Published : 08 Aug 2025 12:28 AM
Last Updated : 08 Aug 2025 12:28 AM
சென்னை: வளர்ச்சிப் பாதையில் இந்தியா சரியான திசையில் பயணம் செய்கிறது என்று சென்னையில் நடைபெற்ற சிங்கா 60 கலைத் திருவிழா விவாத நிகழ்ச்சியில் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் உறுதிபடத் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் 60-வது தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திருவிழாவை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கோலாகலமாக நடத்தி வருகின்றன. இவ்விழாவின் 7-ம் நாள் நிகழ்வாக ‘இண்டியா கனெக்ட் சிங்கப்பூர் எடிஷன்' என்ற தலைப்பில் சிறப்பு விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சிங்கப்பூர் துணை தூதர் எட்கர் பாங்க் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அவர் பேசும்போது, ‘‘இந்தியாவுக்கும்-சிங்கப்பூருக்கும் இடையிலான உறவு மிகவும் பலமாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவு மட்டுமின்றி கலாச்சார ரீதியிலான உறவும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 2 முதல் 3 மடங்குவரை அதிகரித்திருக்கிறது.
2005-ல் 20 பில்லியன் சிங்கப்பூர் டாலராக இருந்த இரு தரப்பு வர்த்தகம் 2023-ல் 45.6 பில்லியன் சிங்கப்பூர் டாலர் அளவுக்கு உயர்ந்தது. அதேபோல் தொழில் முதலீடுகளும் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. சிங்கப்பூருக்கும் தமிழகத்துக்கும் நிறைய வரலாற்று தொடர்புகள் உள்ளன. 1800-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து வர்த்தகர்கள் சிங்கப்பூருக்கு வந்தனர். டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவும் சிங்கப்பூரும் சிறப்பாக இணைந்து செயல்பட முடியும்” என்றார்.
தொடர்ந்து இந்த விவாத நிகழ்ச்சியில், இந்தியா-சிங்கப்பூர் இடையிலான ராஜ்ஜிய, பொருளாதார, தொழில்நுட்ப உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசியதாவது: உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியா அதிக முதலீட்டுடன் இயங்கி வருகிறது.
நம் நாட்டில் வங்கி நடைமுறைகளில் தொழில்நுட்பங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 11 ஆண்டுகளாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு பிரமிக்கத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பயணத்தில் நம் நாடு சரியான திசையில் பயணம் செய்துகொண்டிருக்கிறது. தொழில்வளர்ச்சிக்கு முதலீடும், தொழில்நுட்பமும் மிகவும் முக்கியமானவை. இந்தியாவில் தேவையான அளவுக்கு தொழிலாளர்கள் உள்ளனர். உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த 2020-களுக்கு பின்னர் உலக நாடுகள் வரி கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கின. இந்தியாவில் உலகமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு வரிகளை குறைத்தோம். அதிக உற்பத்தி, அதிக வர்த்தகம் காரணமாக, உலக நாடுகள் இடையே வர்த்தக சமநிலை இருந்து வருகிறது. ஒருநாட்டில் ஏற்படும் அளவுக்கு அதிகமான உற்பத்தி வளர்ந்து வரும் நாடுகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 2008-ம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று காரணமாக வளர்ந்த நாடுகள் வட்டியை குறைத்தன. எரிபொருள் மானியங்கள் வழங்கின.
வர்த்தகத்துறையில் அடுத்த 25 ஆண்டுகளில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும். எரிசக்தி பாதுகாப்பு, தேவையான அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ), உணவு பாதுகாப்பு, சமமான வருமான பகிர்வு, வேளாண் உற்பத்தி, சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் உற்பத்தியை அதிகரிப்பது போன்றவை அதில் குறிப்பிடத்தகுந்தவை. வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் 5 சதவீதத்தை அதிகரிக்க முடியும்.
பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள சூழலிலும் நம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 2027-2028-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும் என்று சர்வதேச செலவாணி நிதியம் (ஐஎம்எப்) மதிப்பீடு செய்துள்ளது. நமது அண்டை நாடான சிங்கப்பூருடன் இருதரப்பு வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. மேலும், வரியில்லா வர்த்தகம் மேற்கொள்வதுடன் தொடர்பாக ஆசியான் நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் எஸ்.கிருஷ்ணனும் டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக பேசும்போது, ‘‘டிஜிட்டல் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவும், சிங்கப்பூரும் இணைந்து சிறப்பாக பணியாற்ற முடியும். அந்த வகையில், இணைய பாதுகாப்பு, திறன் மேம்பாடு, குவாண்டம் கம்ப்யூட்டிங், ஏஐ, ஸ்டார்ட்-அப்ஸ், தரவு பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கிய டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும், செமிகண்டக்டர் உற்பத்தி தொடர்பாக தனியே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் இரு நாடுகள் இடையே போடப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
நமது டிஜிட்டல் பொருளாதாரம் 30 சதவீதம் வளர்ந்திருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்ப உட்கட்டைப்பு வசதியை மேம்படுத்த அரசு தனியாரும் கூட்டுசேர்ந்து செயல்பட்டு வருகினறன. அனைத்து மக்களுக்கும் டிஜிட்டல் ஆதார் அட்டை வழங்கியுள்ளோம். கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ வாயிலாக ரூ.1500 கோடிக்கு பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது. 5 கோடி பேர் டிஜிட்டல் லாக்கர் கணக்கு வைத்துள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு யுபிஐ வசதி தொடர்பாக சிங்கப்பூருடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அந்த நடைமுறை சிறப்பாக செயல்படுவதால் அதை இதர நாடுகளுடன் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.
சிங்கப்பூர், பிரான்ஸ் நாடுகளுக்கான முன்னாள் இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் பேசுகையில், ‘‘சிறிய நாடான சிங்கப்பூர் உலக அளவில் பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தெற்காசியாவில் வர்த்தகமும், பொருளாதாரமும் வளர்ந்து வரும் சூழலில் சீனா மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. ஆசிய நாடுகள் இணங்கி வருகின்றன. இந்தியா தெற்காசிய நாடுகளுடன் அதிகளவு வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இந்தியா-சீனா உறவு மேம்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டார்.
ஆசிய ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த கிஷோர் மெஹபூபானி பேசுகையில், ‘‘சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் மக்கள் உணவுக்காக திண்டாடினர், கல்வி வசதி கிடையாது. அடிப்படை சுகாதார வசதி இல்லை. ஆனால் இப்போது அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. ஆசிய நாடுகளின் வளர்ச்சி காரணமாக இந்த நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டாக இருக்கும்” என்றார்.
மேலும் தி இந்து பிசினஸ் லைன் ஆசிரியர் ரகுவீர் சீனிவாசன், ஸெட்வெர்க் நிறுவனத்தின் தலைவர் (எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு) ஜோஷ் போல்ஜர் ஆகியோரும் விவாதத்தில் கலந்துகொண்டு பேசினர். சிஐஐ சென்னை மண்டல தலைவர் அஜித் சோர்டியா பேசினார். முன்னதாக, ‘இந்து தமிழ் திசை’ இயக்குநர் நாராயண் லஷ்மண் வரவேற்றுப் பேசும்போது, ‘‘இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே 60 ஆண்டு காலமாக நெருங்கிய உறவு இருந்து வருகிறது. சிங்கப்பூரின் 6-வது தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார, அறிவார்ந்த கூட்டுமுயற்சியாக ‘சிங்கா 60’ கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தக உறவு மட்டுமல்ல கலாச்சார உறவும் தொடர்ந்து பேணப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டார்.
தொடக்கவிழாவில் சிங்கப்பூர் துணை தூதர் வைஷ்ணவி வாசுதேவன், ‘இந்து’ என்.ரவி, ‘இந்து தமிழ் திசை' இயக்குநர்கள் ரமேஷ் ரங்கராஜன், விஜயா அருண், லட்சுமி ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‘சிங்கா 60' நிகழ்ச்சிக்கான பங்குதாரர்களாக சிங்கப்பூர் தூதரகம், டிபிஎஸ் வங்கியும் துணை பங்குதாரர்களாக டிவிஎஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ஓலம் அக்ரி, டிரான்ஸ்வோர்ல்டு, நிப்பான் பெயின்ட் அண்ட் எச்ஒய்சி, ராம்ராஜ் காட்டன், லலிதா ஜுவல்லரி, ரெசிடென்சி டவர்ஸ், ஃபோரம் ஆர்ட் கேலரி, மிஸ்டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்கின் டேல்ஸ், மேவெண்டோயர், சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகியவையும் உள்ளன. இன்டஸ்ட்ரி பார்ட்னர் ஆக சிஐஐ, டி.வி.பார்ட்னராக இ டிவி நவ் ஆகியவை செயல்பட்டன.
இன்றும் நாளையும்: ‘சிங்கா 60' கலைத் திருவிழாவின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக் கிழமை) காலை 11 மணிக்கு அடையாறு பத்மநாப நகர் 5-வது தெருவில் அமைந்துள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் சிங்கப்பூர் கலைஞர் குமாரி நாகப்பன் பங்கேற்கும் கலை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ‘கலை படைப்புகளின் உருவாக்கம்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார்.
நாளை (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரம் ராஜரத்தினம் கலையரங்கில் ‘பாரதியார்- பார்வையிலும், குரலிலும்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாரதியாரின் ஆன்மீக பயணம் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இந்த படத்தை சவுந்தர்யா சுகுமார் ஐயர் தயாரித்துள்ளார். மேலும், ‘நல்லிணக்கத்தில் பாரதியார்’ என்ற தலைப்பில் சிங்கப்பூர்-இந்தியா இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT