Published : 20 Mar 2023 06:16 AM
Last Updated : 20 Mar 2023 06:16 AM
நாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு அரசுஊழியருக்கும் இருக்க வேண்டும் என்பதை பொட்டில் அடித்ததுபோல சொல்லும் நாடகம்‘அச்சம் என்பது இல்லையே’. இப்படியொரு நாடகத்தை இயக்கியுள்ள 80 வயது இளைஞரான குடந்தை மாலியின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். நாடகத்துக்கான கதை, வசனத்தை கேஎஸ்என் சுந்தர் எழுதியுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக நடக்கப்போகும் ‘பாரத் பந்த்’தில் வன்முறைகள் நடந்தால், அதற்குஎதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அரசு அலுவலகத்துக்கு ரகசியமாக ஓர் உத்தரவு வருகிறது. அது கசிந்து, ஒரு பத்திரிகையிலும் வெளியாகிவிடுகிறது. அதை வெளியே கசியவிட்டது யார் என்றுதுறை ரீதியாக விசாரணை நடக்கிறது.
விசாரணையின் போக்கில், தன்னுடன் பணிபுரியும் அப்பாவியான கேசவ் குற்றவாளி ஆக்கப்படுவதை பொறுக்காத துர்காபொங்கி எழுகிறார். உத்தரவை தான்தான் வெளியே கசியவிட்டதாக சொல்லும் துர்கா, ஆனால்தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்கிறார். விசாரணை முடிவு என்னவாகிறது? முக்கியமான ரகசிய உத்தரவை கசியவிட்ட துர்காவுக்கு என்ன நேர்கிறது? தண்டனை கிடைத்ததா? என்பதை பரபரப்பான காட்சிகள் வழியே நமக்கு சொல்கிறது நாடகம்.
அலுவலகத்தின் உயர் அதிகாரி முருகபூபதியாக நடிக்கும் ஆனந்த் னிவாஸ், துணை அதிகாரி கேசவ் பாத்திரத்தை ஏற்றுள்ள கணேஷ் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளிக்கின்றனர். ஒட்டுமொத்த நாடகத்தையும் துர்கா (ஐஸ்வர்யா கணேஷ்) பாத்திரமே தாங்கிப் பிடிக்கிறது. இறுதியில் அவர் எடுக்கும் முடிவிலும் உத்வேகம் இருக்கிறது.
பத்திரிகைகளில் செய்தியாளர்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரம்,உள்நாட்டு அரசியல், நாட்டில்அகதிகளின் நிலை என எல்லாவற்றையும் ஓரவஞ்சனை இல்லாமல் விமர்சிக்கின்றன நாடகத்தின் வசனங்கள். பல இடங்களில் இயல்பாக இருந்தாலும், சில இடங்களில் வலிந்து திணிக்கப்பட்டவையாகவே வசனங்கள் உள்ளன.
‘இது ஒரு கற்பனை நாடகம்’ என்ற முன்னோட்டமான அறிவிப்புடன் நாடகம் தொடங்கினாலும், கதையின் போக்கு நமக்கு பலவற்றை நினைவூட்டுவதுதான் நாடகத்தின் பலம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT