Published : 10 Feb 2024 06:19 AM
Last Updated : 10 Feb 2024 06:19 AM
கோவை: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்று தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித் தொழில் துறை திகழ்கிறது.
பருத்தி போன்ற முக்கிய மூலப் பொருட்களின் விலையில் ஸ்திரத்தன்மை இல்லாதது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை இழைகளுக்கு தரக் கட்டுப்பாடு என்ற பெயரில் நெருக்கடி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக இந்த நிலை நீடிப்பதால், ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருந்து 6-இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதலிடத்தில் சீனா, 2-ம் இடத்தில் வங்கதேசம், 3-ம் இடத்தில் வியட்நாம், 4-ம் இடத்தில் இத்தாலி, 5-ம் இடத்தில் ஜெர்மனி, 6-வது இடத்தில் இந்தியா உள்ளது. 7, 8, 9, 10 இடங்களில் முறையே துருக்கி, அமெரிக்கா, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியா தொடர்ந்து ஜவுளித்தொழில் வளர்ச்சியில் பின்னடைவை சந்தித்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் (சைமா) தலைவர் டாக்டர் சுந்தரராமன், இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (சிட்டி) முன்னாள் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
இந்திய ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. எனினும், மூலப் பொருட்கள் விலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜவுளித் தொழில் சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் சராசரியாக மாதந்தோறும் 120 மில்லியன் கிலோ நூல் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், 2022 ஏப்ரலில் தொடங்கி சில மாதங்கள் 30 முதல் 50 மில்லியன் கிலோ என்ற அளவுக்கு கணிசமாக நூல் ஏற்றுமதி குறைந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் மாதாந்திர நூல் ஏற்றுமதி 120 மில்லியன் கிலோ என்ற அளவை நெருங்கிய நிலையில், மீண்டும் தற்போது 100 மில்லியன் கிலோவுக்கும் கீழ் குறைந்துள்ளது.
இன்றைய சூழலில் 200 மில்லியன் கிலோ என்ற அளவில் மாதந்தோறும் நூல் ஏற்றுமதி இருக்க வேண்டும். பருத்தி போன்ற முக்கிய மூலப் பொருட்களின் விலையில் ஸ்திரத்தன்மை இல்லாதது, இந்திய ஜவளிப் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதற்கு முக்கியக் காரணமாகும்.
இதுதவிர, செயற்கை இழைகளை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய, தரக் கட்டுப்பாடு என்ற பெயரில் கடும் நிபந்தனைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மறுபுறம், வங்கதேசத்துக்கு இந்தியா அளித்து வரும் சலுகைகளைப் பயன்படுத்தி, சீனா ஜவுளிப்பொருட்களை வங்கதேசம் வழியாக அதி அகளவு இந்திய சந்தைக்கு அனுப்பி வருகிறது. செயற்கை இழைகளுக்கு தரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்று இறக்குமதி செய்யப்படும் சீன ஜவுளிப் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்திய ஜவுளித் தொழில் மீண்டும் சிறப்பான வளர்ச்சியைப் பெற பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத இறக்குமதி வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.
ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து நாடுகளுடன் விரைவில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். ஏற்கெனவே இந்த ஒப்பந்தங்களை அமல்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு, இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் விரைவில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். செயற்கை இழைகளுக்கு விதிக்கப்படும் தரக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT