Published : 12 Aug 2020 10:43 PM
Last Updated : 12 Aug 2020 10:43 PM
கரோனா ஊரடங்கு ஊரை முடக்கினாலும் கருணை உள்ளங்களை முடக்கவில்லை. அப்படி கருணை உள்ளம் கொண்ட ஓர் ஆசிரியர் தான் ஜெயமேரி.
அவர், கரோனா ஊரடங்கு காலத்தில் 'அருகாமைப் பள்ளி', என்றொரு திட்டத்தைத் தொடங்கி தான் வசிக்கும் பகுதியில் உள்ள தீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வியை நற்பண்பை கொண்டு சேர்க்கிறார்.
அருகாமையில் ஒரு பள்ளி உருவான கதையை ஜெயமேரியிடம் கேட்டோம்.
"பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது தெரியாத நிலை. வீட்டிற்கு வெளியே வெயிலில் சுற்றித் திரியும் குழந்தைகளுக்கு ஏதேனும் சொல்லித் தந்தால் என்ன என்ற யோசனை ஓடிக் கொண்டே இருந்தது. அருகில் உள்ள கல்லூரி மாணவியும், என் மகள்களும் கை கொடுத்தனர்.
அக்கம்பக்கத்தில் வசிக்கும் தீப்பெட்டித் தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆர்வத்துடன் வந்தனர். கைகளைக் கழுவி, சமூக இடைவெளி விட்டு அமர வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லியிருந்ததால் அதையே பின்பற்றினர். முதல் நாளன்று, வானம் பதிப்பகத்தின் குழந்தைகளுக்கான நூல்களை பிள்ளைகளிடம் வாசிக்கக் கொடுத்தேன்.
அதில் உள்ள பஞ்சு மிட்டாய் புத்தகத்தில் இருந்த "எலி ஏன் ஓடியது" என்ற அழ.வள்ளியப்பா பாடலுக்கு படம் வரைந்து , கலர் அடித்து, பாட்டுப் பாடி, கதைகள் சொல்லி என காலை 10 மணிக்கு ஆரம்பித்த வகுப்புகள் 12 மணி வரை தொடர்ந்த்து.
அன்று வந்திருந்த பேச்சுத்திறனற்ற மாற்றுத்திறனாளி குழந்தையின் முகத்தில் கண்ட மகிழ்ச்சி தான் அருகாமையில் ஒரு பள்ளியில் அடிநாதம்.
பள்ளிக்கே போனதில்லையாம் அந்த 6 வயது குழந்தை.
அந்தக் குழந்தையின் கையிலும் ஒரு புத்தகத்தைக் கொடுத்திருந்தேன். அதைப் பார்த்துக் கொண்டே இருந்த குழந்தை சிறிது நேரத்தில் அழகாக ஒரு மரம் வரைந்து கொடுக்க, அந்தப் படம் ஆயிரம் கதைகளைச் சொல்லியது.
இந்தப் பள்ளியில் எடுத்த எடுப்பிலேயே பாடங்களைக் கற்பிப்பது இல்லை. கதைகளும், படங்கள் வரைதலும் அவர்களுக்கு பிடித்திருக்கின்றன.
பிஸ்கட்டுகளும், ஆரஞ்சு மிட்டாய்களுமாக அன்பைப் பகிர்ந்து கொண்டோம்.
அருகாமைப் பள்ளி இப்படி வாரந்தோறும் வெள்ளிக்கிழமையின் இயங்குவதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது தினமுமே பிள்ளைகள் வந்துவிடுகின்றனர்" என்றார் மகிழ்ச்சியாக. அந்த மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளக்கூடியது.
அத்துடன் நிறைவடைந்துவிடவில்லை விருதுநகர் மாவட்டம் க.மடத்துப்பட்டி பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் ஜெயமேரியின் கருணை. அந்தப் பள்ளியில் பயில்பவர்கள் பெரும்பாலானோர் தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகளே. மிகவும் ஏழ்மையான சூழலில் இருந்து வரும் குழந்தைகள் என்பதால் வாரத்தில் பாதி நாட்கள் குழந்தைகள் வெறும் வயிற்றுடன் தான் பள்ளிக்கு வருவார்களாம்.
அதனாலேயே ஜெயமேரி தன்னால் இயன்ற அளவுக்கு சத்துமாவு உருண்டை, கடலைமிட்டாய், சிறுதானிய அடை ஆகியனவற்றைக் கொண்டு செல்வாராம். கரோனா ஊரடங்கு அறிவித்த பின்னர் அந்த சிறு பிள்ளைகளை பசி இன்னும் பயங்கரமாக மிரட்டியுள்ளது. ஒரு குழந்தை ஆசிரியருக்கே ஃபோன் செய்து பசி தாங்க இயலவில்லை எனக் கூறியுள்ளது.
அன்றைய தினமே ஜெயமேரி தன்னால் இயன்றளவுக்கு தனது பள்ளிக்குழந்தைகளுக்காக வீட்டிலேயே உணவு சமைத்துக் கொண்டு விநியோகித்திருக்கிறார். 50 குழந்தைகளுக்கு தயாரித்து உணவு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அவரது பள்ளிக்குழந்தைகள் 50 பேரையும் கடந்து பல குழந்தைகள் அந்தப் பகுதியில் பசியுடன் இருப்பதைப் பார்த்து தனது நண்பர்கள், குறிப்பாக முகநூல் நண்பர்களுடன் இணைந்து தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளார். தினமும் 100 குழந்தைகளுக்கு கலவை சாதங்கள் கொண்டு சேர்த்திருக்கிறார்.
அவரது பள்ளிக் குழந்தைகள் வசித்த பகுதியும் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக குழந்தைகள் மீண்டும் உணவு கிடைக்காமல் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அப்போது கருணை உள்ளம் கொண்டோரின் உதவியுடன் அரிசி உள்ளிட்ட 21 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகளை தன்னார்வலர்கள் மூலம் கொண்டு சேர்த்துள்ளார். எது தடையாக வந்தாலும் தனது பள்ளிக் குழந்தைகளின் பசி தீர்க்க வேண்டும் என்பது மட்டுமே அவரின் ஒற்றை இலக்காக இருந்துள்ளது.
தனது இலக்கை நிறைவேற்ற கணவர் கருப்பசாமி பெரும் உதவியாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதேவேளையில் தன்னால் மட்டுமே இந்த உதவியை முழுமையாக செய்திருக்க முடியாது. தனக்கு தன்னார்வலர்கள் பலரும், முகநூல் நட்புக்களும், சக ஆசிரியர்களும் உதவியாக இருப்பதாக அத்தனை பேரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
ஒருமுறை தனது சக ஆசிரியை ஒருவர் அவரின் மகளுக்கு குழந்தை பிறந்ததையொட்டி கோயிலுக்குச் செலுத்த வேண்டிய நேர்த்திக்கடன் கொண்டு ஒரு நாள் உணவை குழந்தைகளுக்கு வழங்கியதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
க.மடத்துப்பட்டியில் உள்ள குழந்தைகளுக்கு பசிப்பிணியைப் போக்கியும், தான் வசிக்கும் தாயில்பட்டியில் உள்ள குழந்தைகளுக்கு அறிவுப்பசியைத் தீர்த்தும் 'அருகாமைப் பள்ளி' ஆசிரியை ஜெயமேரி உயர்ந்து நிற்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT