Published : 04 Aug 2025 06:35 AM
Last Updated : 04 Aug 2025 06:35 AM

நல்லாசிரியர்களால் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்: அன்பாசிரியர் விருது நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்

`இந்து தமிழ் திசை' சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்ற விழாவில் `அன்பாசிரியர் விருது' பெற்ற ஆசிரியர்களுடன் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், `இந்து தமிழ் திசை' தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்பிரமணியம். | படங்கள்: ர. செல்வமுத்துகுமார் |

திருச்சி: நல்லாசிரியர்களால் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும் என திருச்சியில் நேற்று நடைபெற்ற அன்பாசிரியர் விருது வழங்கும் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதத்துடன் தெரிவித்தார். பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை அளிப்பதுடன், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளி

களின் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் `இந்து தமிழ் திசை' நாளிதழ், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் சேர்ந்து `அன்பாசிரியர் விருதை' 2020-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

தொடர்ந்து 5-வது முறையாக இந்த ஆண்டுக்கான `அன்பாசிரியர் விருது' பெற தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர்.

அவர்களில் 160 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மூத்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக்குழுவினரால் இணைய வழியில் நேர்காணல் நடத்தப்பட்டு, 40 பேர் அன்பாசிரியர் விருதுக்கும், 4 பேர் முன்மாதிரி அன்பாசிரியர் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு விருது வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தமிழ்நாடு ஹோட்டல் காவேரி கான்பரன்ஸ் ஹாலில் நேற்று விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பேசிய, `இந்து தமிழ் திசை' தலைமை நிர்வாக அலுவலர் சங்கர் வி.சுப்பிரமணியம் தனது நோக்க உரையில், ‘‘கடமைக்கு அப்பால் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு மாணவரை சிறப்பான மனிதராக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. அப்படிப்பட்ட ஆசிரியர்களை தேடிப்பிடித்து கவுரவப்படுத்தும் பணியை செய்து வருவதில் `இந்து தமிழ் திசை' பெருமை கொள்கிறது’’ என்றார்.

ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் பேசும்போது, ‘‘கல்வியே சிறந்த பேராயுதம். அன்பு, அறிவு, அறம் ஆகிய மூன்றும் நிறைந்த ஆயுதமான கல்வியை மாணவர்கள் முறையாக கைக்கொள்ள ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டும். நமக்கு துடிப்புமிக்க கல்வி அமைச்சர் கிடைத்திருக்கிறார். அன்பாசிரியர் விழாவில் தவறாமல் பங்கேற்கிறார்.

அவரே அடுத்த ஆண்டு அன்பாசிரியர் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும். சராசரி மாணவராக இருந்த நான், வாழ்வில் முன்னேற காரணமாக இருந்தவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்களின் அன்புதான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியது’’ என்றார்.

விழாவில், ஆசிரியர்களுக்கு அன்பாசிரியர் விருது, சான்றிதழ் வழங்கி, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றியது: கல்விப் பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் `இந்து தமிழ் திசை' சார்பில் ஆண்டுதோறும் அன்பாசிரியர் விருது வழங்கி வருவது பாராட்டுக்குரியது. அன்பாசிரியர் விருதுபெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்வை எனது குடும்ப விழாவாகவே கருதுகிறேன்.

நான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான பிறகு 4 ஆண்டுகளாக, ஆண்டு தவறாமல் தொடர்ச்சியாக கலந்துகொள்ளும் ஒரே விழா அன்பாசிரியர் விருது வழங்கும் விழா மட்டும் தான். எனது மனதுக்கு நெருக்கமான, பிடித்தமான விழா என்பதால் தவறாமல் இதில் பங்கேற்கிறேன். இந்த விழா தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். தமிழக பள்ளிக்கல்வித் துறையில் முதல்வர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்களை எல்லாம் வெற்றித் திட்டங்களாக மாற்ற ஆசிரியர்களால் தான் முடியும்.

பள்ளிக்கூடம் எனும் வயலில் மாண வர் எனும் விதையை விதைத்து பலன் தரும் மரமாக ஆக்கும் உழவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்கள், செயல்பாடுகள் குறித்து களத்துக்கு சென்று அறிந்துகொள்வதற்காகவே ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஆசிரியர்களை சந்தித்து வருகிறேன். நல்லாசிரியர்களால் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.

ஒரு தாய் தனது குழந்தையை 10 மாதம்தான் கருவில் சுமக்கிறார். ஆனால், ஒரு ஆசிரியர் தனது மாணவன்எனும் குழந்தையை 12 ஆண்டுகள் மனதில் சுமக்கிறார். நான் இந்த மேடையில் நிற்கக் காரணமானவர்கள் ஆசிரியர்கள். அந்த அன்பாசிரியர்களை பாராட்ட வேண்டியது என் கடமை.

உங்களைப் பெருமைப்படுத்துவதால் நானும் பெருமையடைகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த அரசின், சமூகத்தின் மதிப்புமிக்க சொத்து. நீங்கள் நலமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், நிகழ்ச்சி பங்குதாரர்கள், நடுவர் குழுவினர் கவுரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் `இந்து தமிழ் திசை' விளம்பர பிரிவு பொதுமேலாளர் வி.சிவக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், திருச்சி மாநகராட்சி 3-வது மண்டலக் குழு தலைவர் மு.மதிவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவை `இந்து தமிழ் திசை' முதன்மை உதவி ஆசிரியர் ம.சுசித்ரா, முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவின் பங்குதாரராக டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா செயல்பட்டது. லெட்சுமி செராமிக்ஸ், கிராமாலயா தொண்டு நிறுவனம், பொன்வண்டு டிடர்ஜென்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து விழாவை நடத்தின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x