Published : 13 Jun 2020 04:54 PM
Last Updated : 13 Jun 2020 04:54 PM
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு மூலிகை டீ, ஆங்கில மருத்துவம் ஆகிய கூட்டு சிகிச்சையால் நல்ல பலன் கிடைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று இருந்தது. அவர்கள் குணமடைந்தநிலையில் தொடர்ந்து 21 நாட்களுக்கு கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை இருந்தது.
அதன்பிறகு வெளிமாநிலம், சென்னையில் இருந்து வந்தவர்களால் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருபுறம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இதற்கு மூலிகை டீ, ஆங்கில மருத்துவம் ஆகிய கூட்டு சிகிச்சையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனின் அனுமதியோடு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையோடு, காலை, மாலை ‘வாதம் பித்தம் கபம் விஷசுரம் டீ’ என்ற மூலிகை டீ வழங்கப்பட்டு வருகிறது.
இந்த டீயை காரைக்குடி ஆவுடைப்பொய்கையைச் சேர்ந்த இந்திய பாரம்பரிய மூலிகை மருத்துவர் சி.சொக்கலிங்கம் வழங்கி வருகிறார். மூலிகை டீயில் ஆடாதொடை, சுக்கு, திப்பிளி, வால்மிளகு, ஏலம், கிராம்பு, போய்புடல், அதிமதுரம், மஞ்சள், கண்டங்கத்தரி, துளசி உள்ளிட்ட 27 மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன.
மேலும் சிவகங்கையில் கரோனா நோயாளிகள் அனைவரும் 5 முதல் 7 நாட்களில் குணமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து மூலிகை மருத்துவர் சி.சொக்கலிங்கம் கூறியதாவது: மூலிகை டீயில் சேர்க்கப்படும் மூலிகைகள் அனைத்தும் உணவுப்பொருட்கள். அதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது.
டீயை சில மூலிகைகளை வறுத்தும், சிலவற்றை ஊற வைத்தும், சிலவற்றை சாறு எடுத்தும் தயாரிக்கிறோம். ஒரு லிட்டரில் 35 கிராம் மூலிகைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பத்தில் ஒரு பங்காக வற்றியதும், அதை குடிக்கலாம். கரோனா பாதித்தோருக்கு காலை, மாலை இருவேளையும் 50 மி.லி.-ம், மற்றவர்கள் 25 மி.லி-ம், குழந்தைகள் 10 முதல் 15 மி.லி-ம் குடிக்கலாம். நோயாளிகள் 5 முதல் 7 நாட்கள், மற்றவர்கள் 3 முதல் 5 நாட்கள் குடித்தால்போதும்.
தற்போது ஆட்சியர் முயற்சியால் மருத்துவமனையில் மட்டும் கொடுக்கிறோம். ஓரிரு தினங்களில் பொடியாக தயாரித்து அனைத்து மாவட்டங்களிலும் வழங்க முடிவு செய்துள்ளோம், என்று கூறினார்.
மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் கூறுகையில், ‘ கரோனா சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவத்தோடு, மூலிகை டீயும் சேர்த்து கொடுக்கும்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால் மூலிகை டீ தொடர்ந்து கொடுக்க சொல்லியுள்ளேன்,’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT