Published : 19 Aug 2020 11:50 AM
Last Updated : 19 Aug 2020 11:50 AM
நான்கு மாதங்களுக்கு முன் யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். கரோனா நம்மை இப்படி ஆட்டிப்படைக்கப்போகும் என்று. பலரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை. நம்முடைய வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. விருப்பம் இல்லாத் திருப்பங்களாக எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன. இயல்பு வாழ்க்கைக்கு எப்போதும் திரும்புவோம் என்பது தெரியாமலேயே நாட்கள் கழிந்துகொண்டிருக்கின்றன.
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பொதுப்போக்குவரத்தும் தொடங்கப்படவில்லை. கரோனா பிரச்சினையால் ஏற்பட்ட தாக்கத்தைப் பலரும் ஒவ்வொருவிதத்தில் எதிர்கொண்டு வருகிறார்கள். ஐ.டி.நிறுவனங்களை எடுத்துக்கொண்டால் அதில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலோர் வீட்டிலிருந்துதான் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் மொழியில் சொல்வது என்றால் work from home . நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சி. அவர்களுக்குத் தேவை எல்லாம் ஒரு மேஜைக் கணினியோ மடிக்கணினியோ அவ்வளவுதானே.
வீட்டிலிருந்து வேலை செய்வதால் ஏற்படும் பிரச்சினைகள் :
ஏறக்குறைய அனைத்து ஐ.டி.நிறுவனங்களின் அலுவலகங்களுமே பணி செய்வதற்கு ஏற்ற நல்ல சூழலில்தான் இருக்கின்றன. மேஜை, நாற்காலி, இருக்கை எல்லாம் பணி செய்வதற்கு ஏற்ற வகையில் நல்ல வசதியாகவே இருக்கும்.
இந்த வசதிகள் வீட்டில் இருப்பதற்கு வாய்ப்பு குறைவுதான். அலுவலகத்தில் பெரும்பாலும் மேஜைக் கணினியில் வேலை செய்வார்கள். அதற்கேற்றாற்போல் உட்காரும் நாற்காலியும் வசதியாக இருக்கும்.
ஆனால், வீட்டில் அப்படி இல்லை. இது பற்றி எல்லாம் நினைக்காமல், இருக்கிற மேஜை நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்து வருகிறார்கள். அதுவும் வீட்டில் பலரும் பயன்படுத்துவது மடிக்கணினியைத்தான். மடிக்கணினியைப் பார்க்கும்போது ஏறக்குறைய தலை சற்றுக் கீழே குனிந்துவிடும்.
கொஞ்ச நேரம் என்றால் பரவாயில்லை. அலுவலகத்தில் பார்க்கிற வேலையை நாள் முழுவதும் வீட்டில் மடிக்கணினியில் பார்க்க வேண்டும். குனிந்துகொண்டே பார்ப்பதாலும் வசதி இல்லாத இருக்கிற நாற்காலியில் உட்கார்ந்து பார்ப்பதாலும் கழுத்துவலி, தலைவலி, முதுகுவலி, கை-கால் வலி ஏற்பட வாய்ப்புண்டு.
அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்வதையும் வீட்டிலிருந்து வேலை செய்வதையும் நினைத்துப் பாருங்கள். நிறைய வேறுபாடு இருக்கும்.
அலுவலகம் என்றால் விசாலமாக இருக்கும். அலுவலக நண்பர்கள் பலரையும் பார்க்க முடியும். பேசமுடியும். அலுவலகத்துக்குள் அங்கும் இங்கும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கேண்டீன் செல்லலாம். கழிப்பறை சென்று வரலாம். நண்பர்களுடன் மதிய உணவு நேரத்தில் காரிடாரில் நின்று பேசலாம். நடந்து கொடுக்கலாம்.
ஆனால், வீட்டில் அப்படி இல்லை. பிறருடைய இடையூறு இல்லாமல் வேலை செய்வதற்காகத் தனி அறைக்குள் போய்விடுவார்கள். அறை பெரும்பாலும் சிறியதாக இருக்கும். அறைக்குள் போய்விட்டால் இயற்கை உபாதைகளுக்கு வெளியே வருவார்கள். பிறகு மதிய உணவுதான். பிற்பகலிலும் இப்படித்தான். பலர் இரவு 7 அல்லது 8 மணி வரை வேலை செய்வதைப் பார்க்க முடிகிறது.
இப்படி ஒரே அறைக்குள் நீண்ட நேரம் தொடர்ந்து இருப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மன அழுத்தமும் ஏற்படலாம். முன்னர் சொன்னது போல் கண்வலி, தலைவலி, கழுத்துவலி போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.
தீர்வு
அலுவலகத்தில் இருப்பதுபோல் ஏறக்குறைய கண்ணுக்கு நேராகப் பார்ப்பது போல் மடிக்கணினி உள்ள மேஜையின் உயரத்தைச் சரி செய்ய வேண்டும். அறைக்குள் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும். விளக்கு வெளிச்சம் தலைக்குப் பின்னாலோ தலைக்கு மேலிருந்து வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கண்ணுக்கு முன்னால் நேரடியாகக் கண்ணில் படுமாறு இருக்கக் கூடாது.
முடிந்தவரை விசாலமான அறைக்குள் வேலை செய்யலாம். தனி அறைதான் என்றால் அறையின் கதவையும் சன்னலையும் திறந்து வைக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வேலை பார்த்துக்கொண்டே சில விநாடிகள் கதவு வழியாகவோ அல்லது சன்னல் வழியாகவோ தூரத்தில் உள்ள பொருட்களைச் சில விநாடிகள் பார்த்துவிட்டு வேலையைத் தொடரலாம்.
வேலையின் இடையே சில விநாடிகள் அடிக்கடி நடந்து கொடுக்கலாம். இரவு நீண்ட நேரம் பார்ப்பதற்குப் பதிலாக முடிந்தவரை காலையில் விரைவாக வேலையைத் தொடங்கலாம். போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் வீட்டிலிருந்து பார்க்கும் இந்த நிலை நீடிக்கலாம் போல் தெரிகிறது. எனவே, நமக்குப் பிரச்சினை ஏற்பட்டு துன்பப்பட்டு அதற்கு நிவாரணம் தேடாமல் சொல்லப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். காலை மாலை நடைப்பயிற்சி செய்வதும் யோகா மூச்சுப் பயிற்சி செய்வதும் கூடுதல் பலனைத்தரும். வருமுன் காப்பதே எப்போதும் சிறந்த வழி.
கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT