Published : 23 Jul 2015 10:10 AM
Last Updated : 23 Jul 2015 10:10 AM

இணைய களம்: குடிப்பழக்கமும் கலாச்சார வெறுமையும்

ராஜன் குறை

மதுப் பழக்கம் ஒரு பெரும் சமூகத் தீமையாக மாறியுள்ளதையும், குறிப்பாக எளிய உழைக்கும் மக்கள், தலித் மக்கள் வாழ்க்கையில் பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்துவதையும் யாரும் கவனிக்காமல் இருக்க முடியாது. அதிலும் டாஸ்மாக் விநியோகம் கேள்வி கேட்க ஆளில்லாமல் தாறுமாறாக நிகழ்ந்துவருவது கூடுதல் அவலம். இந்நிலையில், மதுவிலக்கின் அவசியத்தை திமுக தலைவரே அங்கீகரித்திருப்பது வரவேற்கத் தக்கது. ஆனால், மதுவிலக்கு நிரந்தரத் தீர்வு கிடையாது. மதுவுக்கு அடிமைப்படாமல் இருக்கும் கலாச்சார ஆற்றலை எளிய, உழைக்கும் மக்கள் பெறுவதுதான் நிரந்தரத் தீர்வு. மாலை, முன்னிரவு நேரங்களில் இளைஞர்களும் ஆண்களும் கூடி விளையாட்டுகளில், உரையாடல்களில் ஈடுபடுவதற்கான வெளிகளையும், வாய்ப்புகளையும் நகர, கிராம குடியிருப்புப் பகுதிகளில் உருவாக்குவதும், வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பெண்கள் வசமாகி விடுவதால், பொதுத் தொலைக்காட்சிப் பெட்டிகளை அந்தப் பொது வெளிகளில் ஆண்களுக்காக வைப்பதும் சில தீர்வுகளை உருவாக்கலாம். அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் வேலைத் திட்டத்தில் ஒரு கலாச்சார மாற்றத்தை உருவாக்க முனைவது அவசியம். கலாச்சார வெறுமையே குடிப் பழக்கத்துக்கு அடிமையாகும் சூழலைப் பெரும்பாலும் உருவாக்குகிறது.

சந்தோஷ் நாராயணன்

அறிவியலில் பான்ஸ்பெர்மியா (Panspermia) தியரி என்று ஒன்று இருக்கிறது. கற்பனை என்று பெரும்பாலான அறிவியலாளர்கள் உதாசீனப்படுத்தினாலும், இந்த தியரியை ஆதரிப்பவர்களும் உண்டு. மனிதர்கள் உட்பட பல உயிரிகள் இந்த பூமியில் உருவானவையல்ல; பிரபஞ்சத்தின் வேறு இடத்திலிருந்து இங்கே வந்தவை என்பதுதான் அந்த தியரியின் உள்ளடக்கம்.

டாக்டர். எல்லிஸ் சில்வர் என்னும் எகோலஜிஸ்ட் இன்னும் ஒரு படி மேலே சென்று, மற்ற உயிரிகள் பூமியில் பிறந்தவைதான், ஆனால் மனிதர்கள் மட்டும் வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்று தன் ‘ஹ்யூமன்ஸ் ஆர் நாட் ஃப்ரம் எர்த்’புத்தகத்தில் அடித்துச் சத்தியம் செய்கிறார்.

சூரிய ஒளிக்கு ஏற்றவாறு மனிதர்களின் உடல் வடிவமைக்கப்படவில்லை என்றும், பிற விலங்குகளைப் போல மனித உடல் தொடர்ச்சியாகச் சூரிய ஒளியைத் தாங்கிக்கொள்ளும் தன்மையுடன் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார். இப்படிப் பல உதாரணங்கள். மனிதர்கள் பூமியில் செய்யும் அழிச்சாட்டியங்களைப் பார்க்கும்போது இந்த தியரி உண்மையாக இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது.

மனிதர்கள் ஒவ்வொரு கிரகங்களாகப் பயணித்து, அங்கே இருக்கும் தண்ணீர் வளங்களைக் காலி செய்துவிட்டு, வேற்றுக் கிரகங்களை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார்களோ எனும் சந்தேகம் எழுகிறது. டைட்டனின் ஏரிகளை வற்றச் செய்தவர்கள் தான் பிறகு பூமிக்கு வந்து இப்போது இங்கே நிலத்தடி நீர் வளத்தைக் காலி செய்துகொண்டிருக்கிறார்களோ?

தளவாய் சுந்தரம்

ஐந்து நிமிடங்கள் இடைவெளியில் இரண்டு செய்திகள் படித்தேன். முதல் செய்தி: உலக அளவில் 100 ஆண்டுகளில் 49 வயதாக இருந்த சராசரி ஆயுட்காலம் 79 வயதாக அதிகரித்துள்ளது என்கிறது. இந்தியாவில் 66.8 ஆக உள்ளதாம். இதற்கு முன்பு 49-க்கும் குறைவாகத்தான் இருந்திருப்போம். இரண்டாவது செய்தி: நமது பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வேளாண்மையில் இருந்து நாம் விலகிவந்துவிட்டதால் நோய்கள் அதிகமாகிவிட்டன என்கிறது. நமது முன்னோர்கள்போல் நாமும் ஆரோக்கியமாக இருக்க பாரம்பரிய உணவு முறைக்குத் திரும்ப வேண்டும் என்கிறது. ஏற்கெனவே எதைச் சாப்பிடுவது, எதைத் தவிர்ப்பது என ஏகப்பட்ட குழப்பம். விருப்பமான உணவுகள் பக்கம் போகும்போதே விஷம் அல்லது நாள்பட்டது அல்லது உள்ளே புழு என படித்த பத்திரிகை கவர் ஸ்டோரிகள் ஞாபகம் வந்து கையைப் பிடித்து இழுக்கின்றன. பத்திரிகைகள் மறந்தாலும் முகநூல், வாட்ஸ் அப் வழியாக வந்து ஆதாரங்களுடன் அச்சுறுத்துகிறார்கள். இப்போதெல்லாம் பசங்களுக்கு என்ன வாங்கிக் கொடுக்கலாம் எனப் பத்திரிகைகளில் படித்த ஆரோக்கிய உணவுகள்பற்றிய கட்டுரையை நினைவில் மீட்டெடுக்க முயற்சிக்கும் நேரத்திலேயே, பசங்கள் கடுப்பாகி, ‘இருந்திருந்து இந்த வீட்டில் வந்து பிறந்தேன் பார், வேறு எங்காவது பிறந்திருக்கலாம்’என புரட்சிக்கொடி ஏந்துகிறார்கள். என்ன செய்ய?!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x