Published : 01 Aug 2025 03:04 PM
Last Updated : 01 Aug 2025 03:04 PM
சிங்கப்பூரின் 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு ‘சிங்கா 60’ என்ற பிரம்மாண்ட கலை திருவிழா சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ள இந்த விழாவில், கலை, கலாச்சாரம், பொருளாதாரம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இந்த விழா அடையாறு பத்மநாபா நகர் 5-வது தெருவில் அமைந்துள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் நடக்கிறது.
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்: இந்தியக் கலை வடிவங்களை சிங்கப்பூரில் வசிக்கும் அனைத்து இன மக்களிடமும், அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டுசேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதே சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் (SIFAS-Singapore Indian Fine Arts Society). பன்மைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் சிங்கப்பூரின் தனித்துவத்துக்குப் பங்களிக்கும் வகையில் இந்திய நுண்கலைகளை சிங்கப்பூரில் பரப்பிவருகிறது இந்தக் கழகம்.
இந்தியக் கலைகளை சிங்கப்பூர் மாணவர்களுக்குக் கற்பிக்கும் பணி 1951இல் தொடங்கியது. பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, இந்துஸ்தானி இசை கற்றுக்கொள்ளவும் வயலின், மிருதங்கம், வீணை ஆகியவை வாசிப்பதற்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. நுண்கலைகளில் தேர்ந்த இந்தியக் கலைஞர்கள் பலர் இதற்காக அழைக்கப்பட்டனர்.
ஆலமரம் போல் வளர்ந்துள்ள இந்தக் கழகத்தில் 2,000 உறுப்பினர்கள் உள்ளனர். 30 ஆசிரியர்களிடம் 1,800 மாணவர்கள் இந்தியாவின் கலைகளைக் கற்று வருகிறார்கள். 75 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்தக் கழகம் இந்தியா – சிங்கப்பூர் இடையேயான பாரம்பரிய, கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
பொன்னியின் செல்வன்: கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாடகம் முதல் முறையாக சிங்கப்பூரின் புகழ்பெற்ற எஸ்பிளனேடு (Esplanade) அரங்கில் 2017 ஏப்ரல் மாதம் நிகழ்த்தப்பட்டது. தமிழகத்தில் 33 முறைகளுக்கு மேல் ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தை நிகழ்த்திய எஸ்.எஸ். இண்டர்நேஷனல் லைவ், சிங்கப்பூரில் Arte Compass நிறுவனத்துடன் இணைந்து, பொன்னியின் செல்வனை அரங்கேற்றியது.
தமிழ் நாடக உலகில் தனித்தன்மையுடன் செயல்பட்டுவரும் Magic Lantern குழு பொன்னியின் செல்வன் நாவலை நாடக வடிவமாக வழங்கியது. இதில் திறமையான சிங்கப்பூர் கலைஞர்களும் இணைந்து நடித்தனர். சிங்கப்பூருக்கு பொன்னியின் செல்வனைக் கொண்டுசெல்ல வேண்டும் என்கிற எங்களது விருப்பம், தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக நிறைவேறியது என்கிறார் எஸ்.எஸ். இண்டர்நேஷனல் லைவ் இயக்குநர் இளங்கோ குமணன். ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் திரண்டுவந்து பார்த்து, ரசித்த இந்த நாடகம், சிங்கப்பூர் தமிழர்களிடையே ஒரு மாத காலத்துக்குப் பேசுபொருளாக நீடித்தது.
டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்: டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் (Temple of Fine Arts) 1981ஆம் ஆண்டு சுவாமி சாந்தானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது. கலைகள் மூலமாக மனித குலத்தை மேம்பாடு அடைய வைக்கும் நோக்கத்துடன் இந்தியக் கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், கற்றுக்கொள்ளும் மாணவர்களும் முழுமையான மனஅமைதியுடன் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.
சிங்கப்பூரில் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், இந்துஸ்தானி இசை, நடனம் ஆகியவற்றைக் கற்கவும், மிருதங்கம், புல்லாங்குழல், தபேலா, வயலின், வீணை ஆகிய இசைக் கருவிகளை வாசிக்கவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் அற்புதமான கலை, கலாச்சாரப் பாரம்பரியத்தை உணர வைக்கும் பணிகளை உலகின் பல நாடுகளில் இந்த நிறுவனம் செய்துவருகிறது.
சிங்கப்பூர் இந்திய ஆர்கெஸ்ட்ரா & பாடகர்கள் குழு: சிங்கப்பூர் இந்திய ஆர்கெஸ்ட்ரா & பாடகர்கள் குழு (Singapore Indian Orchestra & Choir - SIOC) சிங்கப்பூரில் 37 ஆண்டுகள் பழமையான ஒரு நிகழ்த்துக் கலைக் குழு. பாரம்பரியச் செழுமை மிகுந்த இந்திய இசையைத் தற்கால இசைத் தொகுப்புகளுடன் இணைத்து, இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் தேர்ந்தது இந்தக் குழு. 50-க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்ட இந்தக் குழு, உலகெங்கும் இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. உலகின் மிகப்பெரிய முன்னோடி இசைக் குழுக்களில் இதுவும் ஒன்று.
அப்சரஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனம்: இந்திய நாட்டியக் கலையைச் சர்வதேச அளவில் பரப்பி வரும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று அப்சரஸ் ஆர்ட்ஸ். சென்னை கலாக்ஷேத்ராவில் பயின்று, அங்கேயே ஆசிரியர்களாகவும் பணியாற்றிய எஸ்.சத்தியலிங்கம், நீலா சத்தியலிங்கத்தால் 1977இல் சிங்கப்பூரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
பரதநாட்டியக் கலையை அதன் தொன்மைச் சிறப்பு மாறாமல், அதே நேரத்தில் இன்றைய நவீனத்தையும் புகுத்தி அப்சரஸ் ஆர்ட்ஸ் நடன நிறுவனம் மறுவரையறை செய்துள்ளது. உலகளாவிய பன்முகக் கலாச்சாரம் கொண்ட கதைகளின் கருப்பொருள்களுடன், இன்றைய பார்வையாளர் களுக்கு ஏற்ற வகையில் நவீனக் கலைப் படைப்புகளை உருவாக்கும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வந்திருக்கிறது. சர்வதேச அளவில் நடைபெறும் கலைக் கண்காட்சிகளுக்காக அதிகம் பயணம் செய்யும் நிறுவனமாக அப்சரஸ் திகழ்கிறது.
‘சிங்கா 60’ நிகழ்ச்சிகளைப் பற்றி கூடுதலாக அறியவும், பங்கேற்பதற்கு பதிவு செய்யவும் இதோ இணைப்பு > சிங்கா 60 கலை திருவிழா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT