Published : 06 Aug 2023 06:36 AM
Last Updated : 06 Aug 2023 06:36 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் இறுதி கட்ட பணியாக 6.4 லட்சம் கிராமங்களை பிராட்பேண்டுடன் இணைக்கும் ரூ.1.39 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாரத்நெட் திட்டத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் 1.94 லட்சம் கிராமங்களில் பிராட்பேண்ட் வசதி உள்ளது. மீதம் உள்ள கிராமங்கள் இன்னும் இரண்டரை ஆண்டுகளில் பிராட்பேண்ட் வசதியுடன் இணைக்கப்படவுள்ளன.
இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இறுதி கட்ட பணியாக ரூ.1,39,579 கோடி செலவில் கண்ணாடியிழை கேபிள் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த இணைப்பை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஓர் அங்கமான பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (பிபிஎன்எல்), கிராம அளவிலான தொழில் முனைவோர்களுடன் இணைந்து வழங்கவுள்ளது. இதற்கான முன்னோடி திட்டம் முதலில் 4 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 60,000 கிராமங்களுக்கு விரிவுபடுத் தப்பட்டது.
வாடிக்கையாளரின் வீடுகளில் வைக்கப்படும் சாதனம், மற்றும் தேவையான கூடுதல் கண்ணாயிழை கேபிள் ஆகியவற்றை பிபிஎன்எல் வழங்குகிறது. இதன் நெட்வொர்க் பராமரிப்பு பணிகள் உள்ளூர் தொழில் முனைவோரிடம் வழங்கப்படுகிறது. இந்த முன்னோடி திட்டத்தில் 60,000 கிராமங்களில் 3.51 லட்சம் பிராட்பேண்ட் இணைப்புகள் கொடுக்கப்பட்டன.
3,800 தொழில்முனைவோர்: இதில் 3,800 தொழில்முனைவோர் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வீட்டுக்கு மாதம் ஒன்றுக்கு சராசரி டேட்டா நுகர்வு 175 ஜிகா பைட்ஸ்களாக உள்ளது.
மாதாந்திர பிராட்பேண்ட் திட்டம் ரூ.399-லிருந்து தொடங்குகிறது. இதன் வருவாயை பிபிஎன்எல் மற்றும் கிராம அளவிலான தொழில்முனைவோர் 50 சதவீத அடிப்படையில் பகிர்ந்து கொள்கின்றனர். இத்திட்டத்தின் கீழ் நாட்டில் 37 லட்சம் வழித்தட கி.மீ தூரத்துக்கு கண்ணாடியிழை கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 7.7 லட்சம் கி.மீ தூரத்துக்கு பிபிஎன்எல் இணைப்பு கொடுத்துள்ளது.
கிராமங்கள் மேம்பாடு: இந்த பிராட்பேண்ட் இணைப்பு மூலம் கிராமங்கள் மேம்பட தொடங்கியுள்ளன. அங்குள்ள மக்கள் தொலைதூர மருத்துவ சேவை மூலம் சிகிச்சை பெறுகின்றனர். ஆன்லைன் கல்வி பெறுகின்றனர், போட்டித் தேர்வுகளுக்கு மக்கள் வீட்டில் இருந்தே தயாராகி பணத்தை சேமிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT