Published : 12 Jan 2022 01:22 PM
Last Updated : 12 Jan 2022 01:22 PM
நமது அறையின் கதவைத் தட்டாமலே கொஞ்சம்கூட நாகரிகம் இல்லாமல் நுழைந்துவிடுவதால் எலிகளின்மீது நமக்கு எப்போதுமே ஒரு கோபம் உண்டு. ஆனால், அந்த எலியும் மனிதர்களுக்கு நண்பனாக இருக்கமுடியும், தனது உயிரைப் பணயம் வைத்தாவது நாட்டுக்கு சேவை செய்யமுடியும் என்பதை மகத்தான மகாவா நிரூபித்து மறைந்துசென்றுவிட்டது. அளப்பரிய சேவைகளை செய்து மறைந்த மகாவாவுக்கு வயது 8.
'தனது உயிரை பணயம் வைத்து' என்ற சொல்லாடலுக்கு என்ன காரணம் என்றால், கண்ணிவெடி அகற்றுவது, கள்ளிச்செடி அகற்றுவது போலல்ல... ஒரே வெட்டாய் வெட்டி தூக்கியெறிய... கொஞ்சம் பிசகினாலும் பூமியிலிருந்து கண்ணிவெடி சிதறி ஆளை துண்டுதுண்டாக தூக்கியடித்துவிடும். ஆனால் இதில் ஆறுதல் என்னவென்றால், மகாவா தனது பணிகளில் ஈடுபடும்போது முன்னதான வரிகளில் சொன்னதுபோல வெடிவிபத்தில் பலியாகவில்லை என்பதுதான். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாவா நேற்று உயிர் துறந்தது.
'மவுஸ் ஹன்ட்' திரைப்படம் வந்தபோது பழங்கால வீடு ஒன்றில் சிக்கி வெளியே செல்லாமல் சுற்றிவரும் ஓர் எலியை வைத்து இவ்வளவு காமெடியா என்றெல்லாம் நமக்கு அப்போது தோன்றியது. ஆனால், நுண்ணறிவும் மோப்ப சக்தியும் கொண்டு கம்போடியா நாட்டில் கண்ணிவெடிகளை கண்டறிவதில் ஒரு எலி திறம்பட செயல்பட்டது. அதன் பெயர் 'மகாவா' என்பதை அறிந்ததும் நமது ஏளனங்கள் எல்லாம் காற்றில் பறந்தன.
தனது பணிக்காலத்தில் 100 கண்ணிவெடிகளை கண்டறிந்துள்ளதும், அதற்காக அந்த மகாவா எலி தங்கப்பதக்கம் பெற்றதும் உலகின் முக்கியமான செய்தி என்று நினைக்கிறேன். ஏன் முக்கியமான செய்தி என்றால், கண்ணிவெடி அகற்றுதல் ஒரு நாட்டின் சர்வதேச அரசியலோடு சம்பந்தப்பட்டது என்பதுதான்.
இதுகுறித்து நாம் அவசியம் காணவேண்டிய திரைப்படம் 'தி லேன்ட் ஆஃப் மைன்' என்ற டென்மார்க் திரைப்படம். இப்படம் எலி சம்பந்தப்பட்டது அல்ல, கண்ணிவெடி சம்பந்தப்பட்டது. கண்ணிவெடி எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்ந்தால்தான் மகாவாவின் பணி எவ்வளவு தீரமிக்கது என்பதையும் உணரமுடியும்.
இரண்டாம் உலகப் போர் தொடர்பான நூற்றுக்கணக்கான படங்கள் வந்துள்ளன. ஐரோப்பாவில் நடந்த நாஜிக்களின் அட்டூழியத்தை ரத்தம் சொட்ட சொட்ட நம் கண்முன் நிறுத்திய படங்கள் ஏராளம். இதனால் ஹிட்லர் காலத்து ஜெர்மானிய நாஜி வீரர்கள் மீது ஏற்பட்ட நிரந்தர வெறுப்பு இந்த நிமிடம் வரை தீர்ந்தபாடில்லை.
இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு டென்மார்க்கில் நடைபெறும் இத்திரைப்படத்தின் கதைக்களம் மிகவும் வித்தியாசமானது. ஜெர்மன் படை போரில் சரணடைந்த பிறகு, மே 1945-இல் போர் முடிவடைந்த நிலையில், 2,000-க்கும் மேற்பட்ட ஜெர்மன் போர்க் கைதிகளை தங்கள் நாடுகளை விட்டு வெளியேறாமல் தடுத்தன. அதற்குக் காரணம் அந்த நாட்டின் கடற்கரையெங்கும் புதையுண்டிருந்த கண்ணி வெடிகளையெல்லாம் அகற்றிவிட்டுத்தான் அவர்கள் செல்ல வேண்டும் என்பது.
உண்மையில், ஐரோப்பாவைக் கைப்பற்றிய ஜெர்மானிய படைவீரர்கள் அதன் பல்வேறு நாடுகளிலும் மில்லியன் கணக்கான கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருந்தனர். போர் முடிந்தபிறகு உயிர்களைப் பணயம் வைத்து கண்ணிவெடிகளை அகற்ற வேண்டிய கட்டாயத்திற்கு அந்நாடுகள் தள்ளப்பட்டன. இதற்காகவே போர் முடிந்தபின்னும் பல நாடுகள் ஜெர்மானிய போர்க் கைதிகளை அவர்களது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பாமல் தடுத்து நிறுத்தின.
ஜெர்மானிய இளம் போர்க் கைதிகள் சிலர், இயற்கையெழில் மிக்க டேனிஷ் நிலப்பரப்புகளில் நிறைந்த மேற்கு கடற்கரை வெளிகளில் ஜெர்மானியர்கள் புதைத்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்காக டென்மார்க் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
போரின்போது நாஜிக்கள் புதைத்துவைத்த கண்ணி வெடிகளைச் செயலிழக்க வைக்கும் பணிக்காக அவர்கள் நியமிக்கப்பட்டனர். கண்ணிவெடிகள் பூமிக்கடியில் எங்கேயுள்ளன என்பதை எந்தவித அசம்பாவிதமும் நேராமல் முதலில் எச்சரிக்கையுடன் கண்டறிய வேண்டும். பின்னரே கண்ணிவெடி உள்ளடக்கிய சிலிண்டரிலிருந்து டெட்டனேட்டரைத் தனியே பிரித்தெடுக்க வேண்டும். திரைப்படத்தின் கதையை இங்கு நான் சொல்லப்போவதில்லை. ஓரிரு முக்கிய அம்சங்களைப் பேசலாம் என்ற தோன்றுகிறது.
கண்ணிவெடிகளை அகற்றும் பயிற்சியின்போதே வட்டமான கண்ணிவெடி சிலிண்டரிலிருந்து டெட்டனரேட்டரைத் திருகி செயலிழக்க வைக்க முற்படும்போது சிலரின் விரல்கள் நடுங்குகின்றன. இதனால் நமக்கு பதற்றம் கூடிவிடுகிறது. ஒரு டீன்ஏஜ் இளைஞன் கண்ணிவெடியைத் தவறுதலாகக் கைவைத்து கையாண்டபோது வெடித்துச் சிதறுகிறான். இக்காட்சிக்குப் பிறகான முழுப் படமும் நம்மை இருக்கையின் நுனிக்குக் கொண்டுவந்துவிடுகிறது.
கடற்கரை அருகே தனது அணியை குன்றுகள் மீது அணிவகுத்து அழைத்துச் செல்லும் சார்ஜென்ட், ''மேற்கு டேனிஷ் கடற்கரையில் இருந்து மொத்தம் 45,000 கண்ணிவெடிகள் உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு ஆறு கண்ணிவெடிகளை செயலிழக்கவைக்க முடிந்தால், மூன்று மாதங்களில் உங்களை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன்'' என உறுதியளிக்கிறார். இப்படியாக செல்லும் திரைக்களத்தின் காட்சிகள் முழுவதும் கண்ணிவெடி அகற்றும் பதறவைக்கும் சம்பவங்கள்தான்.
இயக்குநர் மார்ட்டின் ஜான்ட்வ்லீட் இப்படத்தை எந்தவித மிகை நவிற்சியும் இன்றி இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் கமிலா ஹெல்ம் நுட்சனின் மிகச்சிறந்த கேமரா காட்சிகளின் மூலம் கதைப்போக்கில் நுட்பமான திரைக்கதைக் காட்சிகளைக் கையாண்டுள்ளார். மார்ட்டின் ஜான்ட்வ்லீட்டின் குறிப்பிடும்படியான இயக்கத்தைப் பறைசாற்றும் காட்சிகள் நிறைய வருகின்றன. அதில் முக்கியமானது இப்படத்தில் வரும் ஒரு சிறுமியைப் பற்றிய கதையாகும்.
கடற்கரை அருகே யாருமற்ற வனாந்தர சமவெளிகளில் இனனொரு மரத்தடுப்பு வீட்டில் தன் குழந்தையுடன் தனியே வசித்துவரும் பெண்மணியின் சிறுமி கடற்கரையில் விளையாடச் சென்று கண்ணிவெடிகளுக்கிடையில் சிக்கிக் கொள்கிறது. எர்னஸ்ட் எனும் இளம் ஜெர்மானிய வீரன் அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் ஒரு கட்டமும் வருகிறது. டீன்ஏஜ் போர்க்கைதிகள் அப்பெண்மணியிடம் தகவல் சொல்லி அழைத்துச் செல்வர். ஆனால் அச்சிறுமியைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைக்கவேண்டும். ஆனால், அதற்கும் அவர்கள் தயாராகின்றனர். அப்பெண்மணி மனம் கசிந்து கதறும் இடம் அது.
அச்சிறுமியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என சிறுவர்கள் தவிக்கிறார்கள். கண்ணிவெடி அகற்றுதலின்போது தன்னைப் போலவே இருக்கும் தனது சகோதரன் உயிரிழந்துவிட அதிலிருந்து சித்தபிரமை பிடித்தவன் போல இருக்கும் எர்ன்ஸ்ட்தான் அச்சிறுமியைக் காப்பாற்ற கண்ணிவெடியிலிருந்து ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுகிறான். எல்லோரும் பதறிக் கொண்டிருக்கும்போதே துணிச்சலாகச் சென்று அவன் சிறுமியைக் காப்பாற்றி அனுப்பி விடுகிறான்.
ஆனால், குழந்தையைக் காப்பாற்றும் வேலைமுடிந்தபிறகு அவனும் அவர்களுடன் திரும்பியிருக்க வேண்டும். ஒருமுறை கண்ணிவெடி அகற்றுதலின்போது உயிரிழந்த தனது சகோதரனையே நினைத்து வாடும் எர்னஸ்ட், அந்தத் தெளிவற்ற கடற்கரை மணலில் வேண்டுமென்றே நடந்து செல்கிறான். அப்போது எதிர்பாராமல் ஒரு கண்ணிவெடி அவனைச் சிதறடிக்கிறது. அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். ஊருக்கு திரும்பும்போது எத்தனை பேர் எஞ்சுகிறார்கள் என்பதை நினைக்கும்போது வாழ்வின் நிச்சயமின்மை இத்திரைப்படம் எவ்வளவு வலியோடு பேசியுள்ளது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
இப்படத்தில் காட்டப்பட்ட இடங்கள் அனைத்தும் இரண்டாம் போருக்குப் பிறகு கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட ஓக்ஸ்பெல்லெஜிரென் மற்றும் வர்டே பகுதிகள் உள்ளிட்ட உண்மையான மேற்கு கடற்கரை பகுதிகளே ஆகும்.
2014 ஜூலையில் தொடங்கிய படப்பிடிப்பு இரண்டே மாதங்களில் நடைபெற்று ஆகஸ்ட் 2014-ல் முடிவடைகிறது. மேலும் ஒரு தகவல், 'அண்டர் சான்டெட்' (லேண்ட் ஆஃப் மைன்) படப்பிடிப்பின் போது பூமிக்கடியில் இருந்து அகற்றப்படாத மேலும் ஒரு கண்ணிவெடியை கவனமாக அகற்றியிருக்கிறார்கள்.
இப்போது உங்களுக்கும் மகாவா எலியின் மகத்துவம் புரிந்திருக்கும் என நம்புகிறேன். மகாவா எலி ஆப்பிரிக்காவின் டான்சானியா நாட்டில் பிறந்தது. அங்கு வளர்க்கப்பட்டது. அங்கிருந்து கம்போடியாவுக்கு கொண்டுவரப்பட்டு கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் பணிக்காகவே பிரத்யேகமாக பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டது.
கம்போடியா நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு பகுதிகளில் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகளில் சிக்கி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததால், அவற்றை அகற்றுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இந்தப் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பணிகள் மிகவும் தாமதமாகும் என்பதால், விலங்குகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எலிகளைக் கொண்டு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்தப் பணியில் தன்னை சிறப்பாக இணைத்துக் கொண்டது மகாவா என்ற எலி. இதன் மிகச் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் விதமாக இங்கிலாந்து விலங்குகள் நல அமைப்பு, எலி மகாவாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவப்படுத்தியது. அந்த அமைப்பின் 77 ஆண்டுகால வரலாற்றில் எலி ஒன்று தங்கப்பதக்கம் பெற்றது இதுவே முதன்முறையாகும்.
கண்ணிவெடிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் பயிற்சியை எலிகளுக்கு அபோபா என்ற தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. எலிகள் மோப்ப சக்தி மூலம் கண்ணிவெடிகளை அடையாளம் காண்கின்றன. மகாவா மறைவு குறித்து, அபோபா தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், அபோபாவில் அனைவருமே மகாவா இழப்பால் வாடுகிறோம். அதன் சேவைக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம். மகாவா வியத்தகு பணியை செய்து சென்றுள்ளது. மகாவாவின் வியக்கவைக்கும் மோப்ப சக்தி கம்போடிய மக்கள் நிம்மதியாக, கை, கால் இழக்கும் அச்சமின்றி வேலை செய்ய, விளையாட வழிவகை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
RIP மகாவா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT