Published : 16 Jul 2021 07:43 PM
Last Updated : 16 Jul 2021 07:43 PM
எட்டு விதமான பொதுநலம் மற்றும் தனிநல வழக்குகளை நிரந்த மக்கள் நீதிமன்றத்தில் தொடரலாம் என சிவகங்கை நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், நீதிபதியுமான கே.கருணாநிதி தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பொதுப் பயன்பாட்டு சேவையில் பொதுமக்களுக்குப் பல இன்னல்கள் ஏற்படுகின்றன. அரசு அலுவலர்களின் கவனக்குறைவு, அலட்சியம், தவறால் சேவைக் குறைபாடு ஏற்படும். அவற்றுக்காக வழக்கமான நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்தால் தாமதம் ஏற்படும்.
இதில் இரு தரப்பையும் அழைத்துப் பேசினாலே பெரும்பாலான பிரச்சினைகள் தீர்வாகி விடும். இதற்காகத்தான் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் மாவட்டத் தலைநகரங்களில் ஏற்படுத்தப்பட்டன. போக்குவரத்து, அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு, குடிநீர், மின் விநியோகம், சுகாதாரம், காப்பீடு, கல்வி, ரியல் எஸ்டேட் ஆகிய 8 விதமான சேவைகளில் குறைபாடு இருந்தால் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுநல மற்றும் தனிநல வழக்குகளைத் தொடரலாம்.
மேலும், சிவகங்கையில் இந்த நீதிமன்றம் தொடங்கி 2 ஆண்டுகளாகியும், வெறும் 55 வழக்குகளே வந்துள்ளன. பல மாவட்டங்களில் இதற்கும் குறைவான வழக்குகளே வந்துள்ளன. இந்த நீதிமன்றம் குறித்து மக்களுக்குத் தெரியாததே இதற்குக் காரணம்.
மேலும், இந்த வழக்குகளில் ஆஜராக மறுக்கும் அதிகாரிகள், பிரதிவாதிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அதேபோல் உத்தரவை மீறினாலும் அபராதம் விதிக்கப்படும். இங்கு வழக்குத் தொடர நீதிமன்றக் கட்டணம் எதுவும் கிடையாது'' என்று நீதிபதி கருணாநிதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT