Published : 04 Aug 2025 03:59 PM
Last Updated : 04 Aug 2025 03:59 PM
திறமையான கணக்காளர்கள்: சிங்கப்பூரில் இருந்த தொழில்முனைவோருக்குத் தேவையான பணத்தைக் கடனாகத் தருவது, ரப்பர், தகரம், சில்லறை வர்த்தகம் போன்ற தொழில்களில் முதலீடு செய்வது பணம் கொடுக்கல் வாங்கல் முறையைப் பதிவுசெய்து வைப்பது போன்றவற்றில் செட்டியார்கள் ஈடுபட்டனர். காலனி ஆதிக்கத்தின்போது சீன, ஐரோப்பிய வங்கிகளிடம் இருந்து தொழில்முனைவோரால் பணம் பெற முடியாத நிலை இருந்தது.
அப்போது செட்டியார்களே தொழில்களுக்குக் கடன் கொடுத்து உதவினர். வரவு செலவு கணக்குகளைத் தமிழ் மொழியிலேயே நிர்வகித்து வந்த செட்டியார்கள், ‘ஐந்தொகை’ என்னும் முறையைப் பின்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. சிங்கப்பூரின் வர்த்தகத்தை விரிவுபடுத்தத் திறமையான கணக் காளர்களாகச் செட்டியார்கள் பணியாற்றினர்.
200 ஆண்டு வரலாறு: 1824ஆம் ஆண்டில் சிங்கப்பூரில், பிரிட்டன் தனது காலனி ஆதிக்கத்தைத் தொடங்கியபோது, தமிழ்நாட்டில் இருந்து கடல்வழிப் பயணம் செய்த வர்த்தகச் சமூகமான நகரத்தார்களும் (நாட்டுக்கோட்டை செட்டியார்) சிங்கப்பூரைச் சென்றடைந்தனர். வர்த்தகம் செய்வதற்கான மையப்பகுதியான சிங்கப்பூர் மார்க்கெட் தெருவில் ’கிட்டங்கிகள்’ (கடைவீடுகள்) அமைத்து செட்டியார்கள் வட்டித் தொழிலில் ஈடுபட்டனர்.
டிபிஎஸ் வங்கி: 1968இல் சிங்கப்பூர் அரசால் ‘டிபிஎஸ்’ (Development bank of Singapore Limited) வங்கி தொடங்கப்பட்டது. 1970களில் செட்டியாரின் ‘கிட்டங்கி’களைப் போன்று பிற கடன் வாங்கும் முறைகள் மெல்ல மறையத் தொடங்கின. அடுத்த 30 ஆண்டுகளில் தொழில்துறைக்கு நிதி வழங்குதல், முதலீடுகள், சில்லறை வணிகம், நுகர்வோர் வங்கிச் சேவைகள் போன்று பலவற்றில் டிபிஎஸ் வங்கி விரிவாக்கம் செய்யப்பட்டது.
நவீன வங்கி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. டிபிஎஸ் வங்கியின் கிளைகள் உலக நாடுகளில் தடம் பதித்தன. இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள டிபிஎஸ் கிளைகளில் டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தி வங்கித் துறையில் முன்னோடியாக டிபிஎஸ் வலம் வருகிறது. ஆரம்பம் முதல் மேம்பட்ட வங்கிச் சேவைகளை வழங்கிவரும் டிபிஎஸ், சிங்கப்பூரின் வர்த்தக வளர்ச்சிக்குத் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது.
மற்ற நிறுவனங்கள்: காலனி ஆதிக்கத்தில் இருந்து 1957இல் விடுதலையானபோது, மலேசியாவின் ஒரு பகுதியாக சிங்கப்பூரும் விடுதலை பெற்றது. எனினும் தொடர்ந்து ஒரே நாடாக இயங்க முடியாத சூழல் உண்டானபோது, 1965 ஆகஸ்ட் 9ஆம் தேதி தனி நாடாக சிங்கப்பூர் பிரகடனப்படுத்திக்கொண்டது.
இருந்தபோதும் பிரிட்டன் காலனி ஆதிக்கக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘கடன் கொடுப்போர் சட்டம்’ (Moneylenders Act அதற்குப் பிறகும் அமலில் இருந்தது. 2008ஆம் ஆண்டில் அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதற்கிடையே பாரம்பரியக் கடன் வழங்கும் முறையைத் தாண்டி மலேயா செட்டியார் வங்கி, சிங்கப்பூர் செட்டியார் சேம்பர் போன்ற நிறுவனங்களையும் தொடங்கி நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றினர்.
பரஸ்பர வளர்ச்சி: சிங்கப்பூரில் பாரத ஸ்டேட் வங்கியைப் (SBI) போன்ற இந்திய ஜாம்பவான் வங்கிகள் கிளையை நிறுவிச் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், சிங்கப்பூர் வங்கியான டிபிஎஸ். (DBS) வங்கியும் இந்தியாவில் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக விரிவு படுத்தி வருகிறது. சிங்கப்பூரின் பொருளாதார அடித்தளத்தை ஒரு சமூகத்தினர் வளர்த்த நிலையிலிருந்து தொடங்கி, இன்றைக்கு இரு நாடுகளும் வங்கிச் சேவைகளைத் தாண்டிப் பொருளாதாரத் துறையில் பரஸ்பர வளர்ச்சியைக் கண்டுவருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT