Last Updated : 31 Jul, 2014 12:00 AM

 

Published : 31 Jul 2014 12:00 AM
Last Updated : 31 Jul 2014 12:00 AM

மாற்றுத்திறன் மாணவருக்கு கல்வி உதவித்தொகை

மாற்றுத் திறனாளிகளாக அடையாளம் காணப்பட்ட பிறகு அவர்களுக்கு மருத்துவம், கல்வி, பொருளாதாரம், தொழில் என நான்கு வகைகளில் அரசு பல்வேறு உதவிகளை வழங்குகிறது. கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கி வரும் கல்வி உதவித்தொகை குறித்து அந்தத் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

எந்தெந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி அளிக்கப்படுகிறது?

பார்வையற்றவர், பேச்சுத் திறன் குறைந்தவர்கள், செவித்திறன் இழந்தவர், மனவளர்ச்சி குன்றியவர், கடும் உடல் ஊனமுற்றோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் ஆகிய மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக் கல்வி அளிக்கப்படுகிறது.

இயல்பான பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் சேர்க்கப்படுகிறார்களா?

அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சாதாரண மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கென சிறப்பு ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். பள்ளி தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு எந்த மாதிரியான பாடம் கற்பிக்கலாம் என சக ஆசிரியர்களுடன் சிறப்பு ஆசிரியர்கள் ஆலோசனை பெற வேண்டும். அதுபோல் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு என்ன கல்வி, பயிற்சி அளிக்கப்பட்டது என்று கலந்தாலோசிக்க வேண்டும்.

கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறதா?

ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். 9-ம் வகுப்பு மற்றும் அதற்குமேல் படிக்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற முந்தைய ஆண்டுத் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

9 முதல் 12-ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ. படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படிப்போருக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரமும், முதுநிலை பட்டப்படிப்பு படிப்போருக்கு ரூ.7 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

பார்வையற்றோர் படிக்க இயலாத சூழலில் உதவிக்கு வைக்கும் வாசிப்பாளருக்கு அரசு மூலம் ஏதேனும் உதவி வழங்கப்படுகிறதா?

எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் டிப்ளமோ படிக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், உதவிக்கு வைத்துக் கொள்ளும் வாசிப்பாளருக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளியின் வாசிப்பாளருக்கு ரூ.5 ஆயிரமும், முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளியின் வாசிப்பாளருக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x