Published : 15 Aug 2022 11:46 AM
Last Updated : 15 Aug 2022 11:46 AM
1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்படுகிறார். இந்த வழக்கில், அந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்படுகிறார். முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. பின்னர், மேல்முறையீட்டு தூக்குதண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளன் சார்பில், விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை 2022-ம் ஆண்டு மே 22-ம் தேதி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பு வெளியானபோது, அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவு குறித்து பரவலாக பேசப்பட்டது. இதேபோல், விஜய் நடித்து வெளிவந்த சர்க்கார் திரைப்படத்திற்கு பின்னர், 49 "ஓ" என்பது விவாதப்பொருளானது. இப்படி அவ்வப்போது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் பல்வேறு ஷரத்துக்களை சமத்தாக கொண்டதுதான் நமது அரசியலமைப்புச் சட்டம்.
300 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் வெளியறியபின், சுதந்திர இந்தியாவுக்கான சட்டங்கள், ஆட்சியாளர்களின் அதிகாரங்கள் என்ன, குடிமக்களுக்கான கடமையும் அதிகாரங்களும் என்ன என்பது வரையறுக்கப்பட வேண்டிய தேவை எழுந்தது. நள்ளிரவில் கிடைத்த அந்த சுதந்திரம்தான், இந்தியாவுக்கான தனிவொரு அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்திற்கு வித்திட்டது. இதனைத்தொடர்ந்து, 1947 ஆகஸ்ட் 29-ல் இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பை உருவாக்க 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் தேவைப்பட்டது. இந்திய அரசியல் அமைப்பு குழு உறுப்பினர்கள் 284 பேர் ஒப்புதலுடன் 1949 நவம்பர் 26-ல் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உலகின் மிக நீண்ட எழுத்துபூர்வ வடிவிலான அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டது இந்தியா. அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவாக முகப்புரை பார்க்கப்படுகிறது. நாடு சுதந்திரம் பெற்றபின், அடைய விரும்பிய அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் யாவை என்பது பற்றிய குறிப்பே அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை.
இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை மிக்க, சமத்துவம் சார்ந்த, மதச்சார்பற்ற மக்களாட்சி, குடியரசு அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி கிடைக்கவும், சிந்தனையில் சிந்தனையை வெளிபடுத்துவதில், நம்பிக்கையில் பற்றுறுதியில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவம், உறுதியாக அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், சகோதரத்துவத்தை அனைவரிடத்தில் வளர்க்கவும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உறுதியளிக்கும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை அதன் நோக்கத்தை தெளிவாக விளக்குகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளின் அரசியல் அமைப்பு மூலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் நம் அரசியலமைப்பு சட்டம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்கிறது.
இந்தியா பல்வேறு மதம், மொழி, இனங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்ட நாடு. இவர்கள் அனைவரையும உள்ளடக்கிய, உரிமைகளை வழங்கக்கூடியதாக அரசியலமைப்புச் சட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக, இமயம் முதல் குமரி வரை பரவிக்கிடக்கும் ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் உரிமை நாட்டில் 18 வயது நிரம்பியவர்களுக்கு வழங்குவதை அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது. அதேபோல், இந்தியாவில் நீங்கள் யாராக இருந்தாலும், ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான் என்பதை உணர மிக சிறந்த உதாரணம்.
எளியவர்களுக்கான நீதியை உறுதி செய்வதில், இந்திய அரசியலமைப்புச் சட்டமும், நீதிமன்றங்களும் தங்களுக்கான பணிகளைச் செவ்வனே செய்து வருகின்றன. தமிழகத்தில் அரசு, உள்ளாட்சி மற்றும் நிதி உதவிபெறும் பள்ளிகளிலும் அமைக்கப்பட்ட சத்துணவு மையங்களிலும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் உட்பட 3 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான 1997-ல் அரசாணை வெளியிடப்பட்டது. சத்துணவு மையங்களுக்காக சுமார் 1 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டாலும், அதில் பட்டியிலனப் பெண்களுக்காக எந்தவிதமான இடஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. இதனை நியாயப்படுத்த தமிழக அரசு 2003-ம் ஆண்டு மத்திய அரசு அனுப்பியிருந்த சுற்றறிக்கையை பயன்படுத்திக் கொண்டது.
இதனை எதிர்த்து திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த போத்துமல்லி என்ற பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்திலுள்ள அனைத்து சத்துணவு மையங்களில் உள்ள பணியிடங்களை நிரப்ப கட்டாயமாக இடஒதுக்கீடு சுழற்சி முறையை பின்பற்ற வேண்டுமன உத்தரவிட்டது. இத்தீர்ப்பை பயன்படுத்தி அப்போதைய முதல்வர் கருணாநிதி, 6.7.2010 அன்று அரசாணை 142-ஐ சமூக நலத்துறை மூலம் வெளியிட்டார். இதன்மூலம் 25 ஆயிரம் தலித் பெண்களுக்கு சத்துணவு மையங்களில் வேலை கிடைத்தது.
இதுபோல் இந்தியா முழுவதும் ஏராளமான நிகழ்வுகள் நடந்துள்ளன.
சமூக மாற்றங்களை நிகழ்த்தி, சமூக நீதி நிலைக்க, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேருதவியாக இருந்து வருகிறது. இதனால்தான், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையிலான அரசியலமைப்புச் சட்டத்தின் வழியில் இந்திய சுதந்திரம் கொண்டாடப்படுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT