Published : 02 Aug 2025 04:04 PM
Last Updated : 02 Aug 2025 04:04 PM
சுவையின் புதிர்: சிங்கப்பூரில் குடியேறிய பிற நாட்டு மக்களின் உணவு வகைகளைத் தங்கள் மண்ணுக்கேற்ற முறையில் மாற்றிக்கொண்டு தனித்தன்மையோடு திகழ்பவை சிங்கப்பூர் உணவு வகைகள்.
மலேசியா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளோடு அண்டை நாடுகள் சிலவற்றின் பாரம்பரியமும் புதுமையும் இணைந்த கலவையாகத் திகழும் புதிர்தான் சிங்கப்பூர் உணவின் தனித்தன்மை! உதாரணத்துக்கு, தெற்கு சீனாவின் ‘பக் குட் தே’வும் தென்னிந்தியாவின் ‘மீன் தலைக் கறி’யும் இன்றைக்கு சிங்கப்பூரின் தனித்துவ உணவு வகைகள்! பொதுவாக, பெரும்பாலான ஆசிய நாடுகளில் அரிசிச் சோறு அல்லது நூடுல்ஸ் முதன்மை உணவாக இருக்கும்.
ஆனால், சிங்கப்பூரில் இந்த இரண்டுமே உண்டு. சோறு, நூடுல்ஸ், கடல் உணவு ஆகிய மூன்றும்தான் இங்கே அடிப்படை. அவற்றை வைத்துத்தான் புதுப்புது உணவு வகைகளை இவர்கள் படைக்கிறார்கள்.
பாரம்பரியப் படையல்: நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பாரம்பரிய இந்திய உணவுவகைகளை இந்தத் தலைமுறையின ருக்கு அறிமுகப்படுத்துவதை இலக்காகக் கொண்டு இயங்குகிறது ‘பூமி’ உணவகம். ஒவ்வொரு கவளமும் ஒரு கதையைச் சொல்லும் வகையில் பன்னெடுங்காலமாக வீடுகளில் பாரம்பரிய முறைப்படி சமைக்கப்பட்ட உணவை அவற்றின் பிராந்தியச் சுவையோடு மீட்டுருவாக்கிப் பரிமாறுகிறார்கள்.
செட்டிநாடு சிக்கன், இந்தூரின் தெருவோர உணவான சராஃபாவைப் பின்பற்றித் தயாரிக்கப்படும் இந்தூரி பீட்ரூட் சிக்கி, துளசி மலாய் பனீர், லக்னோவின் ககோரி கபாப், மகாராஷ்டிரத்தின் சிக்கன் கபாப், டெல்லி சிக்கன் டிக்கா, காஷ்மீரி மிர்ச்சி ஜிங்கா (இறால்), மங்களூரு மீன் கறி என ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கவையாக இருக்கின்றன.
காரம் குறையாத கடுகு: மேற்கு வங்கம் - பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களின் உணவு வகைகள் ‘மஸ்டர்ட்’ (கடுகு) உணவகத்தில் கிடைக்கின்றன. சில்லி லாசுனி நாண், முர்கிர் கோஷா, கொல்கத்தா ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி, கடுகு சாஸ், தாமோதர் பனீர் உள்ளிட்ட உணவு வகைகள் பாரம்பரியச் சுவையோடு இங்கே கிடைக்கின்றன.
டெல்லி 6: சிங்கப்பூரில் இந்திய உணவு வகைகளை ருசிக்க விரும்புகிற வர்களுக்கான இடம் ‘லிட்டில் இந்தியா’. இங்கே இந்திய உணவுக் கடைகள் நிறைய இருக்கின்றன.
அவற்றில் ஒன்றான ‘டெல்லி 6’ உணவகத்தில் பட்டர் நாண் பிரெட், லஸ்ஸி, ஹைதராபாதி மட்டன் பிரியாணி, தால் மக்காணி, சீரகச் சோறு, மீன் தந்தூரி, இறால் கபாப் போன்ற இந்திய உணவு வகைகள் கிடைக்கின்றன. பழங்கள் - காய்கறிகள் சேர்க்கப்பட்டோ, தந்தூரியில் சுடப்பட்டோ, ஹம்பர்கர் அல்லது ஸ்டூ போலவோ பல வகைகளில் இறால் கபாப் இங்கே கிடைக்கிறது.
ஹாக்கர் சென்டர்: உணவகங்களில் சாப்பிடுவது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு கட்டுப்படி
ஆகும் விலையில் பலவிதமான உணவு வகைகள் கிடைக்கின்றன என்பதால் பலரும் வெளியே சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். இவர்களுக்குக் கை கொடுப்பதுபோல் தெருவோரக் கடைகள் தொடங்கிப் பலவகை யான உணவகங்கள் கொண்ட ‘ஹாக்கர் சென்டர்’ வரை உணவுக்குப் பஞ்சமில்லை!
கிராமத்து உணவு: தென்னிந்திய உணவகமான ‘வில்லேஜ் கறி’யில் சோறு, ஆட்டுக்கறிக் குழம்பு, காய்கறிக்கூட்டு என எளிமையான தென்னிந்திய உணவு கிடைக்கிறது. செண்டோசா கடற்கரையில் இருக்கும் ‘டிராபீட்சா’ உணவகத்தில் கணவாய், சால்மன் மீன், இறால், ஆக்டோபஸ் போன்றவற்றை வைத்துச் செய்யப்பட்ட பீட்சா வகைகள் கிடைக்கின்றன.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உள்ள உணவகத்தில் சால்மன் தாமா, கணவாய் வறுவல், டோரி மீன் (‘ஃபைண்டிங் டோரி’ படத்தில் வரும் மீன் வகை), கானாங்கெளுத்தி வறுவல், சோறு - வறுத்த வாத்துடன் தேனும் சாஸும் கலந்த சாறு (இது சிங்கப்பூரின் தனித்துவ உணவு வகையில் ஒன்று) போன்றவை கிடைக்கின்றன.
சென்னையில் சிங்கப்பூர்: இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இருக்கும் உணவு உறவின் நீட்சியாக இங்கிருக்கும் சிங்கப்பூர் உணவகங்கள் விளங்குகின்றன. சென்னை தி.நகரில் இருக்கும் ‘பாண்டன்’ (பிரியாணி இலை) உணவகத்தில் சிங்கப்பூர் - மலேசியப் பாரம் பரிய உணவு வகைகள் கிடைக்கின்றன.
18ஆம் நூற்றாண்டில் சீனப்பகுதியில் புழக்கத்தில் இருந்த உணவை அடிப்படையாகக் கொண்ட உணவு வகைகள் இங்கே கிடைக்கின்றன. சிங்கப்பூர் செய்முறையில் இந்தியாவில் தயாராகும் உணவு வகைகள் ‘நாசி அண்டு மீ’யில் கிடைக்கின்றன. இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் உணவு வகைகளும் இங்கே கிடைக்கும். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘ஃபார் ஈஸ்ட்’ உணவகத்திலும் சிங்கப்பூர் உணவு கிடைக்கிறது. இறால் கருவாட்டில் செய்யப்படும் XO ஜம்போ இறால், இந்த உணவகத்தின் அடையாள உணவு.
இந்திய மசாலா: இந்தியாவில் பயன் படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் அனைத்தும் சிங்கப்பூரி லும் உண்டு. சிங்கப்பூரின் முக்கிய உணவு வகைகள் பலவற்றில் (சில்லி அண்ட் பெப்பர் நண்டு, ஹைனான் சிக்கன் ரைஸ், வாழையிலை மீன் கறி) இஞ்சி, கறுப்பு - வெள்ளை மிளகு, மிளகாய், பூண்டு உள்ளிட்ட மசாலாக்கள் நிச்சயம் இருக்கும்.
‘சிங்கா 60’ நிகழ்ச்சிகளைப் பற்றி கூடுதலாக அறியவும், பங்கேற்பதற்கு பதிவு செய்யவும் இதோ இணைப்பு > சிங்கா 60 கலை திருவிழா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT