Published : 22 Dec 2023 04:08 AM
Last Updated : 22 Dec 2023 04:08 AM

தொடர் மழையால் சிவகாசியில் மூடப்பட்ட பட்டாசு ஆலைகள் - கிறிஸ்துமஸ், புத்தாண்டு விற்பனை பாதிப்பு

பிரதிநிதித்துவப் படம்

சிவகாசி: தொடர் மழை காரணமாக பட்டாசு ஆலைகள் முழுமையாக இயங்க முடியாததால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விற்பனையாளர்கள் உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.

சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 1,100-க்கும் அதிகமான பட்டாசுஆலைகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 95 சதவீதத்துக்கும் அதிகமான பட்டாசுகள், சிவகாசி பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு, தீபாவளி பண்டிகைக்காக ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் பட்டாசு விற்பனை நடைபெற்றது. இதனால் உற்பத்தியாளர்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்த 95 சதவீதத்துக்கும் அதிகமான பட்டாசுகள் விற்றுத் தீர்ந்தன.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் புத்தாண்டு விற்பனைக்காக பட்டாசு தேவை அதிகரித்ததால், சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் நவம்பர் இறுதியில் திறக்கப்பட்டன. ஆனால், தொடர் மழை காரணமாக பட்டாசு ஆலைகள் முழுமையாக இயங்க முடியாமல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான தொழி லாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்கு நாடு முழுவதும் ரூ.350 கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை நடைபெறும். இந்நிலையில், இந்த ஆண்டு உற்பத்தி குறைந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இது குறித்து பட்டாசு விற்பனையாளர்கள் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்கு அனைத்து பட்டாசுகளும் விற்பனை ஆனதால், கடைகளில் பட்டாசு இருப்பு இல்லை. இந்நிலையில், தொடர்மழை காரணமாக பட்டாசு ஆலைகள் முழுமையாக இயங்காததாலும், கடைகளில் போதிய பட்டாசுகள் இருப்பு இல்லாததாலும், விரும்பிய பட்டாசுகள் கிடைக்காததாலும், வெளியூர் மற்றும் கேரளாவில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு பட்டாசு விற்பனை பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x