Published : 27 Aug 2020 04:02 PM
Last Updated : 27 Aug 2020 04:02 PM
கிருஷ்ணனின் அவதாரத்தைக் கோகுலாஷ்டமியில் கொண்டாடுவதைப் போல ராதாஷ்டமியும் இந்தியாவில் பரவலாக மதுரா போன்ற நகரங்களில் கொண்டாடப்படும் திருநாளாக இருந்தது. ‘இஸ்கான்’ போன்ற அமைப்புகளால் இன்றைக்கு ராதாஷ்டமி உலகம் முழுவதும் குடியேறியிருக்கும் இந்தியர்களால் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.
ராதை தனது பரிபூரண பக்தியால் கிருஷ்ணனையே தன் இதயச் சிறையில் அடைத்தவள். ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்று தன்னையே கிருஷ்ணனுக்கு ஒப்படைத்தவள். ராதையின் காதலுக்குத் தன்னையே ஒப்படைத்தவன் பகவான் கிருஷ்ணன்.
ஜெயதேவரின் அஷ்டபதி
கிருஷ்ணன் என்னும் ஓர் உன்னதத்தை நாடி அதனோடே சங்கமமான ராதையின் பக்தியைக் கொண்டாடுவதுதான் ராதாஷ்டமியின் நோக்கம். சிருங்காரத்தின் வழியாகப் பக்தியை மடைமாற்றும் இலக்கியங்களில் ஜெயதேவரின் ‘கீத கோவிந்தம்’ முக்கியமானது. ஒவ்வொரு பாடலிலும் எட்டுக் கண்ணிகள் இருப்பதால், இதை ‘அஷ்டபதி’ என்றும் அழைப்பர்.
அதில் ராதைக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையேயான ஊடலும் கூடலும் மனப் போராட்டங்களும் காதல் காட்சிகளும் ஒரு ஜீவாத்மா பரமாத்மாவை அடைவதற்கான தவிப்பும், அதற்குப் பரமாத்மாவே இறங்கிவரும் அழகும் பதிவாகியிருக்கின்றன. ‘ராதே கிருஷ்ணா’ என்பது வெறும் வார்த்தையல்ல. பரிபூரணமான ராதையின் அன்புக்கான சாட்சி என்பதை வார்த்தைக்கு வார்த்தை விளக்கியிருப்பார் ஜெயதேவர்.
ராதையின் வெற்றி காதலின் வெற்றி
ராதை எனும் பக்தை, தன் உடலாலும் மனத்தாலும் பக்தியாலும் கிருஷ்ணனையே சிறைப்படுத்துகிறாள். ‘கீத கோவிந்தம்’ படைப்பில் கண்ணனுடனான கூடலுக்கு ராதை தவிப்பாள். ராதையுடனான கூடலுக்குக் கண்ணனும் ஏங்குவான். எந்த அளவுக்கு ஏங்குகிறான் என்றால், “கார்மேகக் கண்ணனின் உடல் ஏக்கத்தால் வெளிறிப்போகும் அளவுக்கு..” என்கிறார் ஜெயதேவர். ராதையுடன் சேருமாறு கண்ணனிடமும், ராதை இல்லாமல் கண்ணன் படும் வேதனைகளை ராதையிடமும் விடாமல் தூது செல்லும் தோழியின் மனநிலையில் அஷ்டபதியைப் படிக்கும்போது, நாமும் தவித்துப்போகிறோம்.
கண்ணன் ஆற்றலுடையவன்; ஆனால், அந்த ஆற்றல்தான் ராதா என்பதை அறிவுறுத்துகிறார் கீத கோவிந்தத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் இலந்தை சு.இராமசாமி.
“மம சிரஸி மண்டனம் தேஹி பத
பல்லவமுதாரம்” – இவை ‘கீத கோவிந்தம்’ வரிகள்.
“உன்னுடைய தளிர்ப்பாதங்களை என்
தலையில் வை” என்று கண்ணன், ராதையிடம் கூறுகிறான் என்பது இதற்கு அர்த்தம்.
ராதையின் பரிசுத்தமான பக்தியால், வாத்சல்யத்தால் கண்ணன் வசப்பட்டு இந்த வரிகளைச் சொல்வதாக ஜெயதேவர் எழுதிவிடுகிறார். அதன் பிறகு, இதென்ன அபச்சாரமாக இருக்கிறதே.. என்று அதை அடித்துவிட்டு, ஆற்றில் நீராடப் போகிறார்.
ஜெயதேவரின் தோற்றத்தில் வரும் கண்ணனோ, அடித்த வரிகளை மீண்டும் எழுதி வைக்கிறார். ஜெயதேவருடைய மனைவி பத்மாவதி கொடுக்கும் பிரசாதத்தையும் உண்டுவிட்டுச் செல்கிறார்.
ஆற்றில் குளிக்கச் சென்ற ஜெயதேவர் திரும்பிவந்து பார்த்தால், ஓலையில் தான் அடித்த வரிகள் மீண்டும் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறார்.
“நீ எழுதினாயா?” என்கிறார் மனைவியிடம்.
“நீங்கள்தானே எழுதிக் கொண்டிருந்துவிட்டு, நான் கொடுத்த பிரசாதத்தையும் அருந்தினீர்களே..” என்கிறார் பத்மாவதி.
இது கண்ணனின் லீலைதான் என்பதை ஜெயதேவர் உணர்ந்துகொள்கிறார்.
ஆம்.. ராதையின் பாதங்களைத் தம் சிரசில் தாங்கிக்கொண்டது கிருஷ்ணனின் விருப்பம்! அதில் வெளிப்படுவதுதான் ராதையின் காதல், பக்தியின் உன்னதம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT