Published : 20 Aug 2015 09:45 AM
Last Updated : 20 Aug 2015 09:45 AM

என்.ஆர்.நாராயண மூர்த்தி 10

இந்தியா ஐடி வல்லரசாகக் காரணமானவர்

இந்தியாவின் புகழ் வாய்ந்த தொழிலதிபரும், சமூக சீரமைப்பு, கிராமப்புற மேம்பாடு ஆகிய சமூகப் பணிகளை மேற்கொண்டு வருபவருமான என்.ஆர்.நாராயண மூர்த்தி (N.R.Narayana Murthy) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 20). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து

# கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார் (1946). நாகவாரா ராமாராவ் நாராயண மூர்த்தி இவரது முழுப்பெயர். மைசூர் பல்கலைக்கழகத்தில் 1967-ல் மின் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1969-ல் கான்பூரில் உள்ள ஐஐடி-யில் மின்னணு பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

# 1969-ல் ஆமதாபாத்தில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் கணினித் துறையில் வேலைக்கு சேர்ந்தார். சிறிது காலம் புனேயில் வேலை செய்த இவர், 1972-ல் பிரான்ஸில் பணியாற்றினார். இந்தியா திரும்பிய இவர், 1981-ல் மிகக் குறைந்த முதலீட்டுடன் சில நண்பர்களுடன் சேர்ந்து ‘இன்ஃபோசிஸ்’ மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

# அடுத்த ஆண்டே பெங்களூரில் தன் அலுவலகத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கியது. இதுவே இதன் தலைமை அலுவலகமாக மாறியது. குறுகிய காலத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டிய இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ச்சியடைந்தது.

# இந்த நிறுவனத்தை இந்தியாவில் மிக அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிய நிறுவனம் என 2001-ல் ‘பிசினஸ் டுடே’ பத்திரிகை புகழாரம் சூட்டியது. உலகம் முழுவதும் சுமார் 22 நாடுகளில் செயல்படும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

# 2003, 2004, 2005-ம் ஆண்டுகளுக்கான குளோபஸ் விருதையும் இன்ஃபோசிஸ் வென்றது. இவ்விருதைப் வென்ற ஒரே நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

# மென்பொருள் தொழில்நுட்பத் துறையில் மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் பங்களிப்பை வழங்கி வருகிறார். தனது மனைவி சுதா நாராயணமுர்த்தியின் ஒத்துழைப்புடன் 1996-ல் இவர் தொடங்கிய இன்ஃபோசிஸ் அறக்கட்டளை கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சமூக சீரமைப்பு, கிராமப்புற மேம்பாடு, சுகாதாரம், கல்வி என அனைத்து களங்களிலும் சேவையாற்றி வருகிறது. இதன் மூலம் 3500-க்கும் மேற்பட்ட நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

# இவரது தன்னலமற்ற தொண்டுகளைப் பாராட்டி, அமெரிக்காவின் கவுரவம் மிக்க ‘ஹூவர் பதக்கம்’ வழங்கப்பட்டது.

# இவரது சமூக சேவைகளுக்காக, பத்ம, பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. நேர்மை, எளிமை, உண்மையை தன் வாழ்க்கையில் பின்பற்றுபவர். தனது நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி மட்டுமே கவலைப்படாமல், நாட்டின் ஒட்டு மொத்த தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி பற்றியும் சிந்தித்தவர்.

#இந்தியாவை தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய சக்தியாக மாற்றியவர்களில் இவரது பங்கு மகத்தானது. 2002 வரை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், தற்போது இக் குழுமத்தின் கவுரவ தலைமை ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்ஃபோசிஸ் நிறுவன வளர்ச்சி பாதிக்கப்பட்டதால் மீண்டும் இன்ஃபோசிஸின் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

# கடந்த ஆண்டு தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய இவர், மீண்டும் சமூக சேவைகளைத் தொடருகிறார். இந்தியா தற்போது தகவல் தொழில் நுட்பத் துறையில் வல்லரசாகத் திகழ்வதற்கு காரணமாகத் திகழ்பவர் நாராயணமூர்த்திதான் என்று போற்றப்படுகிறார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x