Published : 04 Feb 2024 04:14 AM
Last Updated : 04 Feb 2024 04:14 AM
திருச்சி: திருச்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டு வந்த 14 மாடிகளைக் கொண்ட மிக உயரமான குடியிருப்பு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் திருச்சி மன்னார்புரத்தில் அரசு ஊழியர்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்குவதற்காக 15 மாடிகளுடனும், வரகனேரி பகுதியில் உயர் வருவாய் பிரிவினருக்கு விற்பனை செய்வதற்காக 14 மாடிகளுடனும் வீடுகள் கட்டும் பணி 2020-ம் ஆண்டு தொடங்கியது. இதில் வரகனேரி பகுதி அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்கு தயாராக உள்ளது.
பழைய பால் பண்ணை அருகே வரகனேரி பகுதியில் உயர் வருவாய் பிரிவினருக்கு விற்பனை செய்வதற்காக கட்டப்பட்டுள்ள 14 மாடி கட்டிடத்தில் உள்ள 56 வீடுகள் விற்பனை செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ டைப்பில் 1,572 சதுர அடி பரப்பளவில் 3 படுக்கை அறைகளுடன் 13 வீடுகள் தலா ரூ.78.26 லட்சத்துக்கும், ‘பி’ டைப்பில் 1,576 சதுர அடி பரப்பளவு கொண்ட 14 வீடுகள் ரூ.78.44 லட்சத்துக்கும், ‘சி’ டைப்பில் 1,520 சதுர அடி பரப்பளவு கொண்ட 14 வீடுகள் ரூ.75.72 லட்சத்துக்கும், ‘டி’ டைப்பில் 1,518 சதுர அடி பரப்பளவு கொண்ட 14 வீடுகள் ரூ.75.61 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வீட்டு வசதி வாரியத் துறை அலுவலர்கள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: பழைய பால் பண்ணை அருகே வரகனேரி பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் கேட்டட் கம்யூனிட்டி வகை குடியிருப்பு. மிகவும் தரமாகவும், நவீனமுறையிலும், அழகிய வடிவமைப்புடனும் கட்டப்பட்டுள்ளன. இதில் புதை சாக்கடை வசதி, தீயணைப்பு கருவிகள், ஜெனரேட்டர் வசதி, கண்காணிப்புக் கேமரா வசதி, 2 லிப்ட்கள், 2 படிக்கட்டுகள், சுற்றுச்சுவர், வாகனம் நிறுத்தும் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலத்துக்கு வீட்டுவசதி வாரியம் குடியிருப்புகளை பராமரிக்கும். அதன் பிறகு குடியிருப்போர் பராமரித்துக் கொள்ள வேண்டும். இங்குள்ள குடியிருப்போருக்கு யுடிஎஸ் எனப்படும் பிரிக்கப்படாத நிலத்தின் பங்கு 530 சதுர அடி ஆகும்.
இன்னும் 3 மாதங்களில்...: மன்னார்புரம் பகுதியில் 15 மாடிகளுடன் கட்டப்பட்டு வரும் அரசு ஊழியர்களுக்கான வாடகை குடியிருப்புகளின் கட்டுமானப்பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவடையும். இதில் 4 பகுதிகளாக மொத்தம் 464 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ‘ஏ’ டைப் வீடுகள் 3 படுக்கையறை வசதிகளுடனும், ‘பி’ டைப் வீடுகள் விசாலமான 2 படுக்கையறை வசதிகளுடனும், ‘சி’ மற்றும் ‘டி’ டைப் வீடுகள் சாதாரண அளவிலான 2 படுக்கையறை வசதிகளுடன் கூடியதாகவும் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT