Published : 23 Jan 2024 08:14 PM
Last Updated : 23 Jan 2024 08:14 PM

எகானமி வகுப்பு, எளிமை, மேற்கோள்... - நாராயண மூர்த்தியின் சக பயணி பகிர்வு வைரல்!

நாராயண மூர்த்தி மற்றும் நரேன்

பெங்களூரு: இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி, விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் மேற்கொண்டுள்ளார். அதே விமானத்தில் அவருடன் பயணித்த சக பயணி ஒருவர், செல்ஃபி எடுத்து அதை பகிர்ந்துள்ளார். அது பரவலாக சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

அவரது மொத்த சொத்து மதிப்பு 480 கோடி டாலர். இருந்தாலும் விமானத்தில் எகானமி வகுப்பில் பயணிக்க அதிகம் விரும்புபவர். அந்த வகையில் அண்மையில் மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு அவர் பயணித்துள்ளார். அவரது இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி, அவரை அடையாளம் கண்டுள்ளார். நரேன் கிருஷ்ணன் எனும் அந்த பயணி சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அதையடுத்து அந்த பயணத்தில் நாராயண மூர்த்தி உடன் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடி உள்ளார். அதனை தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி உள்ளது.

“எதிர்பாராத விதமாக மும்பை டு பெங்களூரு வரையிலான எனது விமான பயணத்தில் நாராயண மூர்த்திக்கு பக்கத்தில் அமர்ந்து பயணிக்கும் வாய்ப்பு அமைந்தது. தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவருடன் பயணித்த அனுபவம் இனிதானது. பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் என்பது அவருடனான உரையாடல் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த சில மணி நேர பயணத்தில் நாங்கள் நிறைய பேசினோம்.

ஏஐ உடனான வருங்காலம், இந்திய பொருளாதாரத்தில் இளைஞர்களின் பங்கு, சீனாவை முந்தும் சூழல், ஒரு நிறுவனத்தை கட்டமைக்கும் போது ஏற்படும் தோல்விகளை கடந்து செல்வது உள்ளிட்டவை குறித்து பேசினோம். பல்வேறு துறைகளில் உற்பத்தித் திறனை ஏஐ பல மடங்கு அதிகரிக்கும் என சொன்னார். இதில் என்னால் மறக்க முடியாதது அவர் பகிர்ந்த லூயிஸ் பாஸ்டரின் மேற்கோள்தான். ‘தயாராக இருக்கும் மனதுக்கு மட்டுமே வாய்ப்புகள் சாதகமாக இருக்கும்’ என சொல்லி இருந்தார். இந்த பயணத்தின் நினைவுகள் என்னுடன் நீண்ட நாளுக்கு நிலைத்திருக்கும்” என அந்த பதிவில் நரேன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x