Published : 14 May 2015 12:58 PM
Last Updated : 14 May 2015 12:58 PM

என்ன பண்ணலாம்?- ஓர் உதவி இயக்குநரின் உருக்கமற்ற மடல்

ஒரு முன்னணி இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறேன். படப்பிடிப்பில் ஒரு வாரம் இடைவெளி என்றவுடன், வித்தியாசமாக ஒரு கதை எழுத வேண்டும் என்று நினைத்தேன். யாருடைய தொந்தரவும் இருக்கக் கூடாது என்று ஃபோனை எல்லாம் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிட்டு கதை யோசித்து எழுத ஆரம்பித்தேன்.

புடம் போட்ட தங்கப் புதையல் தோண்ட போய் கடைசியில் ஒரு வெண்கலக் கிண்ணம் கிடைத்த கதையாக... என்னால் இந்தக் கடிதத்தை மட்டுமே எழுத முடிந்தது. ஏன்... என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள ஆவலா?

முதல் படம் இயக்கும் எல்லா இயக்குநருக்கும் என்னுடைய நிலைமையில்தான் இருந்திருப்பார்கள் என்பது என் கணிப்பு. வசூலிலும் வரவேற்பு, ஹிட், எனக்கும் பெயர் கிடைக்க வேண்டும் என்று நினைத்து முதலில் கமர்ஷியல் கதை எழுதலாமா என்று நினைத்தேன். "அய்யோ.. இயக்குநர் ஹரி, இயக்குநர் பேரரசு பாணியில் ஒரு படம்" என்று இணைய விமர்சகர்கள் கழுவியூற்றுவார்கள் என்று பயந்து ஒதுக்கிவிட்டேன்.

சரி.. ஒரு திருட்டை மையப்படுத்தி சுவாரசிய கதை எழுதலாம் என்று நினைத்தபோது இயக்குநர் நலன் குமாரசாமி, வெங்கட்பிரபு பாணி படம்பா என்று சொல்வார்கள் என நினைத்து அந்த எண்ணத்தையும் குழி தோண்டி புதைத்தேன்.

காதல் ரசம் சொட்டச் சொட்ட முத்தக் காட்சிகளோடு ஓர் உன்னதக் காதல் கதை எழுதலாம் என்று நினைத்தேன். எவ்வளவு காலமாக தமிழ் சினிமாவில் இதே காதலைப் பார்ப்பது என்று புலம்புவார்கள் என நானும் புலம்பிக்கொண்டே கதை எழுதிய பேப்பரை குப்பையில் போட்டுவிட்டேன்.

பார்ப்பவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்க வைக்க ஒரு நல்ல காமெடி கதை எழுதலாம் என்று சிரித்துக் கொண்டே உட்கார்ந்தேன். பார்ப்பவர்கள் சிரிக்கிறார்களோ இல்லையோ இயக்குநர் சுந்தர்.சி, ராஜேஷ் ஆகியோரின் ட்ரெண்ட் பின்னாடி போயிருக்கான்பா இயக்குநர் என சொல்லுவார்களே என்ற கடுப்புடன் எழுதிய கதையை அடுப்பில் போட்டுவிட்டேன்.

ஹய்யோ.. சூப்பர் பேய் படம் எடுக்கலாம் என்று நள்ளிரவில் கதை எழுத உட்கார்ந்தேன். பேய் வந்து பயம் முறுத்தும் முன் ஒரே ட்ரெண்ட்டை தமிழ் சினிமாவில் பாலோ பண்றாங்கப்பா... அதுல இதுவும் ஒண்ணு என்று கூறுவார்களே என படுத்து தூங்கிவிட்டேன்.

ஒரு பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இரண்டு ரயில், 4 பஸ், 10 சுமோ எல்லாத்தையும் வெடிக்க வைத்து ஹாலிவுட் பாணியில் படம் எடுக்கலாம் என்றால், ஷங்கர் பாணி என்பார்களே என நான் வெடித்து பேப்பரை கசக்கிவிட்டேன்.

கிராமம், மதுரை சார்ந்த படம், தாதா கதைகள் எழுதலாம் என்றால், 'பருத்தி வீரன்', 'ஆடுகளம்', 'ஜிகிர்தண்டா' போன்ற படங்கள் இயக்குநரை ரொம்ப பாதித்திருக்கிறது போல என்பார்களே என்ற நினைப்புடன் உட்கார்ந்துவிட்டேன்.

இப்படி ஒவ்வொரு படத்துக்குமே நொட்டைகளை நோகும்படி கூறினால், நான் எந்த மாதிரி கதை எழுதுவது என்று யோசித்தேன். உடனே, ஏதாவது ஓர் ஆங்கில படத்தைச் சுட்டு, திரைக்கதையை மாற்றி தெரியாமல் பண்ணிவிடலாம் என்றால், தமிழ் ரசிகர்கள் இப்போது டீசரை வைத்தே காப்பி எனக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

இது எல்லாத்தையும் மீறி, நான் ஒரு கதையை வித்தியாசமான காதல், காமெடி, த்ரில், பேய், தாதா என எல்லாத்தையும் கலந்து ஒரு கதை எழுதி வைத்தேன். இப்போது நான் தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள் என எல்லாத்தையும் தேடி அலைய வேண்டும். எல்லாம் கிடைத்து படம் முடித்துவுடன்தான் பிரச்சினையே வெடிக்கும்.

சென்சார் அதிகாரிகள் 'U/A' என்பார்கள், தயாரிப்பாளர் 'U' தான் வேண்டும் என்பார். இந்தச் சண்டையைக் கூட காட்சிகளை கட் பண்ணி முடிப்பதற்குள், ஒருவர் இது என்னுடைய கதை என்று நீதிமன்றத்தை நாடுவார். நாம தனியாத்தானே கதை எழுதினோம், யாருடா இவன் என்று அந்தப் பிரச்சினையை முடிக்க வேண்டும்.

சென்சார் பிரச்சினை, நீதிமன்ற பிரச்சினை முடிந்து படத்தை வெளியிட நினைக்கும் போது திரையரங்குகள் கிடைக்காது. அதற்காக காத்திருக்க வேண்டும். இது எல்லாத்தையும் மீறி கிடைக்கும் திரையரங்குகளில் வெளியிட்டு விமர்சனத்துக்காக உட்கார்ந்திருப்பேன். அப்போது இந்தக் காட்சி இந்தப் படத்தோட சாயல், அந்தக் காட்சி அந்தப் படத்தோட சாயல் என்று கழுவியூற்றுவதைப் பார்க்க வேண்டும்.

இப்போது கதையை எழுதி முடித்துவிட்டேன். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் என் கண் முன் தோன்றியது. உடனே எழுதிய கதையை அப்படியே வைத்துவிட்டு, நன்றாக சாப்பிட்டு விட்டு இக்கடித்தை எழுதினேன்.

நான் எழுதிய கதையை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எடுக்க முடியுமா? அதை வெளியிட முடியுமா?

என்ன பண்ணலாம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x