Published : 29 Jul 2025 06:36 AM
Last Updated : 29 Jul 2025 06:36 AM
சென்னை: தென்கிழக்கு ஆசியாவின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் பல்வேறு துறைகளில் முன்மாதிரி நாடாக விளங்குகிறது. சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. குறிப்பாக சிங்கப்பூர், தமிழ்நாடு இடையிலான உறவு தனித்துவம் மிக்கது. சிங்கப்பூரின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. ராஜ்ஜிய மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியா, சிங்கப்பூர் இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது.
விரைவில் சிங்கப்பூரின் 60-வது தேசிய தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் ‘சிங்கா 60’ என்ற விழா நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் கலாச்சார, பொருளாதாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் இடம்பெறும். ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து குழுமம்’ மற்றும் ‘தி இந்து பிசினஸ்லைன்’ இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.
ஆகஸ்ட் 1-ம் தேதி ‘நகரத்தின் சிந்தனைகள்’ என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி நடைபெறும். இதில் சிங்கப்பூர், இந்தியாவைச் சேர்ந்த ஓவியர்கள், சிற்பிகளின் படைப்புகள் இடம்பெறும். குறிப்பாக குமரி நாகப்பன், கவிதா பத்ரா, பி.ஞானா, மகாலட்சுமி கண்ணப்பன், ஆர்யன் அரோரா உட்பட பலரின் படைப்புகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன ஆக.1-ம் தேதி தொடங்கும் இக்கண்காட்சி ஆக. 30-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.
மேலும் ஆக.2-ம் தேதி ‘முச்சந்தி' என்ற தலைப்பில் நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த அகம் தியேட்டர் லேப் இந்த நாடகத்தை அரங்கேற்ற உள்ளது.
ஆக.4, 5 ஆகிய தேதிகளில் ‘ஸ்கிரீன் சிட்டி’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், இந்தியத் திரைப்படங்களில் சிங்கப்பூர் எவ்வாறு சித்தரிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து சுவாரசியமாக விவரிக்கப்படும்.
ஆக.7-ம் தேதி ‘இண்டியா கனெக்ட்- சிங்கப்பூர் எடிஷன்’ என்ற தலைப்பில் சிறப்பு விவாத நிகழ்ச்சி நடைபெறும். இதில் இரு நாடுகள் இடையிலான ராஜ்ஜிய, பொருளாதார, தொழில்நுட்ப உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். ஆசிய ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த கிஷோர் மதுபானி, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் கிருஷ்ணன், சிங்கப்பூர், பிரான்ஸ் நாடுகளுக்கான முன்னாள் இந்திய தூதர் ஜாவத் அஷ்ரப் உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஆக.9-ம் தேதி ‘சக்திதாசன்’ என்ற தலைப்பில் மகாகவி பாரதியாரின் சிறப்பு ஆவண படம் திரையிடப்படும். இந்த ஆவண படத்தை சௌந்தர்யா சுகுமார் தயாரித்துள்ளார். அன்றைய தினம் ‘கேபெல்லா’ என்ற இந்திய, சிங்கப்பூர் பாணி இசைக் கச்சேரி நடைபெறும். ஆக.1 முதல் 10-ம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘காலம்காலமாக சிங்கப்பூர்’ (Singapore through the ages) என்ற தலைப்பில் இந்து குழுமத்தின் ஆவணக் காப்பகத்தின் தொகுப்பு அடங்கிய சிறப்புக் கண்காட்சி நடைபெறும்.
சிங்கப்பூர் அரசியல், கலாச்சாரம், கலை, சமையல், அந்த நாட்டின் வங்கித்துறையில் தமிழக நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தின் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான ஆவணங்கள் கண்காட்சியில் இடம்பெறும். ஆகஸ்ட் 6-ல் அரவிந்த் குமாரசாமி, ஆகஸ்ட் 8-ல் சிற்பி குமரி நாகப்பன் ஆகியோர் சிறப்புரை யாற்றுவார்கள்.
‘சிங்கப்பூரின் சுவை' என்ற பெயரில் சிங்கப்பூர் சமையல் கலைஞர் சௌமியா வெங்கடேசனின் பிரம்மாண்ட உணவுத் திருவிழா, சென்னை ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் சோ யூ, மிஸ்டர் ஓங், நாசி அண்ட் மீ ஆகிய பிரபல ஹோட்டல்களும் பங்கேற்கின்றன.
நிகழ்ச்சிக்கான பங்குதாரர்களாக சிங்கப்பூர் தூதரகம், டிபிஎஸ் வங்கியும் துணை பங்குதாரர்களாக டிவிஎஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ஓலம் அக்ரி, டிரான்ஸ்வோர்ல்டு, நிப்பான் பெயின்ட் அண்ட் எச்ஒய்சி, ராம்ராஜ் காட்டன், லலிதா ஜுவல்லரி, ரெசிடென்சி டவர்ஸ், போரம் ஆர்ட் கேலரி, மிஸ்டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்கின் டேல்ஸ், மேவெண்டோயர், சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகியவை உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT