Published : 26 Jan 2024 06:18 AM
Last Updated : 26 Jan 2024 06:18 AM
சென்னை: மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்திய முதலீடுகளை அதிகரிக்க ஆர்வமாக உள்ளதாக அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரீட்டா சஃபியோட்டி தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலியா-தமிழகம் இடையேயான முதலீட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசின் சார்பில்சென்னையில் நேற்று நடைபெற்றது. அம்மாநில போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ரீட்டா சஃபியோட்டி, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தமிழகம் இடையே முதலீட்டு வர்த்தகங்களை அதிகரிப்பது, கூட்டு முயற்சிகள், ஒருங்கிணைந்த வாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிகழ்வில் மேற்கு ஆஸ்திரேலியாவின் அமைச்சர் ரீட்டா சஃபியோட்டி பேசியதாவது: மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து முதலீடு செய்வதற்காக பல்வேறுவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள் ளன. லித்தியம், கோபால்ட், நிக்கல்,தாமிரம் போன்ற முக்கியமான கனிமங்கள் கிடைப்பதால் பிற நாடுகளின் வளர்ச்சிக்கும் கணிசமான வகையில் உதவ முடியும். எனவே மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்தியமுதலீட்டை அதிகரிக்க ஆர்வமாக உள்ளோம்.
இதையொட்டி விமான சேவைகளை அதிகரிக்கவும், இந்தியாவுக்கும் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நேரடி விமான இணைப்புகளைப் பெறவும் திட்டமிட்டுள் ளோம். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அதிகமான இந்தியர்களை அழைத்துவர, சிங்கப்பூர் மற்றும் பிற துறைமுகங்கள் வழியாக இருக்கும் இணைப்புகளை மேம்படுத்தவும் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “மேற்கு ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ரீதியிலான உறவு கடந்த 18 மாதங்களில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில் முத லீடுகளுக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. தமிழகத்துக்கும் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு மான உறவின் மூலம் இரு மாநிலங்களுக்கும் சிறந்த எதிர்காலம் ஏற்படும். இதையொட்டி இருமாநில அரசுகளின் ஒருங்கிணைப் புடன் ‘சைபர் பாதுகாப்பு மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பம்’ எனும் சர்வதேச கருத்தரங்கம் வரும் மார்ச் 5, 6-ம் தேதிகளில் சென்னை ஐஐடியில் நடைபெறுகிறது” என்றார்.
இந்நிகழ்வில் மேற்கு ஆஸ்திரேலியாவின் முதலீடு மற்றும் வர்த்தகப் பிரிவு ஆணையர் நஷீத்சவுத்ரி, ஆஸ்திரேலிய நாட்டின் தூதரக அதிகாரி டேவிட் எக்ளஸ் டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT