Published : 08 Aug 2025 02:26 PM
Last Updated : 08 Aug 2025 02:26 PM
சிங்கப்பூரில் வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழ் தமிழ் முரசு. சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் குரலாகத் திகழும் இந்த நாளிதழ், சமீபத்தில் 90ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. சிங்கப்பூரில் வெளியாகிவரும் ‘ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழுக்கு அடுத்தபடியாக, அந்நாட்டின் இரண்டாவது பழமையான பத்திரிகை தமிழ் முரசு.
1935 முதல் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் கொள்கை இதழாக 1935 ஜூலை 6 அன்று இது தொடங்கப்பட்டது. சங்கத்தின் செயலாளராக இருந்த தமிழவேள் கோ.சாரங்கபாணி இதழின் ஆசிரியர் ஆனார். வார இதழாகத் தொடங்கப்பட்ட தமிழ் முரசு, மூன்று மாதங்களில் வாரம் மும்முறை வெளிவரத் தொடங்கியது. பிறகு எட்டுப் பக்க இதழாக வளர்ந்து, 1937 டிசம்பர் 1 அன்று நாளிதழாக மாற்றப்பட்டு 3 காசு விலையில் விற்கப்பட்டது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குச் சாரங்கபாணி ஆசிரியராக இருந்தார்.
1974இல் அவர் காலமானதைத் தொடர்ந்து அவர் குடும்பத்தினர் இதழை நடத்தினர். வி.டி. அரசு என அழைக்கப்பட்ட வைத்தியநாதன் திருநாவுக்கரசு 1989 முதல் 2000 வரை தமிழ் முரசு நாளிதழின் தலைமை ஆசிரியராகச் செயல்பட்டார். அவரும் சாரங்கபாணியின் மகள் ராஜமும் பங்குதாரர்களாக இருந்த ‘ஹைப்ரோ பிரிண்டிங்’ நிறுவனத்தின் உரிமையின்கீழ் சென்றது தமிழ் முரசு.
தற்போது பல்வேறு மொழி நாளிதழ்களை வெளியிட்டுவரும் ‘சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் நாளிதழ்களுள் ஒன்றாக எஸ்பிஎச் மீடியா வெளியீடாகத் தமிழ் முரசு வெளிவருகிறது. அச்சு இதழாக மட்டுமல்லாமல் செயலி வடிவிலும் தமிழ் முரசு அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. தமிழ் முரசுவின் தற்போதைய ஆசிரியர் த.ராஜசேகர்.
தொடக்கக் காலத்திலிருந்தே சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம் அறிவு பெறவும், அதிகாரமுள்ளதாகவும், ஒற்றுமையான சமூகமாகவும் திகழ தமிழ் முரசு துணைபுரிந்து வருகிறது. விளம்பரங்கள் உட்பட அனைத்து விஷயங்களும் இந்த நாளிதழில் தமிழில் வெளியாவது சிறப்பு. உள்ளூர் செய்திகள், இந்தியச்சமூகத்தைப் பற்றிய செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டு -பொழுதுபோக்கு அம்சங்கள் சார்ந்த செய்திகள் தமிழ் முரசுவில் அதிகம் வெளியாகின்றன.
உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடைய கவிதைகளும் கதைகளும் ஞாயிறுதோறும் தமிழ் முரசில் வெளியிடப்படுகின்றன. திங்கள்கிழமைகளில் மாணவர்களுக்காக மாணவர் முரசும், வியாழக்கிழமைகளில் இளைஞர்களுக்காக இளையர் முரசும் வெளியிடப்படுகின்றன.
அச்சு, மின்னணு வடிவங்களில் தொடர்ந்து வளர்ந்துவருகிறது இந்த நாளிதழ். இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு தலைப்புகளில் செய்தி, உள்ளடக்கப் பரிமாற்றத்துக்கும் ஆசிய வட்டாரத்தில் இரண்டு நாளிதழ்களின் வளர்ச்சி தொடர்பாக ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை அடையாளம் காணவும் இந்து தமிழ் திசை நாளிதழுடன் தமிழ் முரசு சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.
சிங்கா 60 விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தும் வகையில், தமிழ் முரசில் வெளியான சில பக்கங்கள் அதன் ஆவணக்காப்பகத்திலிருந்து இங்கே தரப்பட்டுள்ளன. - அன்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT