Published : 17 Jan 2024 04:02 AM
Last Updated : 17 Jan 2024 04:02 AM

விலை அதிகரிப்பால் நிகழும் மாற்றம் - மஞ்சள் சாகுபடிக்கு திரும்பும் ஈரோடு விவசாயிகள்

பிரதிநிதித்துவப் படம்

ஈரோடு: கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மஞ்சள் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால், நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இதில் 30 சதவீதத்துக்கும் மேல் ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப் படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 7 லட்சம் மூட்டைகள் ( ஒரு மூட்டை 65 கிலோ ) வரை மஞ்சள் உற்பத்தியாகும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் மூட்டைகள் உற்பத்தியாகின்றன. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத், மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, தமிழகத்தில் ஈரோடு என இந்தியாவில் 3 இடங்களில் தான் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தை உள்ளது. புவிசார் குறியீடு பெற்றுள்ள ஈரோடு மஞ்சளில், 3 முதல் 5 சதவீதம் வரை குர்குமின் அளவு உள்ளது.

குறைந்த மஞ்சள் சாகுபடி: ஈரோடு மாவட்டத்தில் 2015 -ல் 8,912 ஹெக்டேராக இருந்த மஞ்சள் சாகுபடி, 2016 -ல் 2,966 ஹெக்டேராக குறைந்தது. இதன் பின், 2017 -ல் 8,988 ஹெக்டேராக அதிகரித்த மஞ்சள் சாகுபடி, 2018 -ல் 5,625 ஹெக்டேராகவும், 2019 -ல் 4,319 ஹெக்டேராகவும், 2020, 2021, 2022 வரை சுமார் 3,500 முதல் 4,000 ஹெக்டேர் வரையும் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், 2023-ல் 2,000 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி குறைந்தது. மஞ்சள் விலை வீழ்ச்சியே மஞ்சள் சாகுபடி குறைவுக்கு காரணமாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக மஞ்சள் சராசரியாக குவிண்டால் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை தான் விலை போனது. இதனால் விவசாயிகள் சாகுபடி செலவைக் கூட திரும்ப எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இது குறித்து மஞ்சள் வியாபாரிகள் கூறியதாவது: ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நீர் ஆதாரங்கள் அதிகரிப்பால் மஞ்சள் சாகுபடி பரப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், சந்தையின் பெரும்பகுதியை இந்த மாநில மஞ்சள் வரத்து ஆக்கிரமித்தது. ஈரோடு மஞ்சள் விவசாயிகள் விலை குறைவால் இருப்பு வைக்கத் தொடங்கினர். இருப்பு வைக்கும் மஞ்சள் தரம் குறைந்ததும் விலை சரிய ஒரு காரணமாகும். மற்ற மாநில விவசாயிகளைப் போல் அந்த ஆண்டில் விளைந்த மஞ்சளை அதே ஆண்டில் விற்றுவிட வேண்டும், என்றனர்.

மஞ்சள் சாகுபடி அதிகரிக்கும்: இது குறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.ஆர்.சுதந்திர ராசு கூறியதாவது: மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக விற்பனையானால் விவசாயிக்கு நஷ்டம் ஏற்படும். கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை மாதத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் விற்றது. இப்போது ரூ.13 ஆயிரம் வரை விற்பனையாகிறது. விலை உயர்வு காரணமாக நடப்பு ஆண்டில் மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், வரும் மார்ச் மாத நடவில் மஞ்சள் சாகுபடி அதிகரிக்கும் விதை மஞ்சளுக்கு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் வரை செலவு ஏற்படும் என்பதால் இந்த செலவை குறைக்க நர்சரி நடவு முறையையும், அறுவடைக்கு முழுமையாக இயந்திர பயன்பாட்டையும் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சளை இருப்பு வைக்க, அரசு நேரடியாகவோ அல்லது தனியார் பங்களிப்பு மூலமாகவோ குளிர்சாதன வசதி உள்ள மஞ்சள் சேமிப்புக் கிடங்குகளை ஈரோடு மாவட்டத்தில் அமைக்க வேண்டும். மஞ்சளை ஆதாரமாக வைத்து ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் மதிப்புக் கூட்டப் பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். ஈரோட்டில் மஞ்சள் வாரிய மண்டல அலுவலகத்தை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x