Published : 09 Aug 2025 01:10 AM
Last Updated : 09 Aug 2025 01:10 AM
சென்னை: இயற்கையை அனைவரும் நேசிக்க வேண்டும் என்று ‘சிங்கா 60’ கலைத் திருவிழா சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற ஓவிய, சிற்பக் கலைஞர் குமாரி நாகப்பன் அழைப்பு விடுத்தார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரின் 60-வது தேசிய தின கொண் டாட்டத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற 10 நாள் பிரம்மாண்ட கலைத் திருவிழாவை கடந்த ஆகஸ்ட் 1 முதல் கோலாகலமாக நடத்தி வருகின்றன. இதற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் சென்னை நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. இவ்விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக அடையாறு பத்மநாப நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் கலை சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில் உலகப் புகழ்பெற்ற ஓவிய, சிற்பக் கலைஞரான குமாரி நாகப்பன் ‘பொது கலை படைப்புகளின் உருவாக்கம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
அடிப்படையில் நான் ஒரு கருத்தியல் சிற்பக் கலைஞர். மலேசியாவில் மலாய், சீனம் என பன்முகக் கலாச்சார சூழலில் வளர்ந்தவள். அதனால், அவற்றின் தாக்கம் எனது படைப்புகளில் இழையோடும். எனது ஒவ்வொரு கலைப் படைப்பையும் ஒரு வரப்பிரசாதமாக கருதுகிறேன். சிங்கப்பூரில் உள்ள விமான நிலையங்கள், தேசிய அருங்காட்சியகங்கள், விடுதிகள், பூங்காக்கள் மற்றும் சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் பொதுவெளிகளில் எனது கலைப் படைப்புகளை பார்க்கலாம்.
நான் இயற்கையை ரசிக்கிறேன், சிறிய தாவரங்கள், சிறு சிறு உயிரினங்கள் மிகவும் பிடிக்கும். அனைவரும் இயற்கையை நேசிக்க வேண்டும். இதை மையப்படுத்தியே எனது படைப்புகள் அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கும். அதில் இயற்கை, தொடக்கப் புள்ளியாகவோ அல்லது மையப் புள்ளியாகவோ அமைந்திருக்கும். வாழ்வியல் அனுபவம், உள்ளார்ந்த உணர்வு, பரஸ்பர நட்புணர்வு போன்றவை எனது கலைப் படைப்புகளுக்கு கருப்பொருட்களாக அமைகின்றன. ஒவ்வொரு படைப்பும் கதை சொல்லியாக இருக்கும். அதை காண்போருக்கு மற்றவர்களிடம் பகிரக்கூடிய ஏதேனும் ஒரு விஷயம் கண்டிப்பாக தோன்றும். அதோடு அறிவியல் உணர்வையும் வெளிப்படுத்தும்.
கலைப் படைப்புகளுக்கு வடிவம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றின் வண்ணங்களும் முக்கியம். புதுமையான வடிவங்களும், வண்ணங்களும் மக்களை ஈர்க்கும். சிவப்பு நிற ஆப்பிள் என்பது ஆரோக்கியம், மருத்துவமனை என்பதையும், பச்சை நிற ஆப்பிள் உணவு, ஹோட்டல், விருந்தோம்பலையும் நினைவுக்கு கொண்டு வரும். கலைப் படைப்பு தனிநபர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். இயற்கையை வைத்தே நம்மையையும் சுற்றுச்சூழலையும் அறிந்துகொள்ள முடியும்.
எனது படைப்புகளை வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் கொண்டுசென்று அவற்றை நிர்மாணிக்கும்போது ஏற்படும் அனுபவமே தனி. அப்போது நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். அந்த வகையில் சீனர்களின் சுறுசுறுப்பையும், விரைவாக செய்யும் பணியையும் பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கும். எந்த வேலையையும் சரியாகவும், விரைவாகவும் செய்து முடிக்கும் மனோபாவம் சீனர்களிடம் காணப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
சிங்கப்பூர் பார்க் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆளுயுர ஆப்பிள் சிலை, தி இண்டர்லேஸ் வளாகத்தில் உள்ள நடனமாடும் சிவப்பு மிளகாய் சிலை, சாங்கி விமான நிலையத்தில் சிதறிக் கிடக்கும் பெரிய குண்டுமணி சிலைகள், ஐயோன் ஆர்ச்சர்ட் வணிக வளாகத்தில் உள்ள ஜாதிக்காய் சிலை, தேசிய அருங்காட்சியகத்தில் குண்டு மிளகாய் சிலை உள்ளிட்டவை அவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
குமாரி நாகப்பனுக்கு ‘இந்து தமிழ் திசை’ இயக்குநர் லட்சுமிநாத் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.முன்னதாக, ஃபோரம் ஆர்ட் கேலரியின் இயக்குநர் ஷாலினி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அடையாறு சிஷ்யா பள்ளி மாணவிகள் மற்றும் கலை ஆர்வலர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக, ‘இந்து தமிழ் திசை’ இயக்குநர் அகிலா விஜய் ஐயங்கார் நன்றி கூறினார்.
‘சிங்கா 60’ நிகழ்ச்சிக்கான பங்குதாரர்களாக சிங்கப்பூர் தூதரகம், டிபிஎஸ் வங்கியும் துணை பங்குதாரர்களாக டிவிஎஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ஓலம் அக்ரி, டிரான்ஸ்வோர்ல்டு, நிப்பான் பெயின்ட் அண்ட் எச்ஒய்சி, ராம்ராஜ் காட்டன், லலிதா ஜுவல்லரி, ரெசிடென்சி டவர்ஸ், போரம் ஆர்ட் கேலரி, மிஸ்டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்கின் டேல்ஸ், மேவெண்டோயர், சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகியவையும் உள்ளன.
‘சிங்கா 60’ விழாவின் 9-ம் நாளான இன்று (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை ராஜரத்தினம் கலையரங்கத்தில் ‘பாரதியார்-பார்வையிலும், குரலிலும்' என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாரதியாரின் ஆன்மிக பயணம் தொடர்பான ஆவணப் படம் திரையிடப்படுகிறது. இந்த படத்தை சவுந்தர்யா சுகுமார் ஐயர் தயாரித்துள்ளார். தொடர்ந்து, ‘நல்லிணக்கத்தில் பாரதியார்’ என்ற தலைப்பில் சிங்கப்பூர்-இந்தியா இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கடைசி தினமான நாளை (ஆக.10) விழா நிறைவடைகிறது.
விழா புதுமையாகவும் பூரிப்பாகவும் இருக்கிறது: ஆசிரியை நெகிழ்ச்சி - ‘சிங்கா 60’ கலைத் திருவிழா புதுமையாகவும் பூரிப்பாகவும் இருக்கிறது என்று அவ்விழாவில் நாள் தவறாமல் பங்கேற்று வரும் பொன்னேரி ஆசிரியை வித்யா லோகசுந்தர்ராஜ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பொன்னேரியைச் சேர்ந்த பகுதி நேர இந்தி ஆசிரியை வித்பா லோகசுந்தர்ராஜ். கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் ‘சிங்கா 60’ கலைத் திருவிழா தொடங்கிய ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தினமும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வருகிறார். விழாவின் 8-ம் நாளான நேற்று அடையாறு ஃபோரம் ஆர்ட் கேலரியில் நடைபெற்ற சிங்கப்பூர் கலைஞர் குமாரி நாகப்பன் நடத்திய கலை சொற்பொழிவு நிகழ்ச்சியிலும் உற்சாகமாகக் கலந்துகொண்டார்.
விழாவில் தினமும் பங்கேற்று வருவது குறித்து அவர் கூறும்போது, “எனது மகன் மூலமாகத்தான் ‘சிங்கா 60’ கலைத் திருவிழா குறித்து எனக்குத் தெரிய வந்தது. இந்த 10 நாள் நிகழ்ச்சியில் கண்டிப்பாக தினமும் கலந்து
கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தேன்.
ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியும் எனக்கு புதுமையாகவும் பூரிப்பாகவும் இருக்கிறது. நான் இதுவரை சிங்கப்பூர் சென்றதில்லை. தற்போது சிங்கப்பூர்-இந்தியா இடையிலான உறவைக் கொண்டாடும் வகையில் நடத்தப்படும் இந்த விழா நிகழ்ச்சிகளை பார்க்கும்போது சிங்கப்பூர் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT