Published : 03 Feb 2024 05:57 AM
Last Updated : 03 Feb 2024 05:57 AM
புதுடெல்லி: குடிமைச் சேவைகளை ஆன்லைன் மூலமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ரூ.1,450 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
நாடு முழுவதும் சிறிய நகரங்கள் உட்பட அனைத்து நகரங்களிலும் உள்ள பெரும்பாலான சேவைகள் ஆன்லைன் மூலம் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சிகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தல், கட்டிடங்களுக்கான அனுமதி போன்ற பல்வேறு சேவைகளை அரசுஅலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே மக்களுக்கு ஆன்லைன் மூலமாகவே கிடைக்க மாநிலங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கும்.
மேலும், தெரு விளக்குகள், குடிநீரின் தரம் மற்றும் விநியோகத்தை உறுதி செய்தல், திடக்கழிவு மேலாண்மை போன்ற குடிமை உள்கட்டமைப்புகளை சிறந்த முறையில் மாநிலங்கள்நிர்வகிப்பதற்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்த திட்டம் உதவும். அதன்படி, இந்த தேசிய நகர்ப்புற டிஜிட்டல் மிஷன் (என்யுடிஎம்) திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2024-25 நிதியாண்டுக்கு ரூ.1,450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக மட்டும் ரூ.6,000 கோடிக்கும் மேல் செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் நகராட்சி சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கல் மோசமான நிலையில் உள்ளதால் மக்களை அதன் பலன் முழுமையாக சென்றடையவில்லை.
எனவே, அடுத்த நான்கு ஆண்டுகளில் அனைத்து குடிமை அமைப்புகளிலும் 100 சதவீத டிஜிட்டல்மயமாக்கலை அடைவதற்கு மத்திய அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது. இது, சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT