Published : 04 Jul 2015 11:05 AM
Last Updated : 04 Jul 2015 11:05 AM

மெட்ரோ ரயில்ல இதெல்லாம் நடக்காது நைனா

‘‘ஆபீசர் சார்! அசந்து தூங்கிட்டேனோம்.இப்பத்தான் எந்திருச்சேனோம். பல்தேச்சு குளிச்சு டிபன் கட்டிக்கிட்டு அரை மணி நேரத்துல வந்துடுவேனாம்’’ என்று உயரதிகாரியிடம் சொல்ல முடியாமல், ‘‘சார்! செம டிராபிக். ஆஃபனவர் பர்மிஷன் ப்ளீஸோ ப்ளீஸ். ஸாரி’’ என்று போர்வையை விலக்காமல் ஆபீஸருக்கு எஸ்.எம்.எஸ். போடுவோர் கவனத்துக்கு.. சொன்ன நேரத்துக்கு ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் மெட்ரோ ரயில் இயங்கும் என்பதால் இந்த சால்ஜாப்பெல்லாம் இனி சொல்ல முடியாது.

ஜன்னலோர இருக்கை கிடைத்துவிட்டால், அந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு துப்புபவர்கள் சிலர். வாய்க்குள் இருந்து குபீரெனப் பாயத் தயாராக இருக்கும் பான் மசாலா கலவையைக் காட்டி ‘மிரட்டி’ ஜன்னலோர இருக்கையைப் பிடிப்பவர்கள் சிலர். அப்படி இடம் கிடைக்காவிட்டாலும் உட்கார்ந்திருப்பவர்களை விலக்கி ஒட்டகச் சிவிங்கிபோல் தலையை ஜன்னலுக்கு வெளியில் விட்டு ‘பளிச்’ என்று ‘புளிச்’ செய்பவர்கள் சிலர். மெட்ரோ ரயிலிலோ, ரயில் நிலையத்திலோ இப்படி துப்பார்க்குத் துப்பாய துப்பிக்கொண்டே இருந்தால் கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுக்கும். அபராதம் கட்ட வேண்டிவரும்.

தங்கள் பெயரை பொன்னெழுத்துகளால் சரித்திரத்தில் பொறிக்க முடியாவிட்டாலும் ரயில்களில் பொறிப்பது சிலர் வழக்கம். கலைக் கல்லூரிகளில் எந்தெந்த பசங்க ‘அரியர்’ கோஷ்டி, அந்த கோஷ்டிகள் யார் யாருக்கு வலைவீசிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களது காதல் எந்த அளவுக்கு ஆழம் என்பதுவரைகூட ரயிலில் பொறிக்கப்படும் வாசகங்களை வைத்தே ஊகித்துவிடலாம். மெட்ரோ ரயிலில் அப்படி கிறுக்கினால், கம்பி எண்ணிக்கொண்டே சிறைச் சுவர்களில் கிறுக்க வேண்டியதாகிவிடும்.

ஜில்லென்ற காற்று முகத்தில் அடிக்க, ஜன்னலோரம் உட்கார்ந்திருக்கும் இளம்பெண், பெண், பெண்மணி, பாட்டிகளிடம் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு படிக்கட்டில் தொங்கிக்கொண்டே மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய முடியாது. எல்லாம் தானியங்கிக் கதவுகள். கதவுகள் அடைத்தால்தான் ரயில் புறப்படும்.

பயணத்துக்காக புளிசாதம், எலுமிச்சை சாதம் பொட்டலம் கட்டுபவர்கள் ஒரு ரகம். இவற்றை சாப்பிடுவதற்காகவே ரயிலில் பயணித்து ‘ஒரு கட்டு’ கட்டுபவர்கள் இன்னொரு ரகம். இதற்கு மெட்ரோ ரயிலில் சாத்தியம் இல்லை. அதற்கு அனுமதியும் இல்லை.

“பிளைட்ல துபாய்லேர்ந்தே ரெண்டு மூணு தடவை டிக்கெட் எடுக்காம வந்தவங்க நாங்க.. தெரியும்ல’’ என்று ஜம்பம் காட்ட முடியாது. டிக்கெட் எடுக்காமல் மெட்ரோ ரயிலுக்குள் மட்டுமல்ல, ரயில் நிற்கும் இடத்துக்கு அருகில்கூட செல்ல முடியாது. டிக்கெட் அட்டையை ஸ்வைப் செய்தால்தான் உள்ளேயே செல்லமுடியும். ‘வீட்டில்தான் ஆளில்லையே. கொஞ்சநேரம் பொழுதுபோக்கிட்டு போலாம்’ என்று ஸ்டேஷனில் உலாத்தினால் அதற்கும் சேர்த்து கட்டணம் கட்டவேண்டி வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x