Published : 17 Aug 2024 07:05 AM
Last Updated : 17 Aug 2024 07:05 AM
சென்னை: டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கும் விழா சென்னையில் நாளை மறுநாள் (ஆக. 19) நடைபெறுகிறது. இந்த நிகழ்வை, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழகப் பிரிவு, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில், மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும், அர்ப்பணிப்போடும் செய்துவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மண்டலங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் நாளை மறுநாள் (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு ஆழ்வார்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விருதுகளை வழங்க உள்ளார்.
இதில், இந்திய மருத்துவ சங்க (ஐஎம்ஏ) தமிழக தலைவர் டாக்டர் கே.எம்.அபுல்ஹசன், ஐஎம்ஏ மதிப்புறு மாநிலச் செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு, மதிப்புறு நிதிச் செயலாளர் டாக்டர் எஸ்.கெளரி சங்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழாவில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக் குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 15 மாவட்டங்களைச் சேர்ந்த 70 மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, கவுரவிக்கப்பட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT