Published : 13 Jul 2022 05:57 PM
Last Updated : 13 Jul 2022 05:57 PM
பொன்னியின் செல்வன்... இந்த நாவலை ஒரு சோழர் கால சரித்திரக் கதையாக மட்டுமே 2K கிட்ஸ் ஆன நம்மில் பலரும் அறிந்திருக்கிறோம். இந்த நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் திரைப்படம் வெளியாவது, தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் என்று பேசப்படுகிறது. அதற்கு மெருகேற்றியுள்ளது அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன் பாகம் - 1’ டீசர்.
இந்தக் கொண்டாட்டங்களை முன்னெடுப்பதெல்லாம் பெரும்பாலும் 90s கிட்ஸ்தான். அவர்கள் ஏன் இக்கதையை இவ்வளவு கொண்டாடுகிறார்கள்? நம்மைப் போன்ற 2K கிட்ஸ் எல்லாம் இதுவரை பார்த்த ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘பாகுபலி’ போன்ற சரித்திரக் கால கதைகளை மிஞ்சுமளவு இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டாமா? அதற்கான சிறு முயற்சிதான் இந்தத் தொடர்.
யார் இந்த கல்கி? - 'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவலை எழுதியவர் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. தமிழ்நாட்டிற்கு வெளியே இவரை இந்த உச்சப்புகழ் பெற்ற நாவலின் ஆசிரியராக மட்டுமே பலரும் அறிந்திருக்கின்றனர், 2கே கிட்ஸான நம்மில் பலருக்கும் அவர் பெயரை இந்த நாவலைத் தாண்டி தொடர்புபடுத்தத் தெரியாது. ஆனால், இதைத் தவிர அவர் பல நாவல்களை ஈன்றுள்ளார்.
பன்முகத்திறன் அவரது பலமாக இருந்தது. எடுத்துக்காட்டாக, அவரது 'தியாக பூமி'-யைக் கூறலாம். குடும்ப நெருக்கடியின் பின்னணியில் சுதந்திரப் போராட்டத்திற்கான உணர்வைத் தூண்டும் நோக்கம் கொண்டது ‘தியாக பூமி’ என்றால், ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் புனைவுப் படைப்பு. தமிழ் சமூகத்தின் கற்பனையை வேறொரு உயரத்திற்கு கொண்டு சென்றது. கல்கி எழுத்தாளர் மட்டுமின்றி இதழாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சிறை சென்ற சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார்.
எழுத்தில் வியத்தகு புதுமையை புகுத்தியதே கல்கியின் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க பல முன்னணி இயக்குநர்களும் வெகுநாள் கனவு கண்டதற்குக் காரணமாகக் கூட இருக்கலாம். ஜப்பானைச் சேர்ந்த இயக்குநர் அகிரா குரசோவா 'parallel writing'-க்கு பெயர் போனவர். தன் படங்களில் குரு - சிஷ்ய உறவு, இரு வேறு பாதைகளில் பயணிக்கும் - ஆனால் ஒரே முடிவை சந்திக்கும் கதாபாத்திரங்கள், பல கேமராக்களைக் கொண்டு கதையைக் காடசிப்படுத்துதல் போன்றவை இவருடைய சிறப்பு. இவ்வளவு ஏன், நம்ம ஊர் மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து போன்ற கதைகள் அனைத்துமே இந்த Parallel writing முறைதான். ஆனால், 1950-களிலேயே ‘பொன்னியின் செல்வன்’ ஆசிரியர் கல்கி தன் கதைகளில் சிக்கலான கதைக்களத்தை அழகாக கூறும் முறையை பயன்படுத்திவிட்டார்.
பொன்னியின் செல்வன் - ஓர் அறிமுகம்: ஐம்பெரும் பாகங்கள், 300-க்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் 50-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள், ஒவ்வொரு கதாபாத்திரமும் காஞ்சி, மாமல்லபுரம், தஞ்சை, மதுரை, இலங்கை என வெவ்வேறு இடங்களில் அமைந்திருத்தல்; வீரம், பாசம், காதல், பரிவு வஞ்சகம், சூழ்ச்சி சதி, வேதனை, சாகசம், போர், தியாகம், கொடை போன்றவை அனைத்தையும் ஒருசேர மிக அழகாக எளிமையாகக் கூறுவது ஆகியவையே ‘பொன்னியின் செல்வன்’ எனும் மகத்தான படைப்பின் சிறப்பு
நான், இந்த நாவலை எனது 13-ஆம் வயதில் முதன்முதலில் படித்தேன். அப்பொழுது இருந்த கதை அனுபவத்திற்கும், இப்பொழுது அதே கதையை மறுபடியும் படிக்கும்போது இருக்கும் அனுபவமும் முற்றிலும் வித்தியாசமானது. முதலில் படித்தபொழுது ‘இவர் நல்லவர்’, ‘இவர் கெட்டவர்’ என்று மட்டுமே என்னால் பிரித்துப் பார்க்க முடிந்தது. அதே கதையை அண்மையில் மீண்டும் வாசித்தேன். அப்போது கல்கி கதாபாத்திரங்களை நேர்த்தியாக சித்தரித்த விதத்தை உணர்ந்தேன்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு தனித்துவமான குணாதிசயமும், தனக்கென்று ஒரு பின்னணியும், குறையும் நிறையும் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால், குறைந்தபட்சம் கதைச் சுருக்கத்தையும் பாத்திரங்களையும் நாம் தெரிந்துகொண்டு பொன்னியின் செல்வனை உரிமை கொண்டாடும் 90s கிட்ஸுக்கு டஃப் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.
கதைச் சுருக்கம்: நம் கதைத் தலைவன் சுந்தர சோழரின் கடைப்புதல்வனும், பொன்னியின் செல்வனுமான அருள்மொழிவர்மன் இலங்கையில் போர்க்களத்தில் இருக்கிறார். தந்தை சுந்தர சோழர் பக்கவாதத்தினால் படுத்த படுக்கையாகிறார்.
சுந்தர சோழரின் மூத்த மகனும், 13 வயதிலேயே பாண்டியன் தலைகொண்ட பெருமைக்குரியவருமான ஆதித்த கரிகாலன் பட்டத்து இளவரசராகிறார். ஆனாலும், தஞ்சைக்கு வராமல் காஞ்சியிலேயே வசிக்கிறார்.
சுந்தர சோழரின் இரண்டாவது வாரிசான அழகும் அறிவுமிக்க இளைய பிராட்டி குந்தவை தேவி தன் தோழி வானதியுடன் பழையாறையில் வசித்து வருகிறார்.
60 வயதானாலும் போரில் 64 விழுப்புண் பெற்ற மகாவீரர் என்ற பெருமையுடைய சோழ சாம்ராஜ்ஜியத்தின் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர், நந்தினி என்ற இளம்பெண்னை மணக்கிறார். அவருடைய தம்பி தஞ்சை கோட்டையின் தளபதி சின்னப் பழுவேட்டரையர், இவரின் மருமகனும் அருள்மொழிவர்மனின் சித்தப்பாவுமான மதுராந்தர், அருள்மொழிவர்மனை இலங்கை கொண்டு சேர்க்கும் படகோட்டிப் பெண் பூங்குழலி, அவளின் அத்தை மகன் சேந்தன் அமுதன் எனப் பல பாத்திரங்கள் உண்டு.
ராஜா காலக் கதை என்றால், அதில் வில்லத்தனமும், சதி சூழ்ச்சியும் இல்லாமலா?
ஆதித்த கரிகாலனோ அருள்மொழிவர்மனோ அடுத்து அரசனாவது பிடிக்காத சிற்றரசர்கள் பலருடன் சேர்த்து பழுவேட்டரையர், ஆம்... சோழர் குலமே மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் பெரிய பழுவேட்டரையர்தான். அவர், சைவ பக்தரான மதுராந்தகனை அரசனாக்க கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சதி திட்டம் தீட்டுகிறார்.
'சரி ஒரு ராஜ்ஜியம் என்றால் இளவரசர், இளவரசி, சதி சூழ்ச்சி இருக்கும். அது இளவரசரர்களுக்கு தெரியவந்து போர் வரும், அவ்வளவுதானே கதை என்று நீங்கள் கேட்கலாம். அதுதான் இல்லை!
ரதம் ஓட அச்சாணி வேண்டியது போல நம் கதையின் அச்சாணியாக திகழ்வது வாணர்குலத்து வீரர் வல்லவரையன் வந்தியத்தேவன். இவருக்கு சோழ நாட்டில் என்ன வேலை என்று கேட்கிறீர்களா?!
ஆதித்த கரிகாலரின் உற்ற (ஒற்றன்) நண்பனாகிய இவர், வலுச்சண்டைக்குப் போவதில் வல்லவர். கடம்பூர் சம்புவரையரின் மகன் கந்தமாறனின் நண்பன்.
நண்பன் கோட்டை விருந்தில் பங்கேற்க வந்தவர், நள்ளிரவில் சோழ சிங்காசனத்தை பிடிக்க நடக்கும் சதி திட்டத்தை ஒட்டு கேட்டுவிடுகிறார். அந்த சதி திட்டத்தை ஒட்டுக்கேட்க வரும் ஆழ்வார்கடியான் நம்பியை பின்தொடர்ந்து செல்கிறார்.
இச்சதியைப் பற்றி குந்தவை தேவியிடம் வந்தியத்தேவன் சொல்ல, அவரை இலங்கை சென்று பொன்னியின் செல்வரை அழைத்து வருமாறு அனுப்புகிறார்.
இதற்கிடையில், பெரிய பழுவேட்டரையரரின் ராணியான நந்தினி பாண்டிய நாட்டு சதிகாரர்களுடன் சேர்ந்தவள் என்றும், பாண்டிய மன்னனை ஆதித்த கரிகாலன் கொன்றதால் சோழ குலத்தையே பழிதீர்க்க வந்திருக்கும் வஞ்சகி என்றும் தெரிகிறது.
நம் வந்தியத்தேவன் இலங்கை சென்று அருள்மொழிவர்மனுடன் உற்ற நண்பனாகினார். இலங்கையல் நந்தினியின் பிறப்பு பற்றிய பல உண்மைகளை தெரியவருகின்றது. இருவரும் தஞ்சை திரும்புகின்ற வழியில் விபத்தில் அருள்மொழிவர்மன் கடலில் அடித்துச் செல்லப்படுகிறார்.
கதையில் அடுத்து என்ன நடக்கிறது? அருள்மொழிவர்மன் தஞ்சைக்கு வருகிறாரா? நந்தினியின் சதி, பழுவேட்டரையரை அவள் மயக்கி வைத்திருப்பது, பாண்டிய நாட்டு சதிகாரர்கள், நந்தினியின் பிறப்பு பற்றிய உண்மைகள் வெளிவருகின்றனவா? ஆதித்த கரிகாலன் என்ன ஆகிறார்? வந்தியத்தேவன் சோழ நாட்டை தன் கத்தியாலும் புத்தியாலும் காப்பாற்றுகிறாரா?
- இதுபோன்ற கேள்விகள் நமக்கு எழும். இது மட்டும் இல்லை, இன்னும் நிறைய சுவாரஸ்யமான நிகழ்வுகள் இருக்கின்றன. கதையின் போக்கு பற்றியும், ஒவ்வாரு கதாபாத்திரத்தை பற்றியும் அடுத்து வரும் அத்தியாயங்களில் காண்போம்.
அடுத்தடுத்த அத்தியாயங்கள்:
> PS for 2K கிட்ஸ் - 2 | பொன்னியின் செல்வன் - ஆதித்த கரிகாலனுக்கு மயக்கம் என்ன?
> PS for 2K கிட்ஸ் - 3 | பொன்னியின் செல்வன் - நந்தினி Vs குந்தவை
> PS for 2K கிட்ஸ் - 4 | பொன்னியின் செல்வன் - வந்தியத்தேவன் ‘எவர்கிரீன் ஹீரோ’ ஆனது எப்படி?
> PS for 2K கிட்ஸ் - 5 | பொன்னியின் செல்வன் - வந்தியத்தேவனையே கலாய்க்கும் பூங்குழலி எப்படிப்பட்டவள்?
> PS for 2K கிட்ஸ் - 6 | பொன்னியின் செல்வன் - பழுவேட்டரையர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா?
> PS for 2K கிட்ஸ் - 7 | பொன்னியின் செல்வன் - அருள்மொழிவர்மன் ‘மாஸ்’ ஹீரோ இல்லையா?
> PS for 2K கிட்ஸ் - 8 | பொன்னியின் செல்வன் - குந்தவை மீது பொன்னி நதி பாயும் தேசம் பாசம் கொள்வது ஏன்?
> PS for 2K கிட்ஸ் - 9 | பொன்னியின் செல்வன் - நந்தினியின் உண்மை முகம் எது?
> PS for 2K கிட்ஸ் - 10 | பொன்னியின் செல்வன் - ஆழ்வார்க்கடியான் நம்பி என்னும் ‘அட்டகாச’ கதாபாத்திரம்!
> PS for 2K கிட்ஸ் - 11 | பொன்னியின் செல்வன் - கதைமாந்தர்களிடம் ஒளிந்து கிடக்கும் பயங்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT