Published : 01 Aug 2025 02:59 AM
Last Updated : 01 Aug 2025 02:59 AM
சென்னை: சிங்கப்பூரின் 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு ‘சிங்கா 60’ என்ற பிரம்மாண்ட கலை திருவிழா சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ள இந்த விழாவில், கலை, கலாச்சாரம், பொருளாதாரம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்து வருகிறது. சிங்கப்பூருக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவு மிகவும் தனித்துவம் மிக்கது. சிங்கப்பூரின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் 60-வது தேசிய தினம் விரைவில் கொண் டாடப்பட உள்ளது.
இந்நிலையில், ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து குழுமம்’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து ‘சிங்கா 60' என்ற பிரம்மாண்ட கலை திருவிழாவை சென்னையில் நடத்துகின்றன. கலாச்சாரம், பொருளாதாரம் சார்ந்த நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த விழா அடை
யாறு பத்மநாபா நகர் 5-வது தெருவில் அமைந்துள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
முதல் நாளான இன்று ‘நகரத்தின் சிந்தனைகள்’ என்ற பெயரில் சிறப்பு ஓவிய-சிற்ப கண்காட்சி நடைபெறுகிறது. இதில் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஓவியர்கள், சிற்ப கலைஞர்களின் படைப்புகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, குமாரி நாகப்பன், கவிதா பத்ரா, பி.ஞானா, மகாலட்சுமி கண்ணப்பன், ஆர்யன் அரோரா உட்பட பலரின் படைப்புகளை இந்தக் கண்காட்சியில் கண்டுகளிக்கலாம்.
கண்காட்சியை தொடர்ந்து ஓவிய, சிற்ப கலைஞர்கள் பங்கேற்கும் குழு விவாதம் நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்வதி நாயர் நெறிப்படுத்துகிறார். 2-வது தினமான நாளை (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ‘முச்சந்தி' என்ற தலைப்பில் நாடகம் ராஜா அண்ணாமலைபுரம் துர்காபாய் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள ராஜரத்தினம் கலையரங்கில் அரங்கேற்றப்படுகிறது. இந்நாடகத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த அகம் தியேட்டர் லேப் அரங்கேற்றுகிறது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் ‘சிங்கா 60' கலை திருவிழாவில், இசை, நாடகம், ஆவணப்படம், அரசியல், கலை, கலாச்சாரம், சமையல், குழு விவாதம், கருத்தரங்கம் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை சுவைக்கலாம்.
இந்நிகழ்ச்சிக்கான பங்குதாரர்களாக சிங்கப்பூர் தூதரகம், டிபிஎஸ் வங்கியும் துணை பங்குதாரர்களாக டிவிஎஸ், லார்சன் அண்ட் டூ ப்ரோ, ஓலம் அக்ரி, டிரான்ஸ்வோர்ல்டு, நிப்பான் பெயின்ட் அண்ட் எச்ஒய்சி, ராம்ராஜ் காட்டன், லலிதா ஜுவல்லரி, ரெசிடென்சி டவர்ஸ், போரம் ஆர்ட் கேலரி, மிஸ்டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்கின் டேல்ஸ், மேவெண்டோயர், சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகியவையும் உள்ளன.
மேற்கண்ட நிகழ்ச்சிகளைப் பற்றி கூடுதலாக அறியவும், பங்கேற்பதற்கு பதிவு செய்யவும் இதோ இணைப்பு > சிங்கா 60 கலை திருவிழா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT