Published : 13 Jul 2021 06:42 PM
Last Updated : 13 Jul 2021 06:42 PM
விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் 30 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொடர்பான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி வருகிறது. அதோடு, இதுபோன்ற குற்றங்களைக் குறைக்கவும் காவல்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், "நிர்பயா நிதி" மூலம் "பெண்களுக்கான உதவி மையம்" அமைக்க மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.8 கோடி நிதி அளித்துள்ளது. இதன் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்க தமிழகம் முழுவதும் 800 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்கவும் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட நபர்களை ஆற்றுப்படுத்தி அவர்களை பாதுகாப்பாக காப்பகத்திற்கு அழைத்துச் செல்வது மற்றும் இதர நடவடிக்கைகளை மேற்கொள்ள 30 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் எஸ்.பி. மனோகர் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலமாக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் பங்கேற்று இச்சிறப்புக்குழுக்களைத் தொடங்கிவைத்து அறிவுரைகள் கூறினார். இச்சிறப்பு விசாரணைக்குழுவில் ஒவ்வொன்றிலும் இரு பெண் காவலர்கள் இருப்பார்கள். அனைத்து மகளிர் காவல் நிலையமாக இருந்தால் ஒரு பெண் எஸ்.ஐ. மற்றும் ஒரு பெண் காவலர் இருப்பார்.
இச்சிறப்பு விசாரணைக் குழுக்களுக்கு 181, 1098, 100 போன்ற தொலைபேசி எண்களில் வரும் புகார்களைப் பெற்று உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்த வசதியாக ஒரு பைக்கும், சம்பவ இடத்திலேயே விசாரணை நடத்தி புகார் பதிவு செய்ய மடிக் கணினி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT