Published : 08 Jul 2020 12:25 PM
Last Updated : 08 Jul 2020 12:25 PM

நோட்டுப்புத்தகத்துடன் அலைந்த பிஞ்சுப் பாதங்கள்: மறைந்த ஈரான் இயக்குநரின் மாஸ்டர் பீஸ்

ஈரானியத் திரைப்படங்களை உலகறியச் செய்த புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான அப்பாஸ் கிராஸ்தமி நம்மிடமிருந்து விடைபெற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.

தொடக்கக் காலத்தில் விளம்பரப் படங்களில் வடிவமைப்பு ஓவியராகப் பணிபுரியத் தொடங்கிய அவர், கவிதைகள் புனையக்கூடியவரும்கூட. குறும்படங்கள், ஆவணப்படங்கள் வழியாக திரையுலகுக்குள் நுழைந்த அவர், 20 ஆண்டுகளுக்கு மேல் ஆவணப்படத் துறையில் ஈடுபட்டார். பின்னர் திரைப்படங்களை எடுக்கத் தொடங்கினார். அதன் காரணமாகவே அவருடைய திரைப்படங்களில் ஆவணப்படத் தன்மையும் காணப்படும்.

1970இல் 'Bread and Alley' என்ற குறும்படம் அவருடைய முதல் திரை முயற்சி, எட்டு ஆண்டுகளுக்கு முன் எடுத்த 'Like Someone in Love' தான் அவருடைய கடைசிப் படம். 'Taste of Cherry' (கான் திரைப்பட விழா 'தங்கப்பனை' விருது பெற்றது), 'The wind will carry us', 'Through the Olive trees', 'Close up', 'Life and nothing more', 'Ten' ஆகியவை குறிப்பிடத்தக்க படங்கள்.

உலகளாவிய மனித மதிப்பீடுகள், உணர்வுகளைச் சொல்லும் அவருடைய திரைப்படங்கள் அதேநேரம் ஈரானியத் தன்மையையும் தக்க வைத்திருப்பவையாக இருந்தன. அவருடைய திரைப்படப் பாணி இத்தாலிய நவீன யதார்த்தவாத சாயல் கொண்டது. பெரும்பாலும் கிராமங்களைக் கதைக்களமாகக் கொண்ட அவருடைய திரைப்படங்கள் இழப்பு, வறுமையைச் சுற்றி அமைந்தவை. இந்தப் படங்களில் நம்பிக்கை இழப்பை நோக்கிய நகர்வு இருந்தாலும், மனிதர்கள் ஒருவர் மற்றவரிடையே காட்டும் அக்கறை, நம்பிக்கையின் மீதே கவனம் குவிக்கப்பட்டிருக்கும். உற்சாகம் குறைந்திருக்கும் அந்தச் சூழ்நிலைக்கு, அது ஒளியேற்றிவிடும்.

குழந்தைகளின் உலகை மிக யதார்த்தமாகக் காட்சிப்படுத்திய ஈரான் இயக்குநர்களில் ஒருவர் கிராஸ்தமி. 'கேமராவின் முன்பு குழந்தைகள் இயல்பாகத் தங்களை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதை', அதற்கு அவர் காரணமாகக் குறிப்பிடுகிறார். அதேபோல், தொழில்முறையற்ற நடிகர்களையே பல நேரம் நடிக்க வைத்திருக்கிறார். அதற்குக் காரணம், அவர்கள் நடிப்பைத் தொழிலாகப் பார்க்காமல் இருப்பதே என்று கிராஸ்தமி குறிப்பிடுகிறார்.

ஒழுக்கமும் வீட்டுப்பாடமும்

ஈரானுக்கு வெளியே அப்பாஸ் கிராஸ்தமியை உலகறியச் செய்த படம் ‘Where Is The Friend’s Home?’ (1987). அப்பாஸ் கிராஸ்தமியின் தனித்துவமான - சிந்தனையைத் தூண்டும் கதைசொல்லல் முறை கோகர் எனப்படும் மூன்று திரைப்பட வரிசை மூலம் தொடங்கியது. இந்த மூன்று திரைப்படங்களின் கதைகளுக்குத் தொடர்பில்லை என்றாலும், வடக்கு ஈரானின் கிலான் மாகாணத்தில் உள்ள கோகர் எனும் கிராமத்தை மையமாகக் கொண்டவை. இந்தத் திரைப்பட வரிசையில் முதல் படம் ‘Where Is The Friend’s Home?’ (1987).

இந்தத் திரைப்படத்தின் கதை மிக எளிமையானது. ஒரு எட்டு வயதுச் சிறுவன், தவறுதலாக எடுத்துவந்துவிட்ட தனது வகுப்புத் தோழனின் நோட்டுப்புத்தகத்தை திரும்பக் கொடுக்கச் செல்வதுதான் கதை. ஆர்ப்பாட்டமற்ற இந்தப் படத்தின் மூலம் குழந்தைமை, மனிதத்துவத்தின் அழகை கிராஸ்தமி திரை விலக்கிக் காட்டுகிறார்.

ஈரானின் கிராமப் பகுதிகளுக்கே உரிய ஒரு பள்ளியில் குழந்தைகளின் கூச்சல், களேபரங்களின் பின்னணியுடன் படம் தொடங்குகிறது. அப்போது கண்டிப்பு மிகுந்த ஒரு ஆசிரியர் வகுப்புக்குள் நுழைகிறார். குழந்தைகள் அவரவர் இடத்தில் அமைதியாக அமர்கிறார்கள். நாம் அதிகம் பார்த்த வகுப்பறைகளில் ஒன்றுதான் அதுவும். ஒழுக்கம், வீட்டுப்பாடம் ஆகியவைதாம் அங்கே முதன்மையானவை. இவை மட்டும்தான் கல்வி என்றொரு நம்பிக்கையை வலுவாகக் கொண்ட வழக்கமான பள்ளிக்கூடம்.

ஆனால், அந்த வகுப்பறையின் நடைமுறைக்கு மாறாக முகமது ரெசா வீட்டுப் பாடம் செய்யாமல் வந்திருக்கிறான். அவனுடைய வீட்டுப்பாட நோட்டுப்புத்தகம் எங்கே என்று ஆசிரியர் கேட்கிறார். முகமது ரெசா கண்ணீருடன் எழுந்து நின்று, தன் ஒன்றுவிட்ட சகோதரர்கள் வீட்டில் அந்த நோட்டுப்புத்தகத்தை மறந்து வைத்துவிட்டு வந்ததாகக் கூறுகிறான். அதைக் கேட்டு ஆசிரியர் கடுங்கோபமடைகிறார். அவனுக்குக் கடைசி எச்சரிக்கை விடுக்கிறார்: நாளைக்கும் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்தால், பள்ளியை விட்டே உன்னைத் துரத்திவிடுவேன் என்று மிரட்டுகிறார். அதே வகுப்பிலிருக்கும் அகமது, இதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் முகமது ரெசாவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவன். இருவரும் நண்பர்கள்.

நண்பனின் இல்லம் தேடி

அகமது வீடு திரும்பிய பின் வீட்டுப்பாடம் செய்ய நோட்டுப்புத்தகத்தை எடுக்கிறான். அப்போதுதான் அவன் செய்த தவறு புரிகிறது. முகமது ரெசா வீட்டுப்பாடம் செய்யவேண்டிய நோட்டுப்புத்தகத்தையும் தவறுதலாக அகமது எடுத்து வந்துவிட்டான். அந்த நோட்டுப்புத்தகத்தை இன்றைக்கே ரெசாவிடம் திரும்பத் தந்தால்தான், பள்ளியிலிருந்து அவன் வெளியேற்றப்படுவதை அடுத்த நாள் தடுக்க முடியும் என்று அகமது நினைக்கிறான். ஆனால், அவனது அம்மாவோ அகமது சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவேயில்லை. இன்னொரு பிரச்சினை ரெசாவின் வீட்டு முகவரி அகமதுவுக்குத் தெரியாது. போஷ்டே என்ற கிராமத்தில் ரெசா வசிக்கிறான் என்பது மட்டும்தான் தெரியும்.

ரெசாவின் கிராமத்துக்குச் செல்ல தன் அம்மாவிடம் அகமது அனுமதி கேட்டுக்கொண்டே இருக்கிறான். ஆனால், அதைக் காதுகொடுத்துக் கேட்காமல் அடுத்தடுத்து வெவ்வேறு வீட்டு வேலைகளைச் செய்யுமாறு அவனை அவர் பணித்துக்கொண்டே இருக்கிறார். கடைசியாக, அந்த நோட்டுப்புத்தகத்தை நாளைக்குக் கொடுத்தால் என்ன ஆகிவிடப் போகிறது என்று அகமதுவிடம் அவர் கேட்கிறார். அம்மாவின் பதிலில் அகமதுவுக்குத் திருப்தியில்லை.

நோட்டு இல்லையென்றால் ரெசா வீட்டுப்பாடம் செய்ய முடியாது, வீட்டுப்பாடம் செய்ய முடியவில்லை என்றால் ரெசா பள்ளியைவிட்டு வெளியேற்றப்படுவான். அதைத் தடுப்பதற்கான ஒரே வழி ரெசாவிடம் நோட்டுப்புத்தகத்தை இன்றைக்கே ஒப்படைப்பதுதான். கடைசியாக, ரொட்டி வாங்க அகமதுவை அவனுடைய அம்மா வெளியே அனுப்புகிறார். இதுதான் சமயமென்று கையில் நோட்டுப்புத்தகத்துடன் போஷ்டே கிராமத்தை நோக்கிப் புறப்படுகிறான் அகமது. தனக்குத் தெரியாத ரெசாவின் வீட்டைத் தேடி ஓடுகிறான்.

கிடைக்காத வீடு

போஷ்டேயின் குறுகலான, சரிவான சந்துகள் வழியே ரெசாவின் வீட்டைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறான் அகமது. அப்போது எதிர்பாராமல் எதிர்படும் அவனுடைய வகுப்புத் தோழன் ஒருவன், போஷ்டேயின் கானேவர் பகுதியில் ரெசா வசிப்பதாகக் கூறுகிறான். கானேவர் பகுதியை அடைந்த பின்னரும்கூட அகமதுவால் ரெசாவின் வீட்டைக் கண்டறிய முடியவில்லை. அந்தப் பகுதியின் பல தெருக்களில் சுற்றி, பலரிடம் விசாரித்த பிறகு, ரெசாவும் அவனுடைய அப்பாவும் கோகர் கிராமத்துக்கு அப்போதுதான் புறப்பட்டுப் போன தகவல் தெரியவருகிறது. கோகர் - அகமது வசிக்கும் கிராமம். அங்கிருந்துதான் அவன் இங்கே ஓடி வந்திருக்கிறான்.

சரி என்று தன்னுடைய கிராமத்துக்கே மீண்டும் ஓடுகிறான் அகமது. ஆனால், அங்கு சென்ற பிறகுதான் அவர்கள் குறிப்பிட்டது வேறெரு ரெசா என்று அகமதுவுக்குத் தெரியவருகிறது. வேறு வழியில்லை, நோட்டுப்புத்தகத்தை உண்மையான ரெசாவிடம் கொடுக்க வேண்டுமென்றால், போஷ்டே கிராமத்துக்குத் திரும்பவும் சென்றாக வேண்டும். மீண்டும் போஷ்டேவுக்கே ஓடுகிறான் அகமது. இருள் கவிந்த நிலையில் சில தெருக்கள் வெளிச்சமற்று இருக்கின்றன. நாய்கள் குரைக்கின்றன. ஆனாலும் அகமது பதைபதைப்புடன் ரெசாவைத் தேடுகிறான். அவனுடைய முயற்சி விழலுக்கு இறைத்த நீராகிறது. கடைசிவரை ரெசாவின் வீட்டை அவனால் கண்டறியவே முடியவில்லை. அயர்ச்சியடைந்து வீடு திரும்புகிறான் அகமது. அவனுடைய மனத்தை பெரும் குற்றவுணர்வு அழுத்துகிறது. திடீரென்று அவன் காணாமல் போனது பற்றி, அவனுடைய பெற்றோர் அதிர்ஷ்டவசமாக அன்றைக்குத் திட்டாமல் இருக்கிறார்கள்.

அடுத்த நாள். பள்ளி தொடங்குகிறது. வகுப்பில் வீட்டுப்பாடங்களை ஒவ்வொருவரும் செய்திருக்கிறார்களா என்று ஆசிரியர் பார்த்துக்கொண்டிருக்கிறார். பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவதற்குத் தயாராக, நம்பிக்கையிழந்த நிலையில் ரெசாவும் உட்கார்ந்திருக்கிறான். அகமது சற்று தாமதமாக வருகிறான். அவன் தன்னுடைய வீட்டுப்பாடத்துடன், ரெசாவின் நோட்டுப்புத்தகத்திலும் வீட்டுப்பாடத்தை எழுதி எடுத்துவந்திருக்கிறான். ரெசாவிடம் நோட்டுப்புத்தகத்தை வாங்கிப் பார்க்கும் ஆசிரியர், அவனைப் பேசாமல் விட்டுவிடுகிறார். அந்த நோட்டுப்புத்தகத்துக்குள் ரெசாவுக்காக அகமது வைத்த மலர் ஒன்று, மற்றொரு பக்கத்தில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது!

வெறும் சென்டிமென்டா?

பொதுவாக ஈரானியத் திரைப்படங்கள் எல்லாம் வெறும் சென்டிமென்ட் படங்கள்தாம், அவற்றில் புதிதாக எதுவுமில்லை என்று உலக சினிமா ரசிகர்கள் சிலர் புறந்தள்ளிவிடுவது நடக்கிறது. ஆனால், அவ்வளவு எளிதாக முத்திரை குத்தி ஒதுக்கிவிட முடியாதவையாக ஈரானியத் திரைப்படங்கள் இருக்கின்றன. நமது பார்வை, புரிதல் சார்ந்த பல கேள்விகளை இந்தப் படமும் சத்தமில்லாமல் எழுப்பிச் செல்கிறது.

அகமது தன் நண்பன் ரெசாவின் வீட்டைத் தேடிச் செல்லும்போது, பல பெரியவர்கள் அவனுக்கு உதவுவதில்லை. அல்லது இருவருக்கும் இடையிலான தொடர்புகொள்ளலில் நிகழும் புரிதலின்மையால் குழப்பத்தில் சென்று முடிகிறது. படம் முழுக்கப் பெரியவர்கள், குழந்தைகளுக்குக் கட்டளைகள், வேலைகள் போன்றவற்றைப் பிறப்பித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் இடையில் குழந்தைகள் கீழ்ப்படிய வேண்டியது அவசியம் என்றொரு கருத்து திரும்பத் திரும்ப பல கதாபாத்திரங்களால் வலியுறுத்தப்படுகிறது. அதிகாரத்துக்குக் கீழ்படிய வேண்டும், அரசுக்குக் கீழ்படிய வேண்டும், மதத்துக்குக் கீழ்படிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதன் தொடர்ச்சியை இத்துடன் பொருத்திப் பார்க்கலாம்.

அடுத்தவர் வலியை உணரும் ஒத்த உணர்வு, குழந்தைமையைப் புரிந்துகொள்ளுதல் ஆகிய அம்சங்களை இந்தப் படம் ஆழமாக நெருங்கிச் சென்றிருக்கிறது. குழந்தைகளை நாம் எவ்வளவு தூரம் புரிந்துகொண்டிருக்கிறோம் என்ற வலுவான கேள்வியை இந்தப் படம் திரும்பத் திரும்ப எழுப்புகிறது. சக மனிதர் மீதான கரிசனம், தன்னலமற்ற தன்மை ஆகியவையே இந்த உலகை நகர்த்திச் செல்பவை என்பதை இந்தக் கதையும் திரைப்படமும் மீண்டும் ஒரு முறை புரிய வைக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x