Last Updated : 26 Jun, 2015 01:06 PM

 

Published : 26 Jun 2015 01:06 PM
Last Updated : 26 Jun 2015 01:06 PM

ஆக்ஸ்போர்டு கனவுக்கு இணையத்தில் உதவிக் கரம் ஏந்தும் சமூக சேவை மாணவி

சென்னை நந்தனத்தைச் சேர்ந்த மாணவி பாக்யாவுக்கு சமூக சேவை தொடர்பான ஆராய்ச்சிக்காக இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமூகக் கொள்கைகள் துறையில் உயர் கல்வி பயில இடம் கிடைத்திருக்கிறது.

கட்டணத் தொகையாக 30 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவரால் அவ்வளவு பணத்தைத் திரட்ட முடியாத நிலையில், >பொதுமக்களிடம் நிதி திரட்டும் கிரவுட் ஃபண்டிங் மூலம் இணையத்தின் வாயிலாக உதவியை நாடியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, "நான் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றேன். பின்னர் மும்பையில் உள்ள டாடா சமூகக் கல்லூரியில் [TISS] சமூக சேவையில் முதுகலைப் பட்டம் பெற்றேன். மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் திறமைகளை ஊக்கவிக்கும் வகையில் "கனவு பட்டறை" எனும் திட்டத்தில் இணைந்தேன். சமூகத்தின் அடித்தட்டில் வாழும் குழந்தைகளின் சுற்றுப்புறச் சூழ்நிலை, அவர்களின் மனநிலையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்தேன்.

நம் சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் துன்பங்கள், பள்ளி பயிலும் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்யவேண்டும் என்பதே எனது குறிக்கோள். இது குறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் செய்யத் திட்டமிட்ட போது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், உலக அளவில் சமூக நலம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கான படிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளதை அறிந்தேன். இந்தப் படிப்பைத் தேர்வு செய்து, ஆர்வத்துடன் விண்ணப்பித்தேன். இடமும் கிடைத்தது. இந்தப் படிப்புக்கு, உலக அளவில் 22 பேரை மட்டுமே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தேர்ந்தெடுத்துள்ளது. அதில் நானும் ஒரு மாணவி. ஆனால் அப்படிப்புக்கான கட்டணத்தை இம்மாதம் 28-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லையெனில் என்னால் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில முடியாது" என்றார்.

மேலும், சமூகத்தில் இருந்து பணம் திரட்ட எண்ணியவர், கிரவுட் ஃபண்டிங் தளமான இண்டிகோகோ.காமில் (indiegogo.com) தன்னை இணைத்துக் கொண்டார். இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் சுமார் எட்டு லட்சத்துக்கும் அதிகமான பணத்தைச் செலுத்தி உள்ளனர். மீதத் தொகை இன்னும் திரட்டப்படவில்லை.

கொடையாளர்களிடம் இருந்து பணம் கிடைத்தால்தான் தன்னால் படிக்க முடியும் என்று கூறிய பாக்யா, மீதமுள்ள தொகை இரண்டு நாட்களுக்குள் கிடைக்க வேண்டும். இல்லையெனில் இதுவரை திரட்டிய பணத்தை, நிதியளித்தவர்களின் வங்கிக் கணக்குக்கே திரும்பச் செலுத்தி விடுவேன் என்றவர், பொதுமக்கள் தங்களால் ஆன உதவியைச் செய்து அவரது மேற்படிப்பிற்கு வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பாக்யாவுக்கு உதவ விரும்புவோர் கூடுதல் விவரம் அறிய நாட வேண்டிய தளத்தின் இணைப்பு>Support Bhagya go to Oxford before 28th June

தொடர்புடைய வீடியோ பதிவு: