 1962-ல் லாப நோக்கமற்ற அமைப்பாக தொடங்கப்பட்டது. பயிர் செய்யும் விவசாயி முதல் நுகர்வோர் வரை அனைத்து பிரிவினரையும் ஒரு தொடர் சங்கிலியாக இது இணைக்கிறது. பயிரிடுவோர், ஆராய்ச்சியாளர்கள், வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், அரசு அமைப்புகள், சர்வதேச அமைப்புகள், பதப்படுத்துவோர், பேக் செய்வோர் மற்றும் நுகர்வோர் இதில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 600 தனியார் நிறுவனங்கள் மற்றும் 20 தேசிய பருப்பு வகைகளின் சங்கங்கள் உள்ளன.
பருப்பு வகைகளின் முக்கியத் துவத்தை சர்வதேச அளவில் எடுத்துரைக்கவும், அதன் சந்தையை விரிவுபடுத்தவும் பல்வேறு நாடுகளில் மாநாடுகளை ஜிபிசி நடத்தி வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்த மாநாடு நடைபெற்றது. இதையடுத்து பருப்பு வகைகளுக்கான சர்வதேச மாநாடு டெல்லியில் இன்று முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சிங்கப்பூர் தொழிலதிபரும் ஜிபிசி.யின் தலைவருமான விஜய் ஐயங்கார் கூறியதாவது:
உணவு முறையில் பருப்பு வகைகளுக்கு நீண்டகாலமாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கு இந்த பருப்பு வகைகளுக்கு இன்றியமையாத இடம் உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகள் முன்வைக்கும் கருத்தை வைத்து இந்திய அரசு பருப்பு வகைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
பருப்பு வகைகளை எதிர்வரும் நீண்ட காலத்திற்கு ஒரு ஸ்மார்ட் பயிராக உயர்த்தும் பணியில் ஜிபிசி தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. பருப்பு வகைகளின் உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரிக்கவும் ஜிபிசி தீவிரம் காட்டுகிறது. இதன்மூலம், எதிர்வரும் காலங்களில் தட்பவெப்பநிலை மாற்றத்தின் தாக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, உணவுப் பாதுகாப்பு குறைவு ஆகியவைநீக்கப்படும்.
இந்த முயற்சிக்கான அமெரிக்காவின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமானது 2016-ம் ஆண்டை சர்வதேச பருப்பு வகைகளின் ஆண்டாக அறிவித்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10-ம் தேதியை சர்வதேச பருப்பு வகைகள் நாளாக கொண்டாடுவது என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2023-ல் சர்வதேச பருவநிலை மாற்ற மாநாட்டை ஐக்கிய நாடுகள் சபை நடத்தியது,
அப்போது பருவநிலை மாற்றத்தால் பருப்பு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளை ஐ.நா.வின் கவனத்துக்கு ஜிபிசி எடுத்துச் சென்றது. இதனால், அந்த மாநாட்டின் கருத்தரங்குகளிலும், பல விவாதங்களிலும் பருப்பு வகைகள் மீதான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
தற்போது டெல்லியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், உலக அளவிலான முக்கிய பேச்சாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதன் பலனாக பருப்பு வகைகளுக்கு நீண்டகால பலன்கள் கிடைக்கும். பருப்பு வகைகளின் சர்வதேச அளவிலான கண்டுபிடிப்புகள் மற்றும் பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படும் மேடையாகவும் இந்த மாநாடு அமையும். இந்தியாவில் பருப்புவகைகள் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. ஆனால் பல்வேறு தனியார் நிறுவனங்களால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாகப் பருப்பு வகைகளுக்கு உணவில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசும் பருப்பு வகைகளை பயிர்செய்ய கூடுதல் முக்கியத்துவம் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநாட்டில் மத்திய அரசு சார்பில் வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, நுகர்வோர் அமைச்சர் பியூஷ் கோயல், நுகர்வோர் துறை செயலர் ரோஹித் குமார் சிங், வேளாண் துறை செயலர் மனோஜ் அகுஜா, வெளிநாட்டு வர்த்தகத் துறை பொது இயக்குநர் சந்தோஷ் குமார் சாரங்கி, கூட்டுறவுத் துறை செயலர் ஆஷிஷ் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT