Published : 06 Feb 2024 06:27 PM
Last Updated : 06 Feb 2024 06:27 PM
தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் போதிய மழையின்மை, பற்றாக்குறையான தண்ணீர், பூச்சித் தாக்குதலால் நெல் மகசூல் குறைந்ததால், அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.12 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால் நிகழாண்டு குறுவை பருவத்தின்போது போதிய தண்ணீர் இல்லாததால் அக்டோபர் மாதமே மேட்டூர் அணை மூடப்பட்டது. இதனால் இருந்த தண்ணீரை வைத்து குறுவை அறுவடையை விவசாயிகள் முடித்தனர். அதே நேரத்தில் சம்பா சாகுபடிக்கு மழை கைகொடுக்கும் என நம்பி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால் போதிய மழை பெய்யவில்லை. மேலும், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பெய்த மழையால், வடிகால் வசதியின்றி வயலில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆனால், போர்வெல் மூலம் விவசாயிகள் ஓரளவுக்கு சம்பா சாகுபடியை மேற்கொண்டாலும், சீதோஷ்ண நிலையின் மாற்றத்தால் புகையான், குருத்துப்பூச்சி தாக்குதலால் நெல் மகசூல் பாதிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 1,400 கிலோ முதல் 1,600 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஆனால் நிகழாண்டு போதிய மழையின்மை, பற்றாக்குறையான தண்ணீர், பூச்சித் தாக்குதலால் ஏக்கருக்கு 1,000 கிலோ முதல் 1,300 கிலோ வரை மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது.
குவிண்டால் ரூ.2,265: டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல்லை அரசே கொள்முதல் செய்கிறது. நிகழாண்டு ஒரு குவிண்டால் நெல் ரூ.2,265-க்கு விற்பனையாகிறது. இது கடந்தாண்டை ஒப்பிடும்போது கிலோவுக்கு ரூ.6 அதிகம் ஆகும். மேலும், மகசூல் குறைந்துள்ளதால், வியாபாரிகள் களத்து மேட்டுக்கே சென்று விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்கின்றனர். சாகுபடி பரப்பு குறைவு, மகசூல் குறைவு போன்ற காரணங்களால் அரிசி கிலோவுக்கு ரூ.12 வரை அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரிசி கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.50-க்கு விற்ற சன்னரகம் ஆர்என்ஆர் டீலக்ஸ் அரிசி, தற்போது ரூ.62-க்கு விற்பனையாகிறது. இதேபோல, கர்நாடகா பொன்னி, ஆந்திரா பொன்னி உள்ளிட்ட அனைத்து ரக அரிசிகளும் கிலோவுக்கு ரூ.12 வரை விலை உயர்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கூடுதல் விலைகொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மகசூல் 40 சதவீதம் குறைவு: இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுந்தர விமல்நாதன் கூறும்போது, ‘‘டெல்டா மாவட்டத்தில் போதிய மழையின்மை, பற்றாக்குறையான தண்ணீர், பூச்சித்தாக்குதலால் நெல் மகசூல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் தனியார் வியாபாரிகள் 62 கிலோ கொண்ட ஒரு மூட்டையை ரூ.1,750 வரை கொள்முதல் செய்கின்றனர். நெல் விலை உயர்வால் அரிசி விலையும் உயர்ந்துள்ளது’’ என்றார்.
அரிசி மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் கூறும்போது, ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 30 சதவீதம் தான் அறுவடையாகியுள்ளது. அதே நேரத்தில் இந்தாண்டு மகசூலும் குறைந்துள்ளது. இதனால் நெல் விலை கிலோவுக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளதால், அரிசியும் கிலோவுக்கு ரூ.12 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT