Published : 05 Aug 2025 04:28 PM
Last Updated : 05 Aug 2025 04:28 PM
60 ஆண்டு கால உறவு: சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவானது. 1965ஆகஸ்ட் 9 இல், மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுத்தது முதலே இந்தியாவுடன் நெருக்கமான உறவைப் பேணிவருகிறது சிங்கப்பூர். சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களுக்கு அதன் முதல் பிரதமர் லீ குவான் யூ அளித்த முக்கியத்துவம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
வணிகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் இந்தியாவுடனான சிங்கப்பூரின் உறவு பல பத்தாண்டுகளாக உறுதியுடன் நீடிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான 60 ஆண்டுகால உறவைக் கொண்டாடும் வகையில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஆகியோர் 2025 ஜனவரி 16 அன்று டெல்லியில் கூட்டுச் சின்னத்தை வெளியிட்டனர்.
தெற்காசியாவில் ஒற்றுமை: 1966 செப்டம்பரில் இந்தியா வந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார். தெற்காசியாவில் உள்ள நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் வலிமையடைய வேண்டும் என்கிற தனது ஆவலை இந்திரா காந்தியிடம் லீ குவான் யூ தெரிவித்தார். பிற நாடுகளிலிருந்து தரப்படும் அழுத்தங்களை எதிர்கொள்ள இப்படி ஓர் அமைப்பு தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்திரா காந்தி தொடங்கி மன்மோகன் சிங்வரை இந்தியத் தலைவர்களுடன் நட்பை பேணினார் லீ.
வளர்ந்தது வணிகப் பிணைப்பு: தொடக்கம் முதலே சிங்கப்பூரின் வர்த்தக முயற்சிகளுக்கு இந்தியாவின் நிபந்தனையற்ற ஆதரவு நீடித்துவருகிறது. 1968இல் இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. சிங்கப்பூருக்குப் பயணம் சென்றிருந்த பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முன்னெடுப்பைத் தொடங்கிவைத்தார்.
இலகுரக பொறியியல் தயாரிப்புகள்; மின் சாதனங்களைத் தயாரிப்பது தொடர்பான அந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை வளர்த்தது. இன்றைக்கு இந்தியாவின் மிகப் பெரிய ஐந்தாவது வர்த்தகக் கூட்டாளியாகவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முதன்மையான வர்த்தகக் கூட்டாளியாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது!
தொழில்நுட்பத் தொடர்பு: தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்வதிலும் இந்தியாவும் சிங்கப்பூரும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயல்பட்டுவருகின்றன. செமிகண்டக்டர் தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுகாதாரம், திறன் மேம்பாடு என நான்கு அம்சங்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை 2024இல் இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டன.
சிங்கப்பூரின் புதிய பிரதமராகப் பதவியேற்ற லாரன்ஸ் வோங்கை நேரில் சந்தித்து, இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி. 2025ஆம் ஆண்டில் இருதரப்பு உறவுகளின் 60ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவது தொடர்பாகவும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
பொருளாதார உறவு: 2005இல் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையெழுத்தான விரிவான-பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (CECA), இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவில் முக்கிய மைல் கல். சரக்கு -சேவைகளின் வர்த்தகம், முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பு, அறிவியல் - தொழில்நுட்பம், கல்வி, இணையவழி வணிகம், அறிவுசார் சொத்துரிமை, ஊடகம் போன்றவை தொடர்பான விரிவான ஒப்பந்தம் இது. டெல்லிக்கு வருகை தந்திருந்த சிங்கப்பூரின் அப்போதைய பிரதமர் லீ ஹிஸெய்ன் லூங்குக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாதுகாப்பில் ஒத்துழைப்பு: கடந்த சில பத்தாண்டுகளில் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான உறவில் கணிசமான மேம்பாடு ஏற்பட்டிருக்கிறது. 1993இல், இந்திய கடற்படையின் வலிமை அதிகரித்துவந்த நிலையில், சிங்கப்பூர் கடற்படையினருடன் இணைந்து இந்தியா நடத்திய ஒத்திகை உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. 2003இல் சிங்கப்பூரின் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் டியோ சீ ஹீன், நான்கு நாள் பயணமாக இந்தியா வந்து, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸைச் சந்தித்தார்.
அப்போது பாதுகாப்பு தொடர்பான விரிவான ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். 2024 செப்டம்பரில் பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றிருந்தபோது சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தானது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT