Published : 24 Jan 2024 07:48 PM
Last Updated : 24 Jan 2024 07:48 PM

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வீழும் விசைத்தறி... மீளுமா?

திருப்பூர்: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத் தறி சத்தம் என்பது உழைப்பின் சங்கீதமாகவே பார்க்கப்படுகிறது. நள்ளிரவு நேரத்திலும் வானொலியில் பாட்டு கேட்டபடி, குடும்பம், குடும்பமாக தறிகளை இயக்கிக் கொண்டிருந்தவர்கள் தான், விசைத் தறித் தொழிலாளர்கள். இன்றைக்கு அந்த காட்சிகள் அரிதாகிவிட்டன.

பகல் நேரத்திலேயே வேலை இன்றி பல விசைத் தறிக்கூடங்களில், பூச்சிகள் கூடு கட்டும் அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. கரோனா பெருந்தொற்றில் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழிலாக விசைத்தறி தொழில் உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகளை நம்பி, 5 லட்சம் குடும்பங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட கூலி விவகாரம், பண மதிப்பு நீக்கம், கரோனா மற்றும் பஞ்சு, நூல் விலை உயர்வு என இன்றைக்கு இந்த தொழில் வீழ்ச்சிக்கான காரணங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றுக்கெல்லாம் உச்சமாக மின் கட்டண உயர்வும், தொழிலாளர்களுக்கான கூலி உயர்வும் இரட்டை ஆயுள் தண்டனைகளாக மாறி இருப்பதாக சொல்கின்றனர் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் ச.ஈ.பூபதி கூறும்போது, “கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத் தறிகள் உள்ளன. இதில் 90 சதவீதம் கூலியின் அடிப்படை யில் தான் தொழில் செய்கிறோம். மின் கட்டண உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வு மற்றும் விசைத்தறி சார்ந்த தொழிலாளர்களுக்கு அச்சு பிணைத்தல், இழை வாங்குதல், ஒர்க்‌ஷாப், வேன் வாடகை, நாடா பட்டறை என பல்வேறு செலவினங்கள், பல மடங்கு உயர்ந்து தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். தொடர்ந்து வேலை இல்லாத நிலையில், தொழிலாளர்கள் வேறு வேலைக்கு சென்றுவிடுவதால், தொழிலாளர் பற்றாக்குறையும் நிலவுகிறது.

அதேபோல் தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு கொடுத்தால் தான், தொடர்ந்து தொழிலை நடத்த முடியும் என பல்வேறு நடைமுறை சிக்கல்களை இன்றைக்கு நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். முன்பெல்லாம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு பெற்றோம். ஆனால் தற்போது சரியாக கூலி உயர்வு பெற்று 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2014-ம் ஆண்டு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்களுக்கு கொடுத்து நடைமுறைப்படுத்தாமல், பல்வேறு காரணங்களை சொல்லி பல ஆண்டுகளாக தட்டி கழித்தனர்.

அதன்பின்னர் 2021-ம் ஆண்டு போடப்பட்ட புதிய கூலி ஒப்பந்தமும், ஒன்றிரண்டு மாதங்கள் தந்துவிட்டு குறைத்தனர். இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு வேலை நிறுத்தம் செய்து, 2021-ம் ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தப்படி சோமனூர் ரகத்துக்கு 23 சதவீதம், பிற ரகத்துக்கு 20 சதவீதம் என்பதை குறைத்து, சோமனூர் ரகத்துக்கு 19 சதவீதம், பிற ரகத்துக்கு 15 சதவீதம் என ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். தற்போது 2014-ம் ஆண்டு ஒப்பந்த கூலி தான் வழங்கப்படுகிறது.

அதாவது, கூலி உயர்வு ஒப்பந்தம் ஆனவுடன், விசைத் தறியாறியாளர்கள் தொழிலாளர்களுக்கும், அதனை சார்ந்துள்ள தொழிலுக்கும் கூலி உயர்வை கொடுக்கிறோம். ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஒப்பந்தக் கூலியை குறைத்தால், அதற்கு நாங்களே பொறுப்பு ஏற்க வேண்டிய கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக சரியான கூலி உயர்வு கிடைக்காமல் குடும்பமே உழைத்தும் இந்த தொழிலைச் செய்ய முடியாமல் விசைத் தறியாளர்கள் தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதனை தடுக்கவும், விசைத் தறி தொழிலை பாதுகாக்க வேண்டியதும் தமிழ்நாடு அரசின் கடமை.உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, பல திசைகளிலும் முதலீடுகளை ஈர்க்கும் அதே வேளையில் இந்த மண்ணில் உள்ள பூர்வீகத் தொழிலாக பல தலைமுறைகள் பயன்பெற்ற தொழிலை பாதுகாக்க வேண்டியதும் அரசின் பொறுப்பு.

கரோனாவுக்கு பிறகு விசைத் தறி கூடங்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்களிடமிருந்து முழுமையான ஆர்டர்கள் கிடைப்பதில் பெரும் சறுக்கல் உள்ளது. துணி வியாபாரம் இல்லாததால், ஆர்டர் இல்லை என்கின்றனர். இதனால் 50 சதவீதம் உற்பத்தி இழப்பு இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. 20 சதவீதமான தறிகள் பழைய இரும்பு கடைகளுக்கு சென்று விட்டன. மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வுக்கு ஏற்ப புதிய கூலி உயர்வு என பல்வேறு நெருக்கடிகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோமனூர் ரகத்துக்கு 60 சதவீதமும், இதர ரகங்களுக்கு 50 சதவீதமும் புதிய கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும். அதே போல் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலி உயர்வை தொடர்ந்து வழங்கினால் மட்டுமே பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x