Published : 25 Sep 2025 06:48 AM
Last Updated : 25 Sep 2025 06:48 AM
வண்டலூர்: புத்தகங்களை வாசிப்பவர்களுக்கு அடுத்தவர்களை நேசிக்கும் எண்ணம் தானாக வரும் என, மத்திய அரசின் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் கூறினார்.
எஸ்.எஸ்.எல்.எஃப். கல்வி அறக்கட்டளை வழங்கும் இந்து தமிழ் திசை - ‘வாசிப்பை நேசிப்போம்’ எனும் நிகழ்வு, வாசிப்பின் வழியே புதிய உலகை காண்போம் என்ற கருப்பொருளுடன், புத்தக வாசிப்பு பழக்கத்தை மாணவரிடம் கொண்டு செல்லும் முயற்சியாக, வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன அரங்கில் நேற்று நடைபெற்றது. கிரசண்ட் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.முருகேசன் தலைமையுரை ஆற்றினர்.
கிரசண்ட் பல்கலைக்கழக ரீடர் கிளப் ஒருங்கிணைப்பாளர் பி. பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய அரசின் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் டி. ஜெயசீலன் பேசியதாவது: கல்வி, அறிவு, ஞானம் இவை மூன்றுக்கும் என்ன வித்தியாசம்.
மூன்றும் பின்னிப்பிணைந்த தொகுப்பாக இருக்கிறது. அதனை பகுப்பாய்ந்து பார்க்க வேண்டும். கல்வி என்பது ஒரு மாணவனை மனிதனாக மாற்றுவது. வாழ்க்கையில் கல்வி கற்போர்க்கு எந்த செல்வமும் தேவைப்படாது. கல்வி ஏழு தலைமுறைக்கும் உதவியாக இருக்கும். கல்வி இல்லாத மனிதன் சிறகு இல்லாத பறவைக்கு ஒப்பானவன்.
வாசிப்பு என்பது நீங்கள் படிக்கும் பாட புத்தகம் மட்டும் அல்ல, அதையும் தாண்டி பல்வேறு புத்தகங்களை படிக்க வேண்டும். காந்தி புத்தகத்தை படிக்கவில்லை என்றால், அகிம்சை மூலம் சுதந்திரம் வாங்கி கொடுத்திருக்க முடியாது.
எலான் மஸ்க், பில்கேட்ஸ் ஆகியோர் புத்தகங்களை படித்ததால் இன்று உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனிதனை தலைவனாகவும், வீரனாகவும் மாற்றும். பலரை மாற்றியும் இருக்கிறது. வாசிப்பை நேசிக்கும் போது தான் கல்வி அறிவாக மாறுகிறது. அறிவின் முதிர்ச்சி தான் ஞானம்.
தலைமை பண்பு உங்களுக்குள் வர வேண்டும் என்றால், பல புத்தகங்களை படிக்க வேண்டும். புத்தகங்களை வாசிக்கும் எண்ணம் இருந்தால், அடுத்தவர்களை நேசிக்கும் எண்ணம்தானாக வரும். வாசிப்பு பழக்கமே மனிதனை தான் இருக்கும் நிலையை விட, அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
இன்று அருகில் அமர்ந்திருக்கும் நபர்களை நாம் பார்ப்பது கிடையாது. செல்போன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உறவுகளை மறந்து விட்டோம். நேசங்களை மறந்து விட்டோம். வாசிப்பையும் மறந்து விட்டோம். செல்போனிலேயே முழு கவனத்தையும் செலுத்தி விட்டோம். செல்போனை அளவோடு பயன்படுத்துவது நல்லது.
தினமும் 3 மணி நேரம்.. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது ஒதுக்கி பாட புத்தகங்கள் அல்லது மற்ற புத்தகங்களை படிக்க வேண்டும். வாழ்க்கை என்பது ஒருமுறை தான். நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். யாரெல்லாம் உங்களை வாழ தகுதியற்றவர்கள் என்று சொன்னார்களோ, அவர்கள் முன்பு நீங்கள் வாழ்ந்து காட்டலாம். வாழ்க்கை வாழ்வதற்கு தான், வீழ்வதற்கு அல்ல. இவ்வாறு ஜெயசீலன் பேசினார்.
எஸ்.எஸ்.எல்.எஃப். கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் ஜி.சக்திவேல் பேசுகையில், வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லவும், உச்சத்தை அடையவும் புத்தக வாசிப்பு மட்டுமே நமக்கு உதவும். மத்திய, மாநில அரசுகள் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த நூல் நிலையங்களை அமைத்துள்ளது.
வாழ்க்கையில் விளிம்பு நிலையில் உள்ள மக்களைக் கண்டறிந்து அவர்கள் முன்னேற்றுவதற்காக அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வளர்வது மட்டுமல்ல, அது நம் நாட்டையும்முன்னேற்றும். பணம் சம்பாதிக்க முடியும், நேரத்தைச் சம்பாதிக்க முடியாது என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் பேராசிரியர் ஏ.முகமது அப்துல்காதர் தனது உரையில், படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் அதுவே உங்களை வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லும். புத்தகம் உங்கள் வாழ்வில் வெற்றியை தீர்மானிக்கும். மனதையும் சூழலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அனுபவத்தின் முதல் ஆசான் புத்தகமே என்றார்.
நிகழ்ச்சியில், கிரசண்ட் பல்கலைக்கழக ரீடர் கிளப் இணை ஒருங்கிணைப்பாளர் நஸ்னீன், பேராசிரியர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT