Published : 08 Sep 2025 05:43 AM
Last Updated : 08 Sep 2025 05:43 AM
காஞ்சிபுரம்: போட்டித் தேர்வுகளில் வெல்பவர்கள் தினமும் தவறாது நாளிதழ் வாசிப்பவர்களாகவே இருப்பார்கள் என்று தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு கூறினார். ‘இந்து தமிழ் திசை’ சார்பில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சமுதாயக் கூட அரங்கில் நேற்று வாசிப்புத் திருவிழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வெ.இறையன்பு பேசியதாவது: தற்போது வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது. இந்த பழக்கத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம். வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும்போதுதான் சிந்தனைத் திறன், மொழியறிவு, கிரகிக்கும் திறன் வளரும். வாசிப்பு திறன் அதிகரிக்க தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
குறைந்த விலையில் நாளிதழ்கள் கிடைக்கின்றன. அவற்றில் பல்சுவை செய்திகள் இருப்பதால், நாளிதழ் வாசிப்பு பழக்கம் இனிமையான அனுபவத்தை உருவாக்கும். வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் தினமும் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.
அதேபோல, புத்தக வாசிப்பு அறிவையும், மொழி வளத்தையும், கற்பனைத் திறனையும் அதிகரிக்கும். வாழ்வில் சோர்வையும், தளர்ச்சியையும் புத்தக வாசிப்பு போக்கும். புத்தகம் வாசிக்கும்போது தொலைநோக்குப் பார்வை உண்டாகும். பல்வேறு பெரிய மனிதர்களின் புத்தகங்களை வாசிக்கும்போது, அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களை நம்மால் உணர முடியும். அதன் மூலம் நமக்கு ஏற்படும் பிரச்சினைகள், சிக்கல்களுக்கு எளிதில் தீர்வுகாண முடியும்.
அலெக்சாண்டர், காரல் மார்க்ஸ், அம்பேத்கர் போன்றவர்கள் புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அதேபோல, மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்றவர்களும் புத்தக வாசிப்பில் பிரியம் கொண்டவர்கள்.
எனவே, மாணவர்கள், சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு ஆர்வத்தை உருவாக்க வேண்டும். புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் உருவாகும்போது, பள்ளி பாடங்களில் கவனம் குறையுமோ என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால் அது தவறானது. வாசிக்கும் பழக்கம் மேம்படும்போது, மாணவர்களின் பாடங்களைப் படிக்கும் திறன் அதிகரிக்கும்.
பாடப் புத்தகங்களில் உள்ள கருத்துகளை எளிதில் உள்வாங்கிக் கொள்வர். எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு வெ.இறையன்பு பேசினார். மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேசும்போது, "மாணவர்கள், படித்த இளைஞர்கள் மத்தியிலேயே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க, `இந்து தமிழ் திசை' நடத்தும் வாசிப்புத் திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் உதவும். தற்போது `ரீல்ஸ்' போன்றவற்றையே பலர் அதிகம் பார்க்கின்றனர்.
வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும்போதுதான் மொழியறிவு, சிந்தனைத் திறன் ஆகியவை மேம்படும். தமிழக அரசு பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதற்காக, பல்வேறு புத்தகங்களை வெளியிட்டு வருகிறது" என்றார். நிகழ்ச்சியில், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு, வாசிக்கும் திறனை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை இறையன்பு விளக்கினார்.
மேலும், அவர்களது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) நளினி, பிரமுகர்கள் ஸ்டாலின், மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை `இந்து தமிழ் திசை' முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி, ஓலோ கிட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ், எஸ்.ஆர்.எம். குளோபல் ஹாஸ்பிடல், காஞ்சிபுரம் பீட்டா மவுன்ட் லிட்ரஸீ பள்ளி, சென்னை பீட்டா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காஞ்சி வாணி வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி, காஞ்சிபுரம் ஜி.ராஜம் செட்டி அண்டு சன்ஸ் ஆகியவை இணைந்து வழங்கின. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள், புத்தகவாசிப்பில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
மாணவர் வாசித்த கவிதை: காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ர.காமாட்சிமித்ரன், ‘வாசிப்புத் திருவிழா’ குறித்து ‘அறிவுக் கண்ணை திறக்க’ என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். அவரது கவிதை..
அறநூல்களை வாசிக்க பழகு
ஆத்திச்சூடியை வாசிக்க பழகு
இலக்கியங்களை வாசிக்க பழகு
ஈரடியை வாசிக்க பழகு
உலகநீதியை வாசிக்க பழகு
ஊக்கம் பெற வாசிக்க பழகு
எழுச்சியுடன் வாசிக்க பழகு
ஏற்றம் பெற வாசிக்க பழகு
ஐயமின்றி வாசிக்க பழகு
ஒலியுடன் வாசிக்க பழகு
ஒழுக்கமாய் இருக்க வாசிக்க பழகு
ஒளவை சொன்னபடி வாசிக்க பழகு
அஃதே நம் வாழ்க்கைக்கு அழகு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT