Last Updated : 16 May, 2015 07:01 PM

 

Published : 16 May 2015 07:01 PM
Last Updated : 16 May 2015 07:01 PM

ஸ்மார்ட் போன் ஆர்வம், அடிமையாக்குகிறதா?

ஸ்மார்ட் போன்கள் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் நாம் அதை எப்படிப் பயன்படுத்துகின்றோம்?

செல்பேசியில் அலைவரிசை சரியாகக் கிடைக்காமல் போனாலோ, பேட்டரி தீர்ந்து விட்டாலோ, செல்பேசியைக் காணவில்லை என்றாலோ மிகவும் அதிகமாகப் பதட்டப்படுகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு 'நோமோபோபியா' இருக்கிறது என்பது நிச்சயம். செல்பேசி இல்லையென்றால் தேவைக்கதிகமாக பயப்படுவது ''நோ மொபைல் போன் போபியா'' என்று அமெரிக்காவில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் 2019-ல் 651 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் புழக்கத்துக்கு வந்துவிடும் என்று 'சிஸ்கோ' என்னும் தொழில்நுட்ப நிறுவனம் கணித்திருக்கிறது. டிஜிட்டல் உலகத்தில் தொழில்நுட்ப வசதிகளோடு பிறக்கும் குழந்தைகள் மற்றும் அவை வளரும்போது ஏற்படும் விளைவுகளுக்கான சாத்தியக்கூறுகள் நம்மை அதிகம் பயமுறுத்துகின்றன.

2011ல் யுனிசெஃப் எடுத்த கணக்கீட்டின்படி இந்தியாவில் 243 மில்லியன் மக்கள் பதின்ம வயதினர். இணைய வழங்குநர்களால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு ஏற்ப இவர்களில் பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் செல்பேசியை பயன்படுத்துபவர்களின் சராசரி வயது ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே செல்கிறது.

வீட்டிணைப்பு தொலைபேசிகள் எல்லாம் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்க, தவழும் குழந்தைகளும் பேசக்கூட ஆரம்பித்திருக்காத குழந்தைகளும் தங்களின் பெற்றோரின் செல்பேசிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டு விட்டன.

"இணையம் சீரான முறையில் பரவலாக்கப்படாவிட்டாலும், ஸ்மார்ட் போன் போன்ற கையடக்கச் சாதனங்கள் மீதான மோகம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. 'உள்ளங்கையில் உலகம்' என்கிற விஷயம், 'நாள் முழுவதும் இணையம்' என்னும் பாங்குக்கும், தவறான வழிகாட்டுதல்களுக்கும் முதன்மைக் காரணியாக இருக்கிறது", என்கின்றனர் நிபுணர்கள்.

கையடக்கத் தொலைத்தொடர்பு சாதனங்களின் அதிக அளவிலான பயன்பாடு ஒரு கட்டத்தில் சுய ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்துவிடுகிறது. "நான், எனது பொருள் அவ்வளவுதான் வேறு எதுவும், யாரும் இல்லை!" என்ற நிலையை ஏற்படுத்திவிடுகிறது என்கிறார் பிரபல மனோதத்துவ நிபுணர் கோபாலகிருஷ்ணன்.

பெற்றோர்கள் எவ்வளவுதான் அதிகக் காசைப் போட்டு, தொலைத்தொடர்பு கருவிகளை வாங்கிக்கொடுத்தாலும் ஆறு மாதங்களுக்குள்ளாகவே அவை பழையதாகி விடுகின்றன. திரும்பவும் புதிதாக இன்னும் அதிக வசதிகளோடு கூடிய கருவிகள் வேண்டும் என்று மகன்களும் மகள்களும் அடம்பிடிக்கின்றனர்.

தனக்கு விருப்பப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் கிடைக்காவிட்டால் தற்கொலை வரை போகும் சிறார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இரண்டாம் நிலை மாநகரங்களான திருச்சியில் கூட இது சர்வ சாதாரணம் என்கிறார், மனநல மைய ஆலோசகர் சரிதா.

"சிறுவன் ஒருவன், தான் கேட்ட செல்பேசியை பெற்றோர் வாங்கித் தரவில்லை என்பதற்காகவே தற்கொலை முயற்சியில் இறங்கியிருக்கிறான்" எனவும் கூறுகிறார். போன் இல்லையென்று தற்கொலை செய்ய முயற்சித்த சிறுவனுக்கு அடிப்படை வசதிகள் கொண்ட போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தனர் பெற்றோர். அடுத்த ஒரு மாதத்திலேயே அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்தான் வேண்டும் என்று அழிச்சாட்டியம் செய்திருக்கிறான். பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவு, பூச்சி மருந்து சாப்பிட்டு மீண்டும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான்.

இப்போது அச்சிறுவன் உளவியல் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தாலும் பெரும்பாலான விடலைகளின் இன்றைய நிலைமை இதுதான்.

தங்கள் நண்பர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக குடும்பச் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் பல்லாயிரங்கள் மதிப்புள்ள போன்கள் வேண்டுமென்று பெற்றோர்கள் மீது கோபப்படுகிறார்கள் இன்றைய பதின்ம வயதினர். மெய்நிகர் உலகில் உபயோகமில்லாமல் கழிகின்ற பொழுதுகள் அவர்களுக்கு தன்னிறைவைத் தருவதாக அவர்களாகவே நினைத்துக் கொள்கின்றனர்.

பள்ளி, கல்லூரி தொடர்பான வேலைகளுக்காக இணையத்தின் உள்நுழையும் பலர், சமூக ஊடகங்களில் வெறுமனே நேரத்தைச் செலவிடவே கழிக்கின்ற நிலைமை மாற வேண்டும். வாழ்வின் முக்கிய காலகட்டங்கள் அவர்கள் அறியாமலே வீணடிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.


தமிழில் க.சே. ரமணி பிரபா தேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x