Published : 25 Aug 2015 08:49 AM
Last Updated : 25 Aug 2015 08:49 AM

இன்று அன்று | 1962 ஆகஸ்ட் 25: ஒற்றுமையை வலியுறுத்தும் படைப்பாளி

“…விடிந்த பின்பும் படுக்கையில் நிம்மதியாகப் படுத்துக் கிடந்த சுரன்ஜன் மெதுவாக செய்தித்தாளைப் பிரித்தான். ‘பாபர் மசூதி தகர்ப்பு’ என்றது தலைப்புச் செய்தி. அதுவரை அவன் அயோத்திக்குச் சென்றதில்லை. பாபர் மசூதியைக் கண்டதில்லை. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தத் தொன்மையான கட்டிடம் இடித்து நொறுக்கப்பட்டது இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை மட்டுமல்ல; இந்துக்களையும் கலங்கடிக்கும் என அவன் நம்பினான். அந்த நாசகார வேலையானது நல்லிணக்கத்தையும் கூட்டு உணர்வையும் அழித்தொழிக்கும். இது வங்கதேசத்திலும் எதிரொலிக்கும். இரண்டரைக் கோடி இந்துக்கள் வங்கதேசத்தில் வாழ்கிறார்கள் என்பது அந்த இந்து மத ஆதரவாளர்களுக்குத் தெரியுமா?”

இப்படி, பாபர் மசூதி சம்பவத்துக்கு எதிர்வினையாய் வங்க மொழியில் ‘லஜ்ஜா’ (தமிழில் ‘அவமானம்’) நாவல் எழுதி 1993-ல் வெளியிட்டார் தஸ்லிமா நஸ்ரின். இந்தியாவில் தெறித்த மதவெறி வங்கதேசத்து இந்து சிறுபான்மையினரையும் எப்படிச் சித்தரவதைக்கு உள்ளாக்கியது என்பதைத் தன் நாவலில் படம்பிடித்துக் காட்டினார். வங்கதேச அரசு புத்தகத்தைத் தடை செய்தது. வங்கதேச இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர் கொலை மிரட்டல் விடுத்தனர்.

மனம் நொந்த தஸ்லிமா, 1994-ல் தன் சொந்த மண்ணைவிட்டு வெளியேறினார். 1962 ஆகஸ்ட் 25-ல் வங்கதேசத்தில் உள்ள மைமன்சிங் என்னும் சிற்றூரில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தார் தஸ்லிமா நஸ்ரின். மகப்பேறு மருத்துவராக வேலைபார்த்த காலங்களில் பெண் சிசுவைப் பெற்றெடுக்கும் ஒவ்வொரு பெண் விடும் கண்ணீருக்கும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும் நேரடிச் சாட்சியாக நின்றார். காலங்காலமாக மத நம்பிக்கை, சமூக விழுமியங்கள் பெயரால் நிகழும் அநீதிகள் அவரை உலுக்கின. 1982-1993-வரை பெண்ணியக் கவிதைகள் எழுதியவர் 1993-ல் ‘லஜ்ஜா’ நாவலை எழுதினார்.

தொடர்ந்து பெண் விடுதலை குறித்து, அடிப்படைவாதத்தை விமர்சித்து, மனித உரிமைகளை முன்னிறுத்தி, மதச்சார்பற்ற மனித நேயத்தைத் தூக்கி நிறுத்திப் பல கட்டுரைகள், நாவல்கள் எழுதிவருகிறார். தினந்தோறும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் தஸ்லிமா கடந்த 20 ஆண்டுகளாக நாடு விட்டு நாடு சென்று தன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார்.

- சரித்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x